‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 22
ஆறாவது அத்தியாயம்
பெண் கல்வி, பெண் உரிமை, ஜாதிய ஒற்றுமை (ஜாதி ஒழிப்பல்ல) பற்றி தீவிரமாக கவிதைகளிலும், கட்டுரைகளிலும் எழுதித் தள்ளிய சுப்பிரமணிய பாரதி, படித்த பெண்கள் , இந்து மதத்தைத் தவிர்த்து, கிறித்துவ மதத்தில் நாட்டம் கொள்ளும்போது அல்லது கிருஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது,
கிறித்துவ பள்ளிகளில் பாதிரிகள் கிருஸ்துவைப் பற்றி போதிக்கும்போதும், ஜாதிய ஏற்றத் தாழ்வுகளுக்குப் பார்ப்பனர்கள்தான் காரணம் என்று சொல்லும்போதும்,
இந்தப் பெண்ணுரிமை சிந்தனையாளர் , ஜாதிய ஒற்றுமையாளர் – ஒரு வைதீகப் பார்ப்பனருக்குரிய வெறியோடு பாய்ந்து கிழிக்கிறார் ,
‘நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே மஹான்களைப் பற்றி “மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாகக் கிறிஸ்துவப் பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை.
……
நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்துவப் பாடசாலை உபாத்தியருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸபகவானைப்பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி “நோக்கி உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸருக்குக் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்கள் எல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார்.
அவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹானிகளென்று கருதும் ஸெயின்ட்பால் முதலிய நூற்றுக் கணக்கான மனிதர்களும் அதே மாதிரிதான் என்பதை அந்த உபாத்தியாயர் மறந்து விட்டார். இப்படி பட்ட உபாத்தியாயர் கீழ் நமது குழந்தைகளிருக்குமானால், எத்தனை தீமை உண்டாக்க மாட்டது ? உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நமது இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டுவிடுவோமேயானல் , நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்.
கிருஸ்துவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி சிவாஜியைக் கொலையாளியென்றும், வியாசரை அறிவிலியென்றும், ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ்விளைஞர்களைக கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திர துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாக்கி தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையாற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்கம் முலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள். கிருஸ்துமார்க்கத்திலே நாம் அவனாவஸ்யமான விரோதம் கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம்
ஆரியத தன்மையைப் பெரும்பாலுமிழந்து அஞ்ஞானம், மூட நம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்த்திக் கிடக்ககும் நம்மவர், கிருஸ்துவப் பாதரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரஹித்துக் கொள்கிறார்கள்.
அறியாமை மிகுந்த அன்னியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரங்கைளக் கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும் நவீன அறிவும் கலந்து மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மயான சரித்திரங்களெழுந்தத் தலைப்பட வேண்டும்.
அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். பொதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சைப்பன் காலேஜ் போன்ற சுதேசிய காலேஜிகளையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி பாதரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக்க வேண்டும்.
– தொடரும்

