Site icon வே. மதிமாறன்

திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்

தமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்?

-தமிழ்ப்பித்தன்

தமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை.

மாறாக, ‘உலகு’ ‘உலகம்’’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ – என்று துவங்கிய வள்ளுவர், ’உலக மக்கள் அனைவருக்குமான பொது நலன்’ என்ற அடிப்படையில்தான் தன்னுடைய 1330 குறள்களையும் பதிவு செய்திருக்கிறார்.

அப்படிப்பட்ட திருக்குறளை ‘தமிழர்களுக்கு மட்டும்’ என்று சுருக்கிவிட முடியாது. திருக்குறளில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழர்களை பற்றி மட்டுமல்ல. அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான ‘மனிதாபிமானம், பொது ஒழுங்கு’’ ஆகியவற்றை வலியுறுத்துவதால்தான் அதனை ‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கிறோம்.

ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் திருவள்ளுவர், ஒரு சர்வதேசியவாதியாக உலக மக்கள் எல்லாம் நலமாக வாழவும், பிறரை துன்புறுத்தாமல், பிறர் துன்பம் கண்டு கலங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று மனமார விரும்பி திருக்குறளை எழுத முடிந்தபோது, 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது?

காரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.

*

26-11-2009 அன்று திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும் என்ற தலைப்பில் வெளியிட்டதை மீண்டும் வெளியிட்டிருக்கிறேன்.

தொடர்புடையவை:

பணமா? பாசமா?

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

Exit mobile version