Site icon வே. மதிமாறன்

விஜயகாந்த் ஆதரவு + வடிவேலு எதிர்ப்பு = திமுக?

விஜயகாந்த்திடம் சோறு மட்டுமல்ல கணிசமாகக் கவரும் பெற்றுக் கவர் ஸ்டோரி எழுதியவர்கள், தனக்குச் சல்லிக்காசுகூட தராத வடிவேலுவை வஞ்சம் தீர்க்கிறார்கள்.
வடிவேலோடு இப்போது இணைந்து நடிக்க முடியாதவர்களும் இணைந்து கொள்கிறார்கள்

எப்போதோ பேசிய வடிவேலுவை மட்டம் தட்டுகிறவர்கள், இறப்புக்கு முன்புவரை பிறப்பு சார்ந்தும் விஜயகாந்த்தை இழிவாகப் பேசிய சீமானை எதிர்க்காததற்குக் காரணம், சீமான் திமுக எதிர்ப்பாளர்.

2011 ல் வடிவேலு விஜயகாந்த்தை விமர்சித்தார் என்பதற்காக அல்ல, அவர் திமுகவை ஆதரித்தார் என்பதால்தான் இந்த வெறுப்பு.

சமீபத்தில் மாரி செல்வராஜின் மாமன்னனில் நடித்ததும் உதயநிதியோடு நெருக்கமாக இருப்பதும் ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பாளர்களும் வடிவேலுக்கு எதிராக ஒன்று சேர்ந்து உருட்டுகிறார்கள்.

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வடிவேலு முதல் ஆளாக வந்தது அவர்களுக்கு மீண்டும் எரிகிறது.

விஜயகாந்த்தோடு விரோதமில்லாத அஜித், விஜயகாந்த் மரணத்திற்குப் போகவில்லை.
அவரை அப்போது விமர்சிக்காதவர்கள் இப்போது கொண்டாடுகிறார்கள்.
காரணம் அவர் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கும் போகவில்லை.

என் அனுபவத்திலேயே நான் தீவிரமாக அம்பேத்கர் – பெரியார் கண்ணோட்டத்தில் கடவுள் மறுப்பு, இந்து மத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு பேசியபோது சந்தித்த எதிர்ப்பைவிடவும் தீவிர திமுக ஆதரவு நிலையில் சகல திமுக எதிர்ப்பாளர்களையும் அம்பலப்படுத்தியபோதுதான் கூடுதல் எதிர்ப்புகளையும் புறக்கணிப்பையும் சந்திக்கிறேன்.

2016 ல் விஜயகாந்த்தை முதல்வராகுவது என முழங்கிய மநகூ ஆதரவு தோழமைகள், ‘என்ன தோழர், போயும் போயும் கருணாநிதியை ஆதரிக்கிறீர்கள்?’ என்றார்கள்.

அதற்கு நான், ‘ஆமாம். நான் கருணாநிதியை ஆதரிக்கிறேன். நீங்களெல்லாம் காரல் மார்க்சையா ஆதரிக்கிறீர்கள்?’ என்றேன்.

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தை விமர்சித்ததற்கே தோழமையானவர்களே என்னை தலித் விரோதி, சந்தர்ப்பவாதி, திமுக சொம்பு என கோபப்பட்டார்கள்.

இப்போதும் திமுக எதிரிகளை விமர்சிக்கும் என் திமுக ஆதரவுதான் பலருக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
வடிவேலு போன்ற பிரமுகருக்கு சொல்லவும் வேண்டுமோ?

ஆனால் இவர்களுக்கு ஒன்று தெரியவில்லை. தோல்வி முகமாக இருந்த வடிவேலுக்கு உதயநிதியின் தோழமைதான் திரையில் மாபெரும் வெற்றியை தந்திருக்கிறது,

எப்படி திமுக எதிர்ப்பாளர்கள் தங்கள் அவதூறுகளால் ஒன்று சேர்ந்து திமுகவை ஆட்சியில் அமர வைத்தார்களோ, அதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வைத்தார்களோ அதுபோல்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக எதிர்ப்பாளர்கள் தங்களின் இழிவான அவதூறுகளால் அதே வேலையை சிறப்பாக செய்வார்கள்.

திராவிட இயக்கம் எதிர்ப்பில் வளர்ந்தது. வடிவேலுவையும் இன்னும் வளர்ப்பார்கள்.

வாழ்த்துகள் வசவாளர்களுக்கு-வே. மதிமாறன்.

Exit mobile version