Site icon வே. மதிமாறன்

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தனது கருத்தாழமிக்க திரைப்படப் பாடல்களால் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் கண்ணதாசன். அவர் பாடல்களை கேவலம் என்று சொல்லிவிட்டிர்களே?
-சுப.சீனிவாசன், காரைக்குடி.

தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று. ‘கண்ணதாசனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பானவை’ என்று நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கைதான்.

சிறந்த பாடல் என்று சிலாகிக்கிற பெரும்பானமையான பாடல்களின் வரிகள் பல்லவியைத் தாண்டி பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. காரணம் அந்தப் பாடலின் மெட்டுதான் அவர்களை வசீகரித்து இருக்கும். தனக்கு தானே பாடிக் கொள்கிற பலபேர், இரண்டு வரிக்கு மேல் பாடல் வரிகளை தவறவிட்டு “தன னா தன னா…” என மெட்டைதான் பாடிக் கொள்வார்கள்.

அந்த இனிய மெட்டை தனக்கு தெரிந்த மொழியின் மூலமாக ஞாபகம் வைத்துக் கொள்வதால் இசையப்பாளருக்கு சேர வேண்டிய பெருமை, கவிஞனுக்குப் போய் சேர்ந்தது.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவருடைய இசைதான் மிகத் துல்லியமாக இந்த வேறுபாட்டை பிரித்துக் காட்டி மக்களின் இசை ரசனையை தனியாக அடையாளம் காட்டியது. சினிமா வரலாற்றில் ஒரு நடிகனைவிடவும் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற நபராக ஒரு இசையமைப்பாளர் (இளையராஜா) உருவானார். (ஆனால் ஆபாச வரிகள் மெட்டையும் தாண்டி ஆக்கிரமிக்கும் என்பது வேறு)

ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத்தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான். மெட்டுக்களை உருவிட்டு வாசித்தாலும் வலிமையோடு இருக்கும் அவருடைய வார்த்தைகள்.

“தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று குழந்தைக்கு அவர் சொன்ன சேதியில் தெறித்த பொதுவுடமையும்,

“நான் கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ” என்று ஒரு பெண் தன் காதல் உணர்வை, தன்னுடைய சுயமரியாதை உணர்வோடு சேர்த்து பாடுவது போல் எழுதிய ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான்.

காரணம், தனக்கென்று தத்துவமும் அரசியலும் கொண்ட திரைப்படப் பாடலாசிரியர் அவர் மட்டும்தான்.

அதேபோல் கவிஞர் சுரதா, குறைந்த பாடல்கள் எழுதினாலும் இலக்கிய தரமிக்க பாடல்கள் எழுதியவர்.

ஆனால் கண்ணதாசனிடம் இருந்தது வெறும் தொழில் நேர்த்திதான். கதையின் சூழ்நிலைக்கும், மெட்டுக்கும் பொருத்தமான வரிகளை விரைவில் எழுதுகிற ஆற்றல். அதனால்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார்.

சில நேரங்களில் சூழலுக்குப் பொருத்தமற்ற வரிகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.

‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ள சொன்ன நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல்.

ஆனால் கதையின்படி அந்தப் பெண்ணுக்கு கணவன் இரண்டாவதாக மலர்ந்த மலர். முதல் மலர் டாக்டர்.

16 வயதினிலே படத்தில், கல்வி அறிவற்ற சப்பானி, “இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு.. பரம்பரை பாட்டில் உண்டு.. தவறில்லை மகராணி” என்று பெரிய பண்டிதனைப் போல் பாடியிருப்பார்.

ராஜபார்வை திரைப்படத்தில், பார்வையற்ற கதாநாயகன் தன் காதலியை, “சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிகண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.

எனக்கு தெரிந்து மெட்டைத் தாண்டி வலிமையான வார்த்தைகளோடு ஒரே ஒரு பாடலைத்தான் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒர் அடிமை பாடுவது போல், அமைந்த பாடல்.

“காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல், தாய்மை, பாசம் நம்மை வெறுப்பதில்லையே”

ஒரு வேளை இந்தப் பாட்டை யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்களோ என்னவோ?

*

திரு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு ஜூலை 2007 இதழுக்காக எழுதியது.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

தொடர்புடையவை:

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

Exit mobile version