‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 16
நான்காவது அத்தியாயம்
“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முற்றே உலகு”
என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவான் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகேலை-வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.
“ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”
இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.
1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.)
2. தமிழக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.
3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (`ஸம்` என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸ்ம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.
‘கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய
மூத்தமொழி தமிழ் மொழி’
என்று மாறுவேடப் போட்டியில் அரிதாரம் பூசி வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியைக் குழைத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறு வேடம் போடுகிறார்:
“தமிழ் நாட்டில் தேசீயக் கல்வியெனப்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் அய்யமில்லை. தேசபாஷை ப்ரதானம என்பது தேசீயக் கல்வயின் ஆதாரக் கொள்கை; இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானல், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்”
டாக்டர் நாயரின் ஞாபகம் வந்தவுடன் தான் போட்டிருப்பது மாறுவேடம் என்பதையும் மறந்து கோபத்தில் மேக்கப்பை கலைத்து விட்டு,
“இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர். நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடம் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி ஆரியபாஷை விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் அய்க்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயறிசி மேன்மேலும் ஒங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”
பாரதியின் இந்த வார்த்தைகள் மொழி குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர்களின் இப்போதைய கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது அல்லவா?
ஆம், தமிழ் மொழி குறித்த இந்த திரைக்கதை, வசனம் ‘பார்ப்பனிய ஜனதாவின்’ பரம்பரையின் தொடர்ச்சி.
-தொடரும்

