தமிழால் இணைகிற ‘தி இந்து’ நாளிதழில், ‘எம்.எஸ்.எஸ். பாண்டியன்: இன்றைய சுயமரியாதை இயக்கத்தின் மறதி’ என்ற தலைப்பில் சி.லக்ஷ்மணன் – அன்புசெல்வம் இருவர் எழுதியக் கட்டுரையை மறுத்து நான் எழுதியது:
*
பிரச்சினையை தலைகீழாகச் சொல்கிறது கட்டுரை.
பெரியாருக்குப் பின் தமிழ் நாட்டில் இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வளரவில்லை. மாறாகப் பெரியார் எதிர்ப்பு அரசியல் தான் வளர்ந்திருக்கிறது. பெரியாரை எதிர்த்து, தமிழ்த்தேசிய அரசியல் என்று நிகழ்த்தப்படுவதில்… ஜாதி அரசியல், பாரப்பன ஆதரவும் தான் நடக்கிறது.
பெரியாரை தமிழன விரோதி என்று சித்தரித்து விட்டு பச்சையான தமிழன விரோதிகளோடனும் ஜாதிவெறியர்களுடனும் தான் அரசியல் செய்கின்றனர். டாக்டர் அம்பேத்கரை திட்டமிட்டு நிராகரிக்கிற வேலையும் நடக்கிறது.
பெரியாருக்குப் பின் எழுப்பப்பட்ட தலித் அரசியல், ஜாதி அரசியல் என்ற ‘உட் ஜாதி’ வட்டத்தைத் தாண்டி வரவே இல்லை. இன்னொரு வகையில் டாக்டர் அம்பேத்கரை புறக்கணிக்கற என்.ஜி.ஓ அரசியலாகவும் அடையாளமாகிப்போனது.
தலித் எழுத்து, தலித் அரசியல், தலித் இலக்கியம் என்று பொதுவாகப் பேசுகிறவர்கள் கூட, அவர் எந்த உட் ஜாதியை சேர்ந்தவரோ அந்த ஜாதி தலைவரை தான் ஆதரிப்பார்.
கடந்தகாலத் தலித் தலைவர்களில் கூடத் தன் உட்ஜாதியை சேர்ந்த தலைவரைதான் பரிந்துரைக்கிறார். தன் ஜாதிக்கு வெளியே, டாக்டர் அம்பேத்கர் ஒருவரைத் தவிர, தன் ஜாதியல்லாத ஒரு நபரைக் கூட சிலர் ஆதரிப்பதில்லை.
பெரியாரை எதிர்த்தாலும் அது, உட் ஜாதியைத் தாண்டிய தலித் அரசியலாக தலித் அறிவாளிகள் மத்தியில் கூட வளரவில்லை.
தலித் அரசியலிலும் பெரியார் எதிர்ப்பு, பெரியார் புறக்கணிப்புச் செய்து, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தேசிய அரசியல், தலித் அரசியல் இவை குறித்துத் தீவிரமாக எழுதிகிற அறிவாளிகள்;
ஜாதியத் தலைவர்கள், தலித் விரோதத் தலைவர்களுக்கு எதிராக எழுதியதை விட, முற்போக்காளர்களுக்கு எதிராக இயங்கியதுதான் அதிகம். இன்று இந்த இரண்டு அரசியலுக்குள்ளும் பெரியார் எதிர்ப்பு, காரல் மார்க்ஸ் மற்றும் கம்யுனிச புறக்கணிப்பு, எதிர்ப்பு என்பதுதான் தீவிரமாக நடைபெறுகிறது.
பார்ப்பனியம் என்று சொல்வதற்குக் கூட தயங்கி ‘பிராமணியம்’ என்றே சொல்கிறார்கள் தமிழ்த் தேசிய, தலித் அரசியல் அறிவாளிகள். இந்தக் கட்டுரையும் அதற்குச் சாட்சி.
தலித் விரோத தலைவர்களுடன், கட்சிகளுடன் எல்லாவகையிலும் சமரசம் செய்து செய்து கொண்டு கூட்டணி வைத்துக்கொள்ள துடிக்கிற தலித் தலைவர்கள், தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொள்வதற்கு பெயர் அளவில் கூட முயற்சிப்பதில்லை.
அதேபோல், தலித் தலைமைக் கொண்ட கட்சியில் தலித்தல்லாதவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக இணைகிறார்கள். இருக்கிறார்கள். ஆனால், தலித் உட் ஜாதியை சேர்ந்தவர்கள், தன் ஜாதி தலைமையல்லாத கட்சியில் பெரும்பாலும் இணைவதில்லை. மாறாக தலித் விரோதக் கட்சியில் இணைகிறார்கள். இருக்கிறார்கள்.
இன்றைய தலித்விரோத தழிகத்திற்கு, பெரியாருக்குப் பின் துவங்கப்பட்ட பெரியார் எதிர்ப்பு, புறக்கணிப்பு அரசியலும் முக்கியக் காரணம். பெரியாரை தலித் விரோதியாகச் சித்திரித்துவிட்டு, தலித் விரோதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு… தலித் விரோதிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் தந்தால்.. தலித்தல்லாத கூட்டணி வராமல், தலித் விடுதலை கூட்டணியா வரும்?
‘தலித்தல்லாத கூட்டமைப்பில்’ உள்ள ஜாதியத் தலைவர்கள் எல்லோரும் எப்படிப் பெரியார் எதிர்ப்பு, டாக்டர். அம்பேத்கர் எதிர்ப்பு, மார்க்ஸ் புறக்கணிப்பு என்று இருக்கிறார்களோ அதுபோலவே தமிழ்த் தேசிய, தலித் அரசியலிலும் இருப்பது என்ன நியாயம்?
ஆக, தலித்தல்லாதவர்களைக் கூடுதலாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, டாக்டர் அம்பேத்கரை மெல்ல கை விடுகிற தலித் இயக்கங்களும்,
பெரியாரை விடப் பிரபாகரனுக்கு முக்கியத்துவமும்… ஜாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பில் பெரியார் வழியாக டாக்டர் அம்பேத்கருக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, பிரபாகரனுக்கும், தமிழ்த் தேசிய அரசியலுக்கும் கொடுத்த பெரியார் இயக்கங்களும்…
இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பைப் தீவிராகப் பேசுவதை கை விட்டதினாலும் தான் இந்த நிலை.
பெரியாருக்குப் பின் தமிழகத்தில் முற்போக்காளர்களிடம் இருக்கிற பார்ப்பன ஆதரவு மனநிலையே, இன்றைய சீர் அழிவுக்குக் காரணம்.
இந்தக் கட்டுரை கூடப் பெரியார் மீது அன்பு கொண்டு விமர்சனப் பார்வையோடு பெரியாரை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோவது போல் தோற்றமளித்தாலும்;
சுற்றி வளைத்து இது செய்கிற காரியம் பார்ப்பனிய ஆதரவையும், ‘பார்ப்பனியத்தை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று சொல்வதையும் தான்.
இந்தக் கட்டுரை செய்கிற வேலை தான், கடந்த 30 ஆண்டுகாலத் தமிழகத்தின் ‘முற்போக்கு’ அரசியல்.
பார்ப்பனியத்தோடு உறவாடத் துடிக்கிற ‘முற்போக்கு’, பார்ப்பனியத்தையே வாழ வைக்கும். ஒரு போதும் அது எளிய மக்களுக்கு பயன் தராது.
*
கட்டுரையில், சாரதா சீனிவாசன் என்பவர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படுகிற ஆய்வில்:
‘கொங்கு வேளாளர் கவுண்டர் மத்தியில் பெண்களில் எண்ணிக்கை குறைவானதாகவும், ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், இது அகமண முறைக்கு வரன் தேடுதல் சடங்கில் நிலவும் சரியான ஜாதகப் பொருத்தம் இல்லை என்பதாகும்.
இதனால் புற்றீசல்போலப் பெருகிய பல்வேறு வரன்தேடும் விழாக்களில் கலந்து கொள்ளும் கொங்கு வேளாளர் ஆண்கள் தற்போது ஏமாற்றத்தின் – விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட கொங்கு வேளாளர்களிடம், கேராளவுக்குச் சென்று பெண் தேடி திருமணம் முடிக்கும் பழக்கம், ஜாதி பழக்கமாகவே கொங்கு வேளாளர் மத்தியில் மட்டுமே இன்று இருக்கிறது.
இதைச் சாரதாவும் இவர்களும் மூடி மறைப்பதற்கான காரணம் என்ன?
ஒரே மொழி அல்லது ஒரே மொழி பேசுகிறவர்கள் வாழ்கிற பகுதிகளில் மொழி சார்ந்த இன உணர்வு இருக்காது. ஜாதி அடையாளமும் ஜாதி உணர்வும் தான் இருக்கும். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும்போது அவர்களின் ஜாதி அடையாளம் தெரியாது, மொழிச் சார்ந்த இன அடையாளம் தான் அவர்களை அடையாளப்படுத்தும்.
அந்தவகையில் தன் ஜாதியில் நிலவுகிற பெண்கள் பற்றாக்குறையைப் போக்க, கொங்கு வேளாளர் என்கிற ‘பச்சைத் தமிழர்கள்’ வேறு தமிழ் ஜாதியில் மணம் முடிப்பதை தவிர்ப்பதற்கே மலையாளப் பெண்களைக் கேரளா சென்று ஜாதி, மொழித் தாண்டி மணம் முடிக்கிறார்கள். அதில் அவர்கள் வரதட்சனை போன்ற விசங்களைக் கூட தவிர்க்கிறார்கள்.
தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை
‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

