Site icon வே. மதிமாறன்

ஒத்தக்கல்லுக்கு பறக்கும் ஆயிரம் காக்காக்களின் கூட்டம்

Karunanidhi

 

தமிழக அரசு, தமிழ்சினிமாவிற்கும் அதன் நடிகர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறது.

அபராதம் விதிக்க வேண்டிய படங்களுக்குப் பரிசும், தண்டனை தர வேண்டிய நடிகர்களுக்கு விருதும் தந்து, அவர்களை பெருமைப் படுத்துவதன் மூலமாக தன்னை  மீண்டும் சிறுமைபடுத்திக் கொண்டது தமிழ அரசு.

கோழைகளும், சந்தர்ப்பவாதிகளும், சமூகவிரோதிகளுமாக நிரம்பியிருக்கிற இந்த தமிழ்சினிமாவின் காக்கா கூட்டம், மீண்டும் கலைஞரை ‘காக்கா’ பிடித்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் காக்காகளில் முதன்மை காக்காவான ரஜினிகாந்த் என்கிற கழிசடை காக்கா இந்த நிகழ்ச்சியில் பேசும்போது;

“சேது சமுத்திர திட்டம் பத்தி ரொம்ப சீரியசா இருக்காங்க. அதைப் பத்தி பல விஷயம் சொல்றாங்க. இவ்ளோ ஆழம், அகலம், லாபம், நஷ்டம்னு சொல்றாங்க. சரியா, தப்பான்னு தெரியாது. ஆனா, அதுல ஒரு சென்சிட்டி£வன விஷயத்துக்கு எப்படியோ உயிர் வந்து, உருவெடுத்து பெரிய பூதகரமா வளர்ந்திருக்கு. அதை ஊதி, நெருப்பாக்கி, தீயாக்கி என்னென்னவோ செய்ய, சில வேலை நடக்கு. நமக்கு காரியம் நடக்கணும். தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன் ” இப்படி தமிழ்நாட்டு மேல நிரம்ப அக்கறை கொண்ட நபர் போல பேசிக் கொண்டு வந்து, கலைஞர் பெருமையை எல்லாம் குறிப்பிட்டு, பின்னாடி மெல்ல ஒரு ஊசி ஏத்தியிருக்கு இந்த காரிய பைத்தியம்.

இந்த வரியை மீண்டும் ஒரு முறை உன்னிபா படிச்சு பாருங்க: “தென்னிந்திய அரசியல் தலைவர் கலைஞர். அவருக்கு வட இந்தியத் தலைவர்கள் நண்பர்களா இருக்காங்க. பெரியவங்க உக்காந்து பேசி முடிவெடுத்தா, அது நல்ல முடிவா இருக்கும்னு நம்பறேன்” இந்த வரிதான் அந்த ஊசி. (‘சோ’ வோட ஆலோசனை போலும்)

“சேது பாலம் விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. அந்த மண்திட்டை பெயர்த்து தகர்த்துக்கொண்டுதான் திட்டம் நிறைவேறும்” என்று தெளிவாக அறிவித்திருக்கிறார், முதல்வர்.

அதன் பிறகும் அவரை வட இந்திய தலைவர்களோடு உட்கார்ந்து பேசச் சொல்கிறது ரஜினி.

வட இந்திய தலைவர்களில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் காங்கிரஸ்காரர்களோ, லாலுவோ, முலாயம்சிங்கோ அல்ல.
அப்படியானால் யாரோடு உட்கார்நது பேசுவது?

அத்வானி, வாஜ்பாய், வேதாந்தி இந்த மேதைகளோடு பேசச் சொல்லுகிறது, அந்த மேதை. என்ன கொழுப்பு பாத்தீங்களா?

‘வேதாந்தி’ என்கிறவன் “கருணாநிதியின் தலையை கொண்டு வா” என்று சொன்னதைக் கண்டித்து, எந்த கருத்தையும் சொல்லாத இந்த காக்கா, பெரிய மாமேதை மாதிரி, முதல்வருக்கு அறிவுரை சொல்லுது. எல்லாம் நம்ம கொடுக்கிற இடம்தான்.

“வேலியில போற ஒனாணை வேட்டியில எடுத்து உட்டுகிட்டு- –& –குத்துது, கொடையுதுன்னு சொல்லறதுல என்ன பிரயோஜனம்?” அப்பிடின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் போலும்?

“தலையை வெட்டிக்கிட்டு வா” என்று சொன்ன வேதாந்தியை கண்டித்து, கமல், ரஜினின்னு சினமாகாரனுங்க யாரும் கண்டிக்கல என்பதுகூட பெரிய விஷயமில்லை. பெரியாரா நடிச்சாரே, புரட்சி தமிழன் சத்தியராஜ், அவருகூட வாயே திறக்கல.

இவ்வளவு சந்தர்பவாதிகள் நிறைந்திருக்கிற இந்த சினிமாவில், வேதாந்தியை துணிச்சலுடன் கடுமையாக கண்டித்த – கவிஞர் வைரமுத்துவிற்கும், கவிஞர் அறிவுமதிக்கும், இயக்குநர் சீமானுக்கும் நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இயக்குநர் சீமானை பற்றி சொல்ல வேண்டும்.
தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களை ஒளித்து வைத்துக் கொண்டு, தனது சந்தர்பவாதத்தை பகிரங்கபடுத்திக் கொள்கிற தன்மை இப்போது பரவலாக எல்லா மட்டங்களிலும் பரவி இருக்கிறது. அதுவும் சினிமாவில்  சொல்லவே வேண்டாம்.

அப்படிப்பட்ட சினிமாத்துறையில் முன்னணி இயக்குநராக இருக்கிற, – மக்களிடம் பிரபலமான ஒருவர் –& பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மத மறுப்பு, இடஒதுக்கீடு ஆதரவு போன்ற பெரியார் கொள்கைகளை மிக துணிச்சலோடு பேசுவது சாதாரணமான விஷயமல்ல. அதற்கு ஒரு தில்லு வேணும். அந்த தில்லோடு திறமையாக பேசுகிறார் சீமான்.

பெரியாரின் போர்வாளாக இருந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மிக ஆவேசமாக, கோபம் கொப்பளிக்க பேசக் கூடியவர் என்று  படித்திருக்கிறேன். அவர்  எப்படி எல்லாம் பேசியிருப்பார் என்று நான்  உருவாக படித்திருந்தேன்.

13.10.2007 அன்று சென்னையில் சுபவீ  நடத்திய ‘மணல் திட்டும் மதவெறியும்’ என்ற பொதுக்கூட்டத்தில் சீமானின் பேச்சை முதல் முறையாக கேட்டேன். பட்டுக்கோட்டை அழகிரி பற்றிய என்னுடைய உருவகத்துக்கு ஒரு உருவமாக இருந்தது சீமானின் பேச்சு.

திரையுலகில் இருந்து நமக்கு மீண்டும் ஒரு எம்.ஆர்.ராதா கிடைத்திருக்கிறார். வாழ்த்துகள் சீமான்.

Exit mobile version