மனு நீதிச் சோழனின் மகன், கன்றுக் குட்டியை கொன்றான் என்பதற்காக; தாய்ப் பசு ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது ஏன் தெரியுமா?
அது, இராம. நாராயணன் படத்தில் வந்த பசு வின் ‘முப்’பாட்டி பசு.
பஸ் டிரைவர் கவனக்குறைவால் கன்றுக்குட்டியின் மேல் வண்டியை ஏற்றிக் கொன்று விடுகிறார். அதற்காக அவருக்கு நீதி மன்றம் மரணதண்டனை வழங்கினால், ‘என்ன ஒரு சிறப்பான தீர்ப்பு? இவரல்லவா நீதிமான்‘ என்று பாராட்டுவோமா?
“ச்சீ. இது ஒரு நீதியா? அநீதி.” என்று தண்டனையைத் திரும்பப் பெறும்வரை போராடுவோமா?
‘ஆம்’ என்றால்;
அப்புறம் எதுக்குக் கவனக்குறைவால் தன் தேரை கன்றுக்குட்டிமேல் மோதிக் கொன்ற ஒரு சிறுவனுக்கு, மரணதண்டனைக் கொடுத்த, மனுநீதி சோழன் என்ற ஒரு கொடூரனை நீதி தவறாதவன் என்று சொல்கிறோம்?
மனுநீதிச் சோழனின் கதையில் கிடைக்கும் ‘நீதி’ மனிதர்களை விடப் பசு உயர்ந்தது. பசுவிற்குத் தீங்கு செய்தால் தன் மகனே ஆனாலும் அவனை மன்னன் தண்டிக்க வேண்டும் என்கிற பார்ப்பனிய நீதி.
‘காட்டில் சூத்திரன் சம்பூகன் தவம் செய்ததால்தான் என் மகன் இறந்தான்’ என்ற பார்ப்பனரின் பொய்யை வேதவாக்காகக் கொண்டு, சம்பூகனை கொன்ற ராமனின் வாரிசு மனுநீதி சோழன்.
தன் தந்தை இரணியனியின் பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துக்கு எதிராக,பார்ப்பனியத்திற்கு ஆதரவாகக் களவானித்தனம் செய்து தந்தையையே காட்டிக்கொடுத்து, கொலை செய்யக் காரணமான பிரகலாதனின் கொள்கை நண்பன் மனுநீதி சோழன்.
ஆக, பார்ப்னியத்திற்கு அடியாள் வேலைப் பார்த்ததால்தான், ராமன் கடவுளாகப்போற்றப்படுகிறான்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதற்கு எதிராகச் செயல்பட்டபோதும், பார்ப்பனியத்திற்குப் பல்லக்கு தூக்கியதால் பிரகலாதன் ‘கருவிலே திரு’ என்று போற்றப்படுகிறான்..
தன் மகன் என்றும் பாராமல், பார்ப்பனியத்திற்கு ஆதரவாக அநீதியான தீர்ப்பு வழங்கியதாலேயே மனு‘நீதி’ சோழன் என்று புகழப்படுகிறான்.
பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்திய பார்ப்பன அடிமை தான், மனுநீதிசோழன்.

