Site icon வே. மதிமாறன்

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?

-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி.

இந்த உணர்வு பார்ப்பன அல்லாத ‘முற்போக்கனவர்கள்’ மத்தியிலும் அதிகமாக இருக்கு. பார்ப்பனர்களை குறை சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதே நமது கருத்து. இந்த விசயத்துல இவுங்கள விடவும் ரஜினி ரசிகர்கள் முற்போக்கானவர்கள்தான்.

இந்த மையப்புள்ளியைப் பத்தி ஒரு உதாரணத்தின் மூலமாகவே பார்க்கலாம்.

சுஜாதா, மதன், ஞாநி இந்த மூம்மூர்த்திகளில் ஞாநிதான் ‘முற்போக்கானவர்’ என்கிற தோற்றம் இருக்கிறதல்லவா, அது மாயத் தோற்றம். உண்மையில் இந்த மூவரையும் இணைக்கிற மையப்புள்ளி ஒன்றல்ல, இரண்டு இருக்கிறது. 1. ஆனந்த விகடன் 2. கமல்ஹாசன்.

உலகத்தின் எந்த முற்போக்கு சக்திகளையும் கடுமையாக விமர்சிக்கிற இந்த மாமேதைகள் இந்த இரு புள்ளிகளிடம் மட்டும் சமரசம் அல்ல, சரணாகதியாய் இருக்கிறார்கள்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்தக் காலத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், ‘எழுத்தாளர்’ சுஜாதா ‘கமல்ஹாசனை போன்ற அழகான நடிகர்கள் பக்கத்தில் இப்படி அசிங்கமான நடிகர்’ என்று ரஜினியை குறிப்பிட்டு எழுதியதாக நண்பர் தீஸ்மாஸ் ஞாபகப்படுத்தினார்.

அதே போல் ஞாநியின் – ‘ரஜினி, டாக்டர். கிருஷ்ணசாமி, திருமாவளவன் எதிர்ப்பை’ கமல்ஹாசனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்த போதுதான் அவரை கண்டித்திருக்கிறார் ஞாநி. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் பெயரை தமிழில் வைக்க சொன்னபோதுதான் அவர் திருமாவளவனை கண்டித்திருக்கிறார்.

ஞாநிக்கு டாக்டர் அம்பேத்கர் என்று ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தது தெரியுமா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. காந்தியவாதியின் தொனியில் காந்தியை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி எதவாது குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஞாநியின் ‘குமுதம் எதிர்ப்பை’ ஆனந்த விகடனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த விடகன் வேறு, இந்த மூவரும் வேறு வேறு வேறு அல்ல. ஆனந்த விகடனை கழித்து விட்டு இந்த மூவரையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இந்த மூவரின் உருவம் நம் கண்களுக்கு புலப்படாமலே போகும்.

‘’அகம் வேறு, பிரமம் வேறு அல்ல. அகம்தான் பிரமம், பிரமம்தான் அகம்.’ ’கமல்-ஆனந்த விகடன்-சுஜாதா-மதன்-ஞானி ’ இந்த அய்ந்து புள்ளிகளையும் இணைத்தால்…..

பொதுவாக புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனதில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

சமூக விழப்புணர்வு மாத இதழ் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் நூலில் இருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 33 7384

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

Exit mobile version