கடந்த தலைமுறையில், கலப்பு திருமணங்கள் நிறைய நடந்தும் கூட இந்த தலைமுறையில் சாதி உணர்வற்ற வாரிசுகளை பார்ப்பதே அரிதாகஇருக்கிறதே?
-சு. தமிழ்மணி, விழுப்புரம்.
பழைய மாயாஜாலப் படங்களில், ஒரு கொடிய மிருகத்தை, கதாநாயகன் கத்தியால் வெட்டினால், அதன் உடலிருந்து சிந்திய ரத்தம் இன்னும் நான்கு கொடிய மிருகங்களாக விஸ்வரூபம் எடுக்கும். அதுபோல், ஜாதிமறுப்பு என்ற கத்தி கொண்டு, ஜாதி என்கிற கொடியமிருகத்தை வெட்டினால், அது இன்னும் இரண்டு ஜாதிகளாக விஸ்வருபமாக நிற்கிறது.
ஜாதி மறுப்பு திருமணங்கள், ஜாதிஒழிப்பு என்ற அரசியல் நிலையிலிருந்து நடந்தால்தான் ஜாதியை ஒழிக்க முடியும். ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், ஜாதிகளுக்கு எதிரான மனோபாவம் கொண்ட வாழ்க்கை நடத்தினால்தான் அவர்களின் வாரிசுகள் ஜாதி உணர்வற்றவர்களாக இருப்பார்கள்.
மாறாக, ‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ என்று வாழ்ந்தால், ஒரு ஜாதி என்பது போய் இரண்டு ஜாதி உணர்வாளர்களாக, பழைய மாயாஜாலப் படங்களில் வந்த கொடிய மிருகத்தைப்போல், விஸ்வரூபம் எடுப்பார்கள், வாரிசுகள்.
பிறகு, முற்போக்கான அம்சங்களை பின்னுக்குத் தள்ளி. இரண்டு ஜாதிக் குதிரைகளில் சவாரி செய்து பிரமுகராகவும் மாறிவிட்டால், தன்ஜாதி உணர்வை பிரமுகர்களின் வழியாக சொறிந்து கொள்கிற ஜாதிய உணர்வாளர்களும்,
‘அவுங்க அம்மா எங்க ஜாதிக்காரர்’,‘ அவுங்க அப்பா எங்க ஜாதிக்காரர்’ என்று உரிமை கொண்டாடுவார்கள்.
அப்புறம் என்ன.. நாடு நல்லா வௌங்கிடும்…?
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:

