தஞ்சையிலிருந்து தோழர் எழிலரசன் மே 29 ஆம் தேதி இரவு தொலைபேசியில் அழைத்திருந்தார்
“ஜூனியர் விகடன் பிரபலங்களின் கருத்துக்களை பதிவு செய்து தொலைபேசி வழியாக ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துகிறது. நேற்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் ‘நட்பு’ என்ற தலைப்பில் உங்கள் பெயரை குறிப்பிட்டு, வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்தில் காரல் மார்க்ஸ் – எங்கல்ஸ் நட்பு பற்றி நீங்கள் எழுதியிருந்ததை முழுவதுமாக படித்துக் காண்பித்தார்.” என்று குறிப்பிட்டார்.
நான் அந்த ஒலிபரப்பை கேட்க வில்லை.
பத்திரிகையில், மேடையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்; எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்கள், பிரமுகர்கள், பிரபலமானவர்கள், கொள்கையாளர்கள் என்று பலதரப்பினரும்…
என் புத்தகங்களில் மற்றும் இணைய தளத்தில் உள்ள என் எழுத்துகளை, கருத்தரங்குகளில் நான் பேசிய, தனி உரையாடலில் என்னுடன் பேசியபோது நான் சொன்ன கருத்துகளை; தன் கருத்துகளாக பயன்படுத்தி, மறந்தும் என் பெயர் சொல்லாமல், தன் சமூக கடமையை ‘சிறப்பாக’ செய்து வருகிறார்கள்.
அதைவிடக் கொடுமை, நான் அவர்களிடம் சொன்ன என் கருத்துகளையே. கொஞ்ச நாள் கழித்து அவர்களின் கருத்துகளை போலவே என்னிடமே வந்து, சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி அறிவாளிகளால் சூறையாடப்படுகிறது என் அறிவு.
நில அபகரிப்பைவிடவும் இப்படி சிந்தனை அபகரிப்புகள் படுமோசமானவை. நேரடியான பொருளாதார மதிப்பு இல்லாததால், இவைகள் குற்றமாக கருதப்படாத மனநிலையை ‘சிந்தனை அபகரிப்பாளர்கள்’ மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
அறிவாளிகளின் அறிவு நாணயம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, இயக்குநர் பாலாஜி சக்திவேல் என் பெயர் குறிப்பிட்டு, என் எழுத்தை மேற்கோள் காட்டிய அவர் அறிவு நாணயத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தனைக்கும் அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பிரபலமானவர்.
‘………..என்று ஒரு எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்’ என்று கூட அவர் சொல்லியிருக்கலாம்.
மாறாக, எதை மேற்கோள் காட்டுகிறோமோ, அதை எழுதியவரின் பெயரையும் சொல்வதுதான் முறையானது. நாணயமானது என்ற அவரின் அந்த செயல், எனக்கு மகிழ்ச்சியளித்தது.
பிரபலமாகதவர்களின் சிந்தனைகளை தன் சிந்தனைகளாக அறிவித்துக் கொள்வதும், பிரபலமானவர்களின், புகழ் பெற்றவர்களின் எழுத்துக்களை எழுதியவரின் பெயரோடு சொல்லி மேற்கோள் காட்டுவதும் ‘அறிவாளிகளுக்கான அழகாக’ இருக்கிறது.
பிரபலமானவர்களின் மேற்கோள் எல்லோருக்கும் தெரந்திருக்கும் என்பதும், அப்படி மேற்கோள் காட்டுவதன் மூலம் பிரபலமானவர்களோடு நெருக்கமாக பழகலாம் என்பதும் ஒரு காரணம்.
‘களவாடப்படுகிற என் கருத்துகள்’என்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற என் உணர்வுக்கு, இயக்குநர் பாலாஜி சக்திவேலின் செயல் கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.
மீண்டும் அதன் பொருட்டு தோழர் பாலாஜி சக்திவேலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடையது:
கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?
