அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார்.
காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான்.
காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட.
இது காங்கிரசின் விஸ்வரூபம்.
கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?
அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?
விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.
அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?
சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க; ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள்,
அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?
காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.
கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.
சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
அவரவர்களின் ஜாதி, மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.
எது மனிதாபிமானம்?
அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.
மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.
தொடர்புடையவை:
மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

