Site icon வே. மதிமாறன்

டாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது

ambed
டாக்டர்அம்பேத்கர் T shirt அணிவோம் அல்லது ‘ஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்! -2
டாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3

டாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4

தொடர் – 5

“ஈ.வெ.ராமசாமியின் ஆட்கள் இந்துக் கடவுள்களை மிக கேவலமாக பேசுகிறார்கள். இந்த ஈவெராவிற்கும், அவனோட ஆட்களுக்கும் கொஞ்சம் கூட நாகரிகமே கிடையாது. இந்து கடவுள்களை இவ்வளவு ஆபாசமாக பேசுகிறார்களே. இஸ்லாமிய, கிருஸ்துவ கடவுள்களை இப்படி பேச முடியுமா?” என்று தங்களின் `சர்வவல்லமை` பொருந்திய பேசும் சக்தியற்ற கடவுள்களுக்காக அடியாள் வேலை பார்க்கிறார்கள், பக்தர்கள். பார்ப்பனர்கள்.

தந்தை பெரியாரும் அவர் இயக்கத்தை சேர்ந்தவர்களும், கடவுள்களை பற்றி அவர்களாக கற்பனை செய்து பேசவில்லை. இவர்கள் எழுதிய வைத்திருக்கிற ஆபாச கதைகளில் இருந்துதான் பேசியிருக்கிறார்கள். தந்தை பெரியார் ஆதாரம் இல்லாமல் எதையும் விமர்சித்ததில்லை.

பெரியார் கடவுள்களை செருப்பால் அடித்தது இருக்கட்டும், பார்ப்பனர்கள் தங்கள் கடவுள்களை என்ன பாடுபடித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

தாங்கள் வழிபடுகிற கடவுள்களால் தங்களுக்கு லாபம் இல்லாமல் போனால், அதுவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடிய கடவுள்களைப் பற்றி மோசமான கதைகளைப் பரப்பி அந்தக் கடவுள்களை எப்படி ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்துக்கிறார்:

“ஒரு காலத்தில் பிரமாவே சிவனையும் விஷ்ணுவையும் விட மிக உயர்ந்த கடவுளாக இருந்ததாகத் தோன்றுகிறது.
………………………………….. பிரமா மிக உயர்ந்த கடவுளாகயிருந்ததால் அவர்தான் ருத்ரனுக்குக்கும் நாராயணனுக்கும் இடையேயும், கிருஷ்ணனுக்கும் சிவனுக்கும் இடையிலும் தாவக்களில் நடுவராயிருந்தார்.”

“பின்பு ஒரு கட்டத்தில் பிரமாவுக்குச் சிவனுடனும் விஷ்ணுவுடனும் மோதல் ஏற்பட்டு, மிக உயர்ந்த கடவுள் என்ற நிலையை அவர்களிடம் இழந்து விடடார் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
…………………………………………………..
பிரமா முக்தியளிக்கும் சக்தியையும் இழந்தார். சிவன்தான் முக்தியளிக்கும் கடவுள் என்று ஆனார். …………………………………. அவர் சிவனுக்குச் சேவகனாகி, சிவனின் தேர்ப்பாகனின் வேலையைச் செய்பவர் ஆகிவிட்டார்.
இறுதியாக பிரமா தமது மகளுடன் சோரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, வழிபாட்டுக்கே தகுதி இல்லாதவர் ஆக்கப்பட்டார்.”

“பிரமா வெளியேற்றப்பட்டபின் சிவனும் விஷ்ணுவும் மட்டும் களத்தில் இருந்தார்கள். இந்த இருவரும் ஒருபோதும் சமாதானமாயிருக்கவில்லை. இருவருக்குமிடையே தொடர்ந்து போட்டி இருந்து வந்தது. சிவனையும் விஷ்ணுவையும் வணங்கும் பிராமணர்களின் பிரசாரங்களும் எதிர்ப் பிரசாங்களும் புராணங்களில் நிறைந்துள்ளன.”

