சந்தேகிக்கும் ஆண்கள்-கில்லாடி இயக்குநர்கள்-ஏ.ஆர். ரகுமான்-சமச்சீர் கல்வி-இன்னுமா நம்புறாங்க

ஆண்களோடு, சகஜமாக பேசுகிற பெண்களை ஏன் ஆண்கள் சந்தேகிக்கிறார்கள்?

சுரேகா, சென்னை.

ஒரு பெண்ணை ஆண் என்ன கண்ணோட்டத்தோடு பார்க்கிறான் என்பது ஆண்களுக்கு தெரியும் என்பதால்.

அலுவலகம், பொது இடங்களில் தன்னுடன் நட்பாக பேசும் பெண்களை பற்றி தன் நண்பர்களிடம் ஆண் எப்படி  பகிர்ந்து கொள்கிறான், நண்பர்கள் அந்த பெண்ணோடு பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி எப்படி கிண்டல் செய்கிறார்கள், அதை நண்பன் ரசித்துக் கொண்டே எப்படி பெருமையோடு மறுக்கிறான். ஏற்கிறான்.

பெண்களுக்குப் புரியாத ஆண்கள் மட்டும் பகிர்ந்து கொள்கிற பாலியல் ரீதியான வார்த்தைகளை ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் அதன் உள்ளர்த்தம் புரியாமல் சீரியாசாக தலையாட்டுவதும், அதை ஆண்கள் எப்படி கும்பல் கூடி ரசித்து சிரிக்கிறார்கள்;

இவைகள் எல்லாம் தெரியும் அல்லது தானும் செய்திருப்பதால்தான், ஆண்களிடம் பேசும் பெண்களை மிக குறிப்பாக தன் குடும்பத்து பெண்களை அதிலும் குறிப்பாக மனைவியை அதிகம் சந்தேகிக்கிறான்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், ஆணின் புத்தியை ஆண் அறிவான். ஆனாலும் அதன் தண்டனையை பெண்களுக்குத்தான் தருவான்.

புதிய இளம் இயக்குநர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் என்று போடாமல் எழுத்து, இயக்கம் என்று தங்கள் பெயரை குறிப்பிடுகிறார்கள். இது வித்தயாசமாக இருக்கிறதே?

. தமிழ், திருச்சி.

வித்தியாமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.

வெளிநாட்ல எவனோ கதை, திரைக்கதை எழுதி எடுத்த படத்தை, இவுங்க நோவாம நோன்பு கும்புடறதனால, அதை மறைக்க எழுத்து, இயக்கம்னு போட்டுங்குறாங்க. இந்த மாதிரி ‘டேக்டிசா’ வேலை பாக்குறதுல நம்மளுங்கள எவனும் அடிச்சுக்க முடியாது.

நடிகனாக வேண்டும், இயக்குநராக வேண்டும், பாடலாசரியராக வேண்டும் என்று  பல இளைஞர்களை சினிமா மோகம் பிடித்து ஆட்டுகிறது?

சிரா, சென்னை.

சினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.

சினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.

இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே?

கே. அப்துல்காதர், திருச்சி.

சொல்லிட்டா போச்சி.

கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.

அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை  பாட வைத்தார்.

“உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாக திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக ரீமிக்ஸ் என்ற பெயரில் வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான  ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘பொன் மகள் வந்தாள்’  மெல்லிசை மன்னரால், மேற்கத்திய இசை கருவிகளை கொண்டு நுட்பமாக  இசையமைக்கப்பட்ட மிக நவீனமான, இனிமையான பாடல்.  அதை ரகுமான் எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்.

ஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.

கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை அச்சமூட்டுகிற ஒலி, அல்லது திகிலூட்டுகிற இசை என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக காட்டியது.

இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.

இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களும், ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.

இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.

இந்த பாணியில் அப்துல்கலாம் நேரடியான அரசியல் குறயீடு என்றால், ரகுமான் கலைவடிவ குறீயிடு.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா?

சிரா, சென்னை.

‘ஜனங்களே  பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது.

சமச்சீர் கல்விக்கான உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்பு எப்படி?

எம். முகமது, திருநெல்வேலி.

மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி என்கிற பொதுப்பாடத்திட்ட முறையால், மெட்ரீக் பள்ளிகளின் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு, சிபிