Site icon வே. மதிமாறன்

‘பிராமின்ஸ் ஒன்லி’

pod_ramya.jpg

 

உள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள்
தொடர்ச்சி –2

 -வே. மதிமாறன்

  ‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.

       

குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.

மாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.

ஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா,  சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.

(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)

முட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.

விதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது. ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு  மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.

பார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட  பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டிட்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.
அப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா?

தன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது  கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.
ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும்  ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.

ஆனால் இது போன்று  எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.

அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?

இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

-தொடரும்
        

Exit mobile version