இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை?
–சிவகுமார்.
கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.
அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்ரராஜனை வைத்துப் பாட வைத்தார்.
இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம்.
ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.
பழைய பாடல்களை மறைமுகமாக திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த இசையமைப்பாளர்களை விட கல்யாண வீடுகளில் பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள்.
“இந்தப் பட பாடல், இவர் இசையமைத்தது” என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களை தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.
இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைகூலியான ஏ.ஆர். ரகுமான்.
‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.
கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.
அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.
-வே. மதிமாறன்
