Site icon வே. மதிமாறன்

“கிராமங்கள் ஒழிக”

g66868_u42290_dalit_girl_2.jpg 

                        – வே. மதிமாறன்

தீண்டாமையை கடைப்பிடிப்பதில் பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்ககளிடம் பெருமையோடு சுயநலம் சார்ந்த ஒரு ‘தந்திரம்’ இருக்கிறது.

அந்த தந்திரம் சில நேரங்களில் நாயைப் போல் குழைந்து வாலை ஆட்டிக்கொண்டும், பல நேரங்களில் தன்னை விட பலவீனமான விலங்குகளிடம் வீரம் காட்டும் புலியைப் போல் பாய்ந்து குதறவும் செய்கிறது.

ஜாதி இந்துக்கள், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவரை இறங்க அனுமதிப்பதில்லை. ஊர் குளம் என்பது எந்த ஜாதி இந்துக்கும் தனிப்படட சொத்துக் கிடையாது. அது ஊரின் பொதுச் சொத்து.

ஊரின் பொதுச் சொத்தில் தீண்டாமையை தீவிரமாக கடைப்பிடிக்கிற ஜாதி இந்து, தன் தனிசொத்தில் அதை இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டுமல்லவா? ஆனால் பெரும்பான்மையாக தன்னுடைய தனிச் சொத்து இடங்களில் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதில்லை.

ஆம், ஊரின் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்க எதிர்ப்பு தெரிவிக்கிற ஜாதி இந்துதான், தன் சொந்த நிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இறங்கி வேலை பார்ப்பதற்கு, அவர்களின் வீடு தேடி சென்று அவர்களுக்கு கூலி கொடுத்து அழைத்துவருகிறான்.

தன் வீட்டுத் திண்ணையிலோ அல்லது ஊரின் தேநீர் கடையின் பென்ஞ்சிலோ தாழ்த்தப்பட்டவரை தனக்கு சமமாக உட்கார அனுமதிக்காத ஜாதி இந்து, ஊருக்குள் வரும் பஸ்சில் ஓடிபோய் ஏறி தாழ்த்தப்பட்டவருக்கு அருகில் இடம் பிடித்து அவரை உரசிக் கொண்டு உட்காருகிறான், அதுபோலவே திரையரங்கிலும்.

ஊர் பொதுக்குளத்தில் தூர் வாருவதற்கும், குளம் வெட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்திக் கொள்கிற ஜாதி இந்துக்கள், குளத்தில் தண்ணீர் வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்களை இறங்க அனுமதிப்பதில்லை.

ஒரு ஜாதி இந்து தன்னுடைய தேவைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தீண்டாமையை கைவிடுகிறான். தன்னுடைய தேவகைள் எங்கெல்லாம் பாதிக்கப்படுவதில்லையோ, தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பு அல்லது உதவி அவனுக்கு எங்கெல்லாம் கட்டாயமாக தேவையில்லையோ அங்கெல்லாம் அவன் தீண்டாமையை கடைப்பிடிப்பதின் மூலமாக தன்னை பெரிய மனிதனாக, தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவனாக கருதிக் கொள்கிறான்.

எந்தவிதமான பொருளாதாரக் காரணங்களும் இல்லாமல் வெறும் ‘கருத்தே’ ஒரு தனி ஜாதி இந்து, கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை விட ‘உயர்ந்தவன்’ என்கிற உளவியல், அவனுக்கு இலவசமான அதிகார மயக்கத்தைத் தருகிறது. தீண்டாமையை இழப்பது, தன் அதிகாரத்தை இழப்பதாகவே அவன் உணர்கிறான்.

குறிப்பாக – கோயில் திருவிழா, சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் ‘பிற்படுத்தப்பட்ட இந்து ஜாதி திமிர்த்தனத்தின்’ அடையாளங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வடிவங்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘கூத்தரப்பாக்கம்’ ‘கண்டதேவி’ போன்ற கோயில்களில் தேர் வடம் பிடிப்பதைக் கூட ஜாதிஇந்துக்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ‘தன் வழிபாடு கெட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று கோயிலையே இழுத்து மூடுகிறான்.

இந்த அநீதியைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை ‘தியாகம்’ செய்யக்கூட அவன் தயாராகிறான். இந்த அநீதிக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்துகிற வன்முறையைதான் தன்னுடைய ‘வீரமாக’ அடையாளப்படுத்துகிறான்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எந்த ஜாதி எல்லாம் நேரடி வன்முறையில் இறங்குகிறதோ, அந்த ஜாதிக்காரர்களைத்தான் “தைரியமானவர்கள், வீரமானவர்கள்” என்று ‘உயர்ஜாதி’க்காரர்கள் ‘ஏத்தி’ விடுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

கோயில்களில் இவ்வளவு திமிர்த்தனமும், ஊரின் ‘டீ’ கடையில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கிளாசும் வைக்கிற ஜாதி வெறி பிடித்த இந்துக்கள், சாராயக்கடையில் தாழ்த்தப்பட்டவர்கள் குடித்துவிட்டு வைத்த மிச்ச சாராயத்தை நக்கிக் குடிக்கிறார்கள் என்பது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.

ஆக, தீண்டாமையை எதிர்த்து தாழ்த்தப்பட்டவர்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

முழுமுழுக்க அதில் தண்டணைக்குரியவர்களும், திருந்தவேண்டியவர்களும், மனம் மாற வேண்டியவர்களும் ஜாதி இந்துக்கள்தான்.

                              ***

தீண்டாமைக்கு எதிராக முற்போக்காளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், நகரமயமாக்கல்தான் தீண்டாமையை தீவிரமாக விரட்டும்.

ஏனென்றால், கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை பேணி காக்கிறது.கிராமங்களில் இருந்து வெளியேறி நகரத்தில் குடியேறிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முன்னேறி இருக்கிறார்கள்.

நகரத்தில் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ்கிற தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் சொந்த கிராமத்துக்கு செல்லும்போது, எந்த கல்வியறிவும் அற்ற முட்டாள் ஜாதி இந்துவால் கூட அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவும், சுயமரியாதையும், வசதியும், சமூக அந்தஸ்தும் ஜாதி இந்துவின் ஆத்திரத்திற்கு ஆளாகி அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த அனுபவம் உலகமே வியந்து பார்த்த டாக்டர் அம்பேத்கருக்கே ஏற்பட்டிருக்கிறது.அதனால்தான் காந்தியார், “கிராமங்கள்தான் இந்தியாவின் உயிர் நாடி, கிராமரஜ்ஜியம் இருந்தால்தான் ராமாராஜ்ஜியம் வரும்” என்றார்.

அதற்காகவேதான் பெரியார், “கிராமங்கள் ஒழிக” என்றார்.

 மார்க்சிய-பெரியாரிய-பொதுவுடமை கட்சியின் ‘சிந்தனையாளன்’ மாத இதழின் 2008 தை பொங்கல் மலரில் எழுதியது.

Exit mobile version