“இந்துக் கடவுள்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுப் போராடிக் கொண்டிருப்பதும், சாதாரண மனிதர்கள் வெட்கக் கேடானதாகவும் அவமானகரமானதாகவும் கருதக்கூடிய விஷயங்களை ஒரு கடவுள் மேற் மற்றோரு கடவுள் சுமத்துவது ஆகும்”
என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

தங்கள் கடவுள்களை இப்படி பந்தாடியப் பார்ப்பனர்கள், தங்கள் இஷ்டம்போல் மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள். வர்ணாசிரம தர்மத்தில் மட்டும் எந்த மாற்றமும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதாவது `தலையில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன்` என்பதை, `தலையில் பிறந்தவன் சூத்திரன், காலில் பிறந்தவன் பிராமணன்` என்று எங்குமே மாற்றவில்லை.

மனு காலத்தில்தான் வர்ணவேறுபாடுகள் இருந்தது. வேத காலத்தில் இல்லை என்று பாரதி போன்ற பார்ப்பனர்கள் சொல்வது, பொய் என்று ஆதாரத்தோடு நிரூபிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
வர்ண வேறுபாடுகள் உண்டான கதைகள் வேதத்தில் வேறு மாதிரியும், அதற்கு பின் வந்த தத்துவங்களில் ஒரு மாதிரியும் மாறி மாறி இருக்கிறது. ஆனால் அதில் மாறதது அதன் படி நிலைதான். பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது, கதைகள் மாறினாலும் காட்சி மாறவில்லை என்று இந்து தத்துவங்களின் தோலை உரிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“வருண தர்மம், ஆசிரம தர்மம் இவ்விரண்டும் இணைந்து வருணாசிரம தர்மம் எனப்படுகிறது.
……………………………………
முதலில் வருண தர்மத்தை நோக்குவோம். முதலாவதாக, வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றைத் தொகுத்துரைத்தல் நல்லது. ருக் வேதத்தின் 10 வது மண்டலம் 90 வது பாடலில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரங் கண்களும், ஆயிரங்கால்களும் உள்ளவன். அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
(ஆயிரம் தலைகள் இருந்தால் இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரும் கால்கள் அல்லவா இருக்க வேண்டும். ஆரம்பமே பொய். -மதிமாறன்)
…………………………………………….

பிராமணன் அவனது வாயானான். இராஜன்யன் அவனுடைய கைகளானன். அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று. அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.”

“தைத்திரிய பிராமணம் சொல்கிறது, ‘பிராமணசாதியார் தேவர்களிலிருந்து தோன்றியவர்கள்; சூத்திரர்கள் அசுரர்களிடமிருந்து பிறந்தவர்கள்”

மகாபாரத்தில் புரூரவசுக்கும், மத்ரீஸ்வனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை தருகிறார் அம்பேத்கர்:

“புரூரவசு சொன்னான்: பிராமணனும், மற்ற மூவகை வருணத்தாரும் எப்போது படைக்கப்பட்டனர் என்பதை எனக்கு விளக்கியுரைக்க வேண்டும். ………………..
இதற்கு மத்ரீஸ்வன் பதிலுரைத்ததாவது, பிரமாவின் வாயிலிருந்து பிராமணன் படைக்கப்பட்டான்; அவனுடைய கைகளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், இந்த மூவகை வருணத்தாருக்கும் தொண்டு புரிவதற்காக பிரமாவின் கால்களிலிருந்து சூத்திரனும் படைக்கப்பட்டனர். பிராமணன் பிறந்தபோதே உலக உயிர்கள் அனைத்திற்கும் தலைமை தாங்குபவனாகவும், தர்ம நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பவனாகவும் ஆனான்.”
விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பகவத் புராணம், வாயு புராணம், மனுஸ்மிருதி இவைகளிலும் வருண தர்மத்தை நியாயப்படுத்தும் கதைகளில் உள்ள முரண்பாடுகளை பக்கம் பக்கமாக பட்டியிலிட்டு, இப்படி முடிக்கிறார் டாக்டர் அம்பேத்கர்:

“இந்த விளக்கங்கள் பிறவி மூளைக் கோளாறு உடையவர்களின் உளறல்கள் போலுள்ளன. வருண முறைக்கு ஆதரவான கொள்கை, கோட்பாடுகளை உருவாக்குவதில் பிராமணர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளனர் என்பதையே இவை காட்டுக்கின்றன.”

