Site icon வே. மதிமாறன்

‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

லீனா மணிமேகலையை லயோலா கல்லூரியின் ‘ஆண் நிர்வாகம்’ அவமானப்படுத்தியதை விடவும் இந்த ஆண் எழுத்தாளர்கள் அவமானப்படுத்துவது கூடுதலாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த கொலைகாரர்கள்,  முஸ்லிம் பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்வதை கண்டித்து கொதித்து எழுகிற இஸ்லாமியரை பார்த்து, “நீ எதுக்கு உன் வீட்டு பெண்களுக்கு பர்தா போட்டு அவமானப்படுத்துன, நீ செஞ்சது தப்புதானே?” என்று ‘நியாயம்’ பேசுகிற ஒரு அநியாக்காரனைபோல் இருக்கிறது, இந்த ‘எழுத்தாளர்’களின் சந்தர்ப்பவாதப் பேச்சு.

‘இந்திய கிராமங்களில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த பெண், பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியற்களால், பாலியல் வன்கொடுமைக்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்’, என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த அவலம் எதுவும் தன் எழுத்துகளில் பிரதிபலிக்காமல், இந்தப் பெண் கவிஞர்கள், ஏதோ ஒரு உன்னதமான உலகத்தில் வாழ்வதுபோல், கவிதை எழுதி ‘இலக்கியம் வளர்த்து’க் கொண்டிருந்தபோது, அதை கண்டிக்க வக்கற்று பாராட்டிக் கொண்டிருந்தவர்கள்தான் இந்த ‘பிரபலபோதை’ பிடித்த ஜொள்ளு எழுத்தாளர்கள்.

ஒரு எழுத்தாளர், பெண் என்பதற்காகவே நேரடியாக அவமானப்படுத்தப்படும்போது “பெண்கள் மீது நடந்த வன்கொடுமைகளை கண்டிக்காத நீங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மட்டும் கண்டிக்கிறீர்களே?” என்று கண்டிக்கிறார்கள்.
(என்னமோ இவுங்க மட்டும் அதை கண்டிச்சு கிழிச்சா மாதிரி)
இதுதான் சந்தர்ப்பவாதத்தின் உச்சம்.

1. லீனா மணிமேகலை சமூகத்தால் தடைசெய்யப்பட்ட உடையோடு கல்லூரிக்குள் நுழையவில்லை. வீட்டிலிருந்து வீதிகளின் வழியாக அதே உடையோடுதான் அவர் கல்லூரிக்குள் நுழைகிறார்.

2. இதே லயோலா கல்லூரிக்கு வருகிற வெளிநாட்டுப் பெண்கள் – டிரவுசரும், உள்ளாடைகள் இல்லாத அரை கை பனியனும் அணிந்து கல்லூரிக்குள் வருவதில்லையா? அப்படி வந்து  கல்லூரியின் தலைமை பொறுப்பாளர்களைப் பார்த்து உரையாடிவிட்டு செல்வது இல்லையா? அவர்களை மட்டும் எப்படி கல்லூரிக்குள் அனுமதிக்கிறார்கள்?

3. இந்த ‘ஆச்சாரமான’ லயோலா கல்லூரி,  ஏ.வி.எம்., ஸ்டுடியோ போல் இயங்கிய நாட்களும் உண்டு. அப்போது கல்லூரிக்குள் வந்த நடிகைகள் என்ன உடைஉடுத்திக் கொண்டு வந்தார்கள்? அங்கே வந்து அவர்கள் போட்ட ஆட்டத்தை (படப்பிடிப்புக்காத்தான்) அனுமதித்த நிர்வாகம், லீனா மணிமேகலையை மட்டும் அவமானப்படுத்தியது ஏன்?

இதை போன்ற கேள்விகளை கேட்க வக்கற்ற இந்த ‘ஆபாச ஆதரவு மற்றும் ஆபாச எதிர்ப்பு’ யோக்கிய ஆண் எழத்தாளர்கள் லீனா மணிமேகலையை கண்டிக்கிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களை குறிப்பதற்காகத்தான் இந்தப்  பழமொழியே உள்ளது போல,

‘யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை’

Exit mobile version