
மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1
“பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? ”-நாயரின் வீச்சு-31917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆற்றிய சிறப்புரை.
பகுதி-4
என் பிறந்த இடமான கேரளத்தில் நானோர் சூத்திரன்தானே (நகைப்பு! வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்) இத்தகைய இந்துமத சாதி அக்கிரமங்களை, எந்தப் பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா? (வெட்கம்! வெட்கம்! என்ற முழக்கம்)
இந்த மூஞ்சிகளுக்குத்தான், தனி ஆடசி நடத்த, தன்னாட்சி அரசு வேண்டுமாம்! (வெட்கம்! வெட்கம்! என்ற ஆரவாரம்)
இன்னும் கேளுங்கள்! நசூத்ராயமதிம் தத்யா என்பது ஒரு சுலோகம்! அதன் பொருள் என்னவென்றால், சூத்திரன் படிக்கக் கூடாது.! என்பதாகும். அப்படியானால் நீ எப்படி படித்தாய்? என்று நீங்கள் கேட்பீர்களேயானால், சண்டாளப் பூனைக் கண்ணன்! செம்பட்ட மயிரன் ஆனே வெள்ளைக்காரனுடைய யூனியன் ஜாக் கொடி அல்லவா இப்பொழுது நாட்டில் பறக்கிறது! அதன் தயவால்தான் நான் படித்து முன்னேறினேன். (கைதட்டல்! ஆரவாரம்!)
அசல் ஆரிய இந்து தரும ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக்கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானல் ராம ராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்பூகன் கதிதான் எனக்கும், என் தலைவர் திரு.பிட்டி தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். (வெட்கம்! வெட்கம்! இந்து மதம் ஒழிக! என்ற ஆரவாரம்)
இவ்வளவுக்கு நீங்கள் எல்லோரும் மதிக்கும் என்னை, எங்கள் கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான் ‘ஏடா நாயரே’ எனறு சர்வ சாதாரணமாகக் கேவலமாக அழைக்கக் கூடிய, சாதிக் கர்வம் படைத்திருக்கிறான்!
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற சர் சங்கரன் நாயர், ஒரு சமயம் கேரளாவிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு நம்பூதிப் பார்ப்பான், சர் சங்கரன் நாயர் வீட்டு வாசலிலேயே வந்து நின்றபடி,
“எடா! சங்கரா! நீ உயர்நீதிமன்ற நீதிபதியாமேடா” என்று கேட்டானாம். “ஆமாம் சாமி எல்லாம் உங்கள் கடாட்சந்தான்!” எனறு கூறியவாறே, வெளியே ஓடோடியும் வந்து, நம்பூதிரிப் பார்ப்பானின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக், கை கட்டி வாய் பொத்தி நின்றாராம், அவர்.
கேரளாவில் மரியாதைகளும், அவமரியாதைகளும் எப்படிப் படாத பாடுபடுகின்றன. பார்த்தீர்களா? (வெட்கம்! வெட்கம்! என்ற பெருத்த ஆரவாரம்)
இந்து மதப் புராணக் கதைகளில், பார்ப்பானுக்கும், சூத்திரச்சிக்கும் பிறந்தவர்களெல்லாம் காலாகாலத்தில், பெரிய மனிதர்களாகியிருப்பாகக் கூறப்படுகின்றதே அல்லாமல் ஒரு சூத்திரனுக்கும், பாப்பாத்திக்கும் பிறந்த பெரிய மனிதனின் கதை எதாவது மருந்துக்காவது உண்டா?
ஏன் அப்படி? சூத்திரனுக்கும், பாப்பாத்திக்கும் புராணக் காலங்களில், காதலோ அல்லது திருட்டுக் காதலோ ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே! (சிரிப்பு! கைதட்டல்)
இந்து தரும ஆடசிகளெல்லாம், ஒருவாறு ஒழிந்து, முகம்மதியர், டச்சுக்காரர் – போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில்தான், நம்மவர்களில் ஒருசிலர் மட்டும் படிக்க முடிந்தது, சொத்துரிமையும் பெற முடிந்தது.
