
என் பிறந்தநாளை எனக்கும் நினைவூட்டி, நான் கூச்சபடும்படி என்னைப் பெரிய தலைவனைப்போல் வாழ்த்தி மகிழ்ந்த தோழர்கள், எல்லோரும் என்னை என் அரசியலோடு தொடர்புபடுத்தியே வாழ்த்தினார்கள்.
அதில் தோழர் லியோ ஜோசப் எழுதிய வாழ்த்து, என் அரசியலை அங்கீகரித்து மேலும் என்னை உற்சாகத்தோடு பணியாற்ற அழைத்தது.
லியோ, பள்ளி ஆசிரியர். பெரியார் – டாக்டர் அம்பேத்கரை இணைத்து சிறப்பாகத் தொடர்ந்து எழுதி வருகிறவர். அதேபோல் என் எழுத்துக்களை என்னைவிடவும் அதிகமாக இணையங்களில் தொடர்ந்து கொண்டு செல்கிறார்.
பெரியாரையும் என்னையும் ஆதரிப்பதற்காகப் பலரிடம் சண்டையிட்டு அதிக விரோதங்களையும் சம்பாதித்துக் கொண்டவர்.
‘அண்ணே.. அண்ணே..’ என்று என்னை அன்போடு உருகி, உருகி அழைத்த தம்பிகள் சிலரே
‘வெறும் உட்ஜாதி உணர்வு அரசியல் அல்ல. அது ஆதிக்க ஜாதி ஆதரவாகவே முடியும்’ என்ற என் விமர்சனத்திற்காகவும் ‘போட மயிறு. நீ ஒத வாங்கப்போற’ என்று என் முகத்திற்கு நேராக பாசம் காட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.
ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், லியோ வை நான் இதுவரை சந்தித்ததில்லை. போனிலும் பேசியதில்லை.
எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பு சமீபத்தில், டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்களை Blue Buddha என்றை தலைப்பில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் முறையில் தன் தோழர்களுடன் இணைந்து கொண்டு வந்திருக்கிறார். இது தமிழுக்குப் புதிது. பெரிய அமைப்புகளே செய்யாத ஒரு செயலை தோழர்கள் செய்திருக்கிறார்கள். இது குறித்துத் தனிப் பதிவாகப் பிறகு எழுதுகிறேன்.
இப்படியான அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுகிற தோழர் லியோ என்னைக் குறித்து எழுதியிருப்பது மீண்டும் சொல்கிறேன், எனக்கான மகத்தான அங்கீகாரம். நன்றி லியோ.
-வே. மதிமாறன்.
எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரும் பெரியாரிய – அம்பேத்கரிய செயற்பாட்டாளருமான திருமிகு. வே. மதிமாறன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மிகச் சமீபத்தில் வாடஸ்அப் குழு விவாதம் ஒன்றில் , நீயெல்லாம் மதிமாறன் சொம்பு தானே, உனக்குத் தலித் போராட்டம் பற்றி , அம்பேத்கர் பற்றிப் பேச என்ன தகுதியிருக்கிறது என்று என் மேல் கோபக் கனல் வீசினார்கள். அதே விவாத குழுவில் நீ ஒரு பதிவு அம்பேத்கரைப் பற்றிப் போட்டுவிட்டு ஒன்பது பதிவு பெரியாரைப் பற்றிப் போடுகிறாய் , நீ பேச வந்துட்டியா எனத் தூய்மைவாதம் பேசினார்கள்.
நேற்று ஒரு தோழர் உங்களுக்கு மதிமாறன் எழுதுவது தான் புரியும், ரவிக்குமார் எழுதினால் புரியாதா, அவர் மோடியையெல்லாம் புகழவில்லை, நீயெல்லாம் ரவிக்குமார் என்ன எழுதினார் என்று புரிந்து கொள்கிற அளவுக்குப் புத்திசாலியல்ல என்று மட்டம் தட்டினார்.
பெரியாரை புகழ்ந்தால் அல்ல, அவர் சாதி ஒழிப்பைப் பற்றி , பெண் விடுதலைப் பற்றி இதுவெல்லாம் பேசியிருக்கிறார் எனச் சில பதிவுகளைப் பகிர்ந்தால் கூட நான் பட்டியலின மக்களுக்கே துரோகி என்கிற அளவில் சித்தரிக்கப்பட்டு விடுகிறேன். ஆனால் என் பதிவுகளின் தொடக்கத்தில் வெறுமனே நான் அம்பேத்கர் என்று குறிப்பிட்ட போது , டாக்டர் அம்பேத்கர் என்று குறிப்பிடுங்கள் என எனக்குச் சுட்டிக் காட்டி திருத்தியவர் தோழர் மதிமாறன்.
தனது கடைசி மூச்சு வரை டாக்டர் அம்பேத்கர் போராடிய பிற்படுத்தப்பட்ட மக்களான சூத்திரர்களே அண்ணல் அம்பேத்கரின் சிலையை உடைக்கும் மடமையை, அவர்களின் சாதி வெறியை துகிலுரித்துத் தொடர் பதிவுகள் எழுதி , டாக்டர் அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்பதை வெளிச்சமிட்ட , நானறிந்த ஒரே எழுத்தாளர்.
பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையிலும் வைத்து வணங்கப்படத் தகுதியான தலைவர் டாக்டர் அம்பேத்கர் என்பதைத் தரவுகளோடு அவர் பதிவுகள் சுட்டியிருக்கின்றன.
பாரதியின் காவி முகத்தை , வ.உ.சி.யின் ஒப்புயர்வற்ற தியாகத்தைத் தனது நூல்களின் வழி எனக்குக் கல்வி புகட்டிய ஆசானும் தோழர் தான். காந்தி நண்பரா துரோகியா என்ற தனது நூலின் மூலம் காந்தியின் துரோகங்களைப் பட்டியலிட்டு மகாத்மாவின் கோவணத்தை மீண்டும் ஒருமுறை உருவி அவரின் உண்மை சொரூபத்தைப் போட்டுடைத்தவர்.
சமீபத்திய தனது பேட்டியில் கூட, காந்தியைப் போல், நேருவைப் போல், டாக்டர் அம்பேத்கர் எப்போது அனைவராலும் பொதுவான தலைவராகக் கொண்டாடப் படுகிறாரோ , அன்று தான் இந்தியாவின் சுதந்திர தினம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டவர் தோழர்.
எந்தச் சாதியினரிடம் காணப்பட்டாலும் சாதிப் பற்று அருவருக்கத்தக்கது, அது பட்டியலின சாதியினராக இருந்தாலும்.
பெரியாரை அந்நியமாக்கி, அண்ணல் அம்பேத்கர் மட்டுமே என்பவர்களை விடத் தோழர் மதிமாறன் அவர்களின் மூலமாகவே டாக்டர் அம்பேத்கர் எனக்குள் ஆழப் பதிந்திருக்கிறார் என்பதை நான் பெரும் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.
தந்தை பெரியார் குறிப்பிடுவது போல மொழிப் பற்று, தேசப் பற்று, இனப் பற்று ஆகிய அனைத்தையும் விட, மக்கள் நலன் என்கிற பற்றே எல்லாவற்றிலும் பிரதானமானது என்கிற உணர்வோடு தொடர்ந்து பயணிக்கும் எழுத்தாளர், பெரியாரிய – அம்பேத்கரிய செயற்பாட்டாளர் தோழர் மதிமாறன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
– லியோ
16 October
