லிபியா மீது அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையே?
–ம. முதல்வன்
கணவன் மனைவியிடையே சண்டை. தொடர்ந்து மனைவியை கணவன் அடித்து துன்புறுத்துகிறான். ‘அவர்களை சமாதானப் படுத்துவதற்காக’ என்று வலிந்து வீட்டுக்குள் செல்கிற ஒருவன், கணவனை கொலை செய்து, அவன் மனைவியை பலவந்தமாக தூக்கி சென்றுவிடுகிறான். இந்த பஞ்சாயத்து பாணியில்தான் குட்டி நாடுகளின் விவகாரங்களுக்குள் அமெரிக்கா, நடந்து கொள்கிறது.
பாலைவன இஸ்லாமிய நாடுகளில், இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினை வரும்போதெல்லாம், ஒரு பண்டிகை நாளில் போப் ஆண்டவர், மிகுந்த துயரமுற்று, அந்த நாட்டு மக்களின் அமைதிக்காக ஆண்டவரிடம் பிராத்திப்பார்; உடனே அமெரி்க்கா ‘அந்த நாட்டு அதிபரை கொல்வதற்காக’ என்று கிளம்பி, ஈவு இரக்கம் இல்லாமல், வான்வழி தாக்குதல் நடத்தி அந் நாட்டு மக்களை கொல்லும்.
பிறகு, “ஆண்டவர் அமைதியை கொண்டு வந்துவிட்டார்” என்ற பாணியில், அமெரிக்காவின் அடாவடித்தனத்தை புனிதப்படுத்துவதுபோல் இருக்கும் போப் ஆண்டவரின் இன்னுமொரு பிராத்தனை.
அப்படித்தான் இந்த ஈஸ்டரின் போது போப் ஆண்டவர், அடுத்தவர் மனைவியின் அமைதிக்காக பிராத்திப்பதைப்போல், லிபியா மக்களின் அமைதிக்காக பிராத்தித்தார்; உடனே அமெரிக்கா வான் வழி தாக்குதலை நடத்தி அடுத்தவர் மனைவியை அபகரிப்பதுபோல், நடந்து கொண்டது; லிபியா மக்கள், கடாபியின் மகன், மனைவி என்று பலபேர் மாண்டனர்.
இப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்தியதற்காக போப் ஆண்டவர், ஒரிஜனல் ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்.
லிபியாவில் கடாபி ஆட்சியில் நடந்ததை விட மிக மோசமான தாக்குதலை, ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தினான். லிபியா அமைதிக்காக பிராத்தித்த போப் ஆண்டவர், ஏன் இலங்கை மக்களுக்காக ‘பிராத்தித்து’ அமெரிக்காவை ராஜபக்சே தலையில் குண்டுபோட வைக்கவில்லை. இத்தனைக்கும் அய்.நா, அறிக்கை ராஜபக்சேவின் கொலைவெறியை சுட்டிக் காட்டிய சமயம் இது.
ஈழமக்களின் துயரங்களின் போது, இங்கு இருக்கிற கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகள், சீனாவை விமர்சிக்கிறப் போர்வையில், கம்யூனிசத்திற்கு எதிராக, பவுத்ததிற்கு எதிராக கடுமையாக சபித்தார்கள். மிகப் பெரிய அளவில் சிங்கள கிறிஸ்துவர்களையும் கொண்ட இலங்கையை பவுத்த குறியீடாகவே பார்த்தார்கள். இப்படியாக ‘தமிழன்’ என்ற போர்வையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், தலித் அல்லாத ஜாதி கிறிஸ்துவர்கள், ஜாதி தமிழர்களாகவே அம்பலமாகி பிதுங்கி நிற்கிறார்கள்.
அமெரிக்கா ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதாக பொய் வேறு சொன்னார்கள்.அல்லது அமெரிக்காவை விமர்சிக்க மறுத்தார்கள். ஆதரித்தார்கள்.
இதுபோல் இயேசுவும், போப்பும் பச்சைத் தமிழர்களாக தெரிகிற இவர்களுக்கு, ஏனோ அண்ணல் அம்பேத்கர் மட்டும் வட இந்தியராக, மராட்டியராக தெரிகிறார். நல்லது. தொடர்ந்து நடக்கட்டும் இந்த தமிழ் உண்ர்வு.
‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே

