Site icon வே. மதிமாறன்

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

ilaiyaraja

லித் முரசு இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும், மிகச்சிறந்த மக்கள் பாடகரும், புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன் இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார்.

அந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் இசைஞானி இளையராஜாவைப் பற்றி, இசைக்கு வெளியே சென்று கடுமையான விமர்சனங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

டாக்டர் குணசேகரன் அவர்களை தொடர் எழுத வைக்கும் பொறுப்பையும், அந்தத் தொடரில் இசைஞானி பற்றி தனிப்பட்ட முறையில் அவர் எழுதிய ஆதாரமற்ற விமர்சனங்களை பிரசுரிக்க வேண்டாம் என்கிற முடிவையும் நான்தான் எடுத்தேன். அதற்கான பொறுப்பை தலித் முரசு ஆசிரியர் திரு. புனிதபாண்டியன், என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

ஆனாலும், டாக்டர் குணசேகரன் அந்தக் கட்டுரைகளை புத்தகமாக கொண்டுவந்தபோது, தலித் முரசால் பிரசுரிக்க மறுத்த, இசைஞானி பற்றிய அந்த ‘விமர்சனங்களை’ சேர்த்துக் கொண்டார்.

‘என்னை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்கிறது’ என்று அந்தப் பகுதிகளை சுட்டிக்காட்டி இசைஞானி இளையராஜா, டாக்டர் கே.ஏ. குணசேகரன் மீது வழக்கு தொடர்ந்தார். இப்போது அந்தப் புத்தகம் விற்பனைக்கு இல்லாமல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

***

‘தலித் முரசு’ சார்பாக டாக்டர் குணசேகரன் நூலுக்கு நான் எழுதிய முன்னுரையை வைத்து ஒரு அக்கப்போர் கட்டுரையை பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘தீராநதி’ இதழில் எழுதியிருந்தார்.

அ. மார்க்சின் அக்கப்போரை மறுத்து, கண்டித்து நான் எழுதிய கட்டுரையை தலித் முரசின் நிலைபாடாகவே, அதன் ஆசிரியர் திரு. புனிதபாண்டியன் வெளியிட்டார். அதற்கு முன் அந்த மறுப்பை ‘தீராநதி’ வெளியிட மறுத்தது.

என்மீது கொண்ட நம்பிக்கை, என் நிலைபாட்டில் உள்ள நியாயம் புரிந்து, அதை தன்னுடைய நிலையாகவே உணர்ந்து தலித் முரசின் நிலைபாடகவே அந்தக் கட்டுரையை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு. புனித பாண்டியனின் நேர்மைக்கு இந் நேரத்தில் என் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலித் முரசு இதழில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம் பெற்ற அந்தக் கட்டுரையை நாளை மறுநாள் பிரசுரிக்கிறேன்.

-தொடரும்

Exit mobile version