2008 ஆகஸ்ட் மாதம் எடுத்தப் படம்
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகி, புதுச்சேரி சிறையில் இருக்கிறார். கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாலேயே, சீமானைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வு நம்மை நான்கு நாட்களாக தொடர்ந்து, சூழன்று கொண்டே இருந்தது, அதன் காரணமாக அவரை நண்பர்களுடன், நேற்று (5.2.2009) சிறை சென்று சந்தித்தேன்.
புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு அய்யப்பன், எங்களை பேருந்து நிலையத்திலிருந்து அவருடைய காரில், வெகு தொலைவில் போக்குவரத்து வசதிகளே இல்லாத, பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று, சிறப்புப் பிரிவில் பார்ப்பதற்கு அனுமதியும் வாங்கித் தந்து, மீண்டும் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டார்.
கௌத்தூர் மணி – சீமான் கைதை கண்டித்து, பல சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, தினமும் சீமானுக்கு இவர் வீட்டிலிருந்து உணவு கொண்டுபோய் தருவது. சீமானைப் பார்க்க வருபவர்களை அழைத்துச் செல்வது, இதற்கிடையில் போலீஸ் தொல்லையை எதிர்கொள்வது என்று பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சூழலிலும் எங்களையும் அழைத்துச் சென்றார் தோழர் லோகு அய்யப்பன். அவருக்கு என்னுடைய நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறையில் இருக்கும் சீமானுக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் நான் சென்றேன். ஆனால், சீமான் எனக்கு தைரியமும், ஆறுதலும் சொல்லியனுப்பினார்.
போன கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்ய போலீஸ், இந்தக் கூட்டத்தின் மேடைக்கு பின்புறம் வந்து காத்திருக்கிறது என்று தெரிந்தும், துளியும் அச்சமில்லாமல், துணிச்சலோடு இந்தக் கூட்டத்திலும் ‘தில்’ லாக பேசிய, என் இனிய நண்பன் சீமான், சிறையிலும் அதே துணிச்சலோடுதான் இருக்கிறார்.
மேடையில் முழுங்குகிற அதே தைரியத்தோடு, அதே கோபத்தோடு பொங்கி வழிந்தார் சீமான்.
தேர்தலுக்காக, ஈழப் பிரச்சினையில் இருந்தும் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவதிலிருந்தும், தங்களை சுருக்கிக் கொண்ட அவருக்கு ‘தோழமை’ யாக இருந்த தலைவர்களின் மீது கடும் அதிருப்தியை, கோபத்தை, வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
‘காங்கிரசை புறக்கணிக்க வேண்டும்’ என்று பேசியத் தலைவர்கள், தேர்தல் நேரத்தில் மீண்டும் காங்கிரசுடான கூட்டணிக்கு தங்களை தயார் செய்து கொள்வதை குறிப்பிட்டு,
“நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் பேசாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால், அவர்கள் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சேர முயற்சிப்பது, மிகுந்த வருத்தமளிக்கிறது” என்றார்.
“அவர்கள் தேர்தல் கூட்டணிக்காகத்தான், உங்கள் கைதை கண்டிக்கவில்லை. உங்கள் கைதை கண்டித்து அறிக்கை தந்தால், தமிழக முதல்வரின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். என்பதால்தான் அதை செய்யவில்லை” என்று இரண்டுக்கும் உள்ள தொடர்பை நான் சொன்னேன்.
“கருத்து சுதந்திரத்திற்கு எதிரான உங்கள் கைது, தமிழகத்தில் பெரிய எழுச்சியை உண்டாக்கியிருக்க வேண்டும், ஆனால், அது திட்டமிட்டு சில தோழமை சக்திகளாலேயே முடக்கப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றுவிடுவீர்களோ என்ற எண்ணத்தில். அதனால்தான் திமுக கூட்டணிக்கு வெளியில் இருக்கிற, திமுகவை கடுமையாக விமர்சிக்கிற தீவிர விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கூட உங்கள் கைதை கண்டிக்கவில்லை” என்றும் சொன்னேன்.
“இவர்கள் என்னை ஆதரிப்பார்கள் என்பதற்காக நான் பேசவில்லை. என் இனம் அழியும் போது அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது. யார் என்னை இருட்டடிப்பு செய்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.” என்றார் சீமான்.
அவர் குரலில் அழுத்தமான உறுதி தெரிந்தது.
‘சீமானை பார்க்க சிறைக்குப் போகிறேன்’ என்று நேற்றைக்கு முதல் நாள் தொலைபேசியில் மக்கள் கலை இலக்கிய கழக பொதுச் செயலாளர் தோழர் மருதையனிடம் சொன்னேன். அதற்கு அவர், “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து சீமானை விரைவில் சட்டரீதியாக விடுவிக்க வேண்டும். அதற்காக சுப்ரீம் கோர்ட வரை சென்று உடனடியாக அதை செய்யவேண்டும். அதை மற்றவர்கள் செய்தால் சரி. இல்லையென்றால் மக்கள் கலை இலக்கிய கழகம் அதை செய்வதற்கு தயாராக உள்ளது.” என்று சொன்னார். அதையும் சீமானோடு பகிர்ந்து கொண்டேன்.
ஆம் தோழர்களே, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதை கண்டித்து, இந்தச் சட்டத்தைக் கண்டித்து ஒரு வலுவான கூட்டமைப்பை, கருத்து வேறுபாடுகளை தள்ளி, பல இயக்கங்களை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும். இது சீமானுக்காக மட்டும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. ஏனென்றால், சீமான் கைது முடிவல்ல, துவக்கம். அடுத்து அந்த வரிசையில் தோழர் கொளத்தூர் மணி போகலாம். இன்னும் அந்தப் பட்டியலில் பல புது பெயர்கள் சேரலாம்.
ஆகவே, தோழர்களே கருத்துரிமைக்கான இந்தச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், போராடுவதும் நமது கடமை.
ஒன்றிணைவோம். போராடுவோம். வெல்வோம்.