இதுபோக கடவுள்களிலேயே அதி புத்திசாலியான கிருஷணன் பகவத்கீதையில் சதுர் வருணத்தைப் பற்றி எவ்வளவு முட்டாள்த்தனமாக உளறியிருக்கிறான் என்று அம்பலப்பத்துகிறார் அம்பேத்கர். கோபியர் பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த கிருஷ்ணன், இங்கே டாக்டர் அம்பேத்கரின் வாதத் திறமையின்முன் அம்மணமாக நிற்கிறான்.

“இந்துக்களின் கடவுளான கிருஷ்ணன் தனது கீதையில் தானே சதுர் வருண முறைய ஏற்படுதியதாகவும், மனிதருடைய குண வேறுபாடிற்கேற்ப வருண வேறுபாடு அமைவதாகவும் ஒரு கோட்பாட்டை விளக்கியுரைக்கின்றார். இந்தக் குண வேறுபாட்டுக் கோட்பாடு கபிலரின் சாங்கியத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ……………………………………………
சாங்கிய தத்துதவம் ஒவ்வொரு சடப்பொருளும் தனக்கென உரிய வகையில் ராஜச, தாமச, சாத்வீகம் என்ற மூவகை குணங்களை பெற்றிருப்பதாக கூறுகிறது என்பதில் ஐயமில்லை. பொருள் எதுவும் சடமாக இருப்பதில்லை. மூன்று குணங்களும் ஒரே அளவான ஆற்றலோடு விளங்கும் போது நிலையற்ற சமநிலையில் இயங்குகிறது.

 ஒரு குணம் மேலோங்கி நிற்கும்போது சமநிலை பாதிக்கப்பட்டு சடப்பொருள் இயக்கம் பெறுகின்றது. குணதர்மம் பற்றிய சாங்கிய கோட்பாட்டைப் பொருத்திக் காட்டி வருண முறைக்கு அறிவியல் பூர்வமானதொரு விளக்கம் தருவதில் கிருஷ்ணன் மிகத் தேர்ந்தவராக தோன்றுகிறார்.

ஆனால் அவ்வாறு கூறுவதில் அவர் தன்னையே முட்டாளாக்கிக் கொண்டுள்ளார். குணங்கள் மூன்றாகவும், வருணங்கள் நான்காகவும் இருப்பதை உணராதவராக உள்ள கிருஷணன், தான் என்னதான் சிறந்த கூர்ந்த மதியுடையவர் என்று கூறிக் கொண்ட போதிலும் மூன்று குணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு வருணங்களுக்கான ஒரு கோட்பாட்டை நிறுவ முடியாது என்பதை உணராதவராகவே இருப்பதைக் காணலாம்.

அறிவார்ந்த விளக்கம் போலத் தோன்றுவதான ஒரு விளக்கம் இங்கு அர்த்தமற்ற, நகைப்பிற்கிடமான விளக்கமாகி விடுவதைக் காணலாம். புதிதொரு புதிரையே உருவாக்கின்றது. சதுர்வருணக் கோட்பாட்டை நியாயப் படுத்துவதற்குப் பிராமணர்கள் இவ்வளவு கடுமையான போரிடுவதேன்?”

தனது பேராற்றலால் தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களை ‘சூத்திரர்கள்’ என்று கேவலப்படுத்திய தந்திரமிகுந்த பார்ப்பன இந்து தத்துவங்களோடு சண்டையிட்டு,

அவைகளை அம்பலப்படுத்தி, அவர்களின் மானத்தை காப்பற்றிய டாக்டர் அம்பேத்கரைத்தான் அவமானப்படுத்துகிறார்கள், சூத்திரர்கள்.

-தொடரும்

தலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்காளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன்? டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும்? குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும்? விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்………

Exit mobile version