இப்பொழுது பார்த்தாலும், வெள்ளையனுக்கு அடுத்தபடி பெரிய பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்துள்ளனர். நம்மவர்களோ அடிமட்டத்தில் எடுபிடிகளாக இருந்து, வில்லைச் சேவகம் செய்து வருகிறார்கள். இந்நாட்டில், ஆரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள், காலணா கொடுத்துப், பூணூலை வாங்கி மாட்டிக் கொண்டு, இங்குள்ள திராவிடர்களையெல்லாம் ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்களாக இருந்து வருகின்றனர். (சிர்ப்பு! கைதட்டல்)
எல்லா வகுப்பு மக்களுக்கும் வாழ்க்கையில் சம வாய்ப்பும், சம வசதியும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு வற்புறுத்தப்பட்டு வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை, அரசின் அனைத்துத் துறைகளிலும், கையாள வேண்டும் என்பதைத்தான், நமது நீதிக்கட்சி, உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.
இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே, இங்கிலாந்திலும் கூட்டம் போட்டுப் பேசியும், எழுதியும் வருவதற்காகத்தான், நான் ஆண்டு தோறும் தவறாமல் இங்கிலாந்துக்குச் சென்று வருகிறேன்.
நான் இங்கிலாந்தில் வெள்யைர்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது. போலித் தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பார்ப்பனப் பெருந்தலைவர்களின் சிந்தாந்தம், வேதாந்தம் எல்லாம் எப்படிப்பட்டன என்பதை விளக்கிக் கூறினேன்.
அப்போது ஆங்கில நாட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்த லார்டுசிடன் ஹேம் என்பவர், குறுக்கிட்டு ஒரு கேள்வி கேட்டார்.
“இந்திய வைஸ்ராய் ஆலோசனை சபையில், கல்வித்துறை உறுப்பினராக இருக்கிறாரே, சர்.பி.என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார்தானே?” என்று கேட்டார்.
நான் உடனே, “பம்பாய்த் துறைமுகத்தில் நான் கப்பல் ஏறும்வரையில், சர்.பி.என். சர்மா அவர்கள் ஒரு பார்ப்பனராகத்தானே இருந்தார்” என்றேன். (சிரிப்பும் கைதட்டலும்)
நீங்கள் இப்பொழுது சிரிப்பது போன்றே, அன்றும் அந்தக் கேள்வியைக் கேட்ட பிரபுவும், பிறரும் கூட கொல்லென்று சிரித்துவிட்டனர்.
நான் மேலும் சொன்னேன். ஞாயிறு, மேற்கே தோன்றி, கிழக்கே மறைந்தாலும், மறையலாம்; ஆனால் எந்தப் பார்ப்பானும், பார்ப்பனரல்லாதவனாக மாறமாட்டான். பார்ப்பனரல்லாதவன் எவனும் பார்ப்பனனாக மாறவும் முடியாது. ஒருவன் இந்து மதத்தை விட்டுவிட்டு கிருத்துவனாகவோ அல்லது முகம்மதியானகவோ மாறலாம்; ஆனால் இந்து மதத்திற்குள்ளாகவே, ஒருவன் ஒரு சாதியை விட்டு விட்டு, வேறொர் சாதிக்குத் தாண்டவே முடியாது. இந்து தருமம், இப்படிப்பட்ட மாறுதலை ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.
‘பரதர்மோ பயாவஹ!’-அவனவன் சாதித் தொழிலையே அவனவன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மரண தண்டனை நரகம் போன்ற தண்டனைகள் தாம் கிடைக்கும் என்கிறது கீதை!
-தொடரும்
தொடர்புடைய கட்டுரைகள், பதில்கள்:
2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை
தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை
தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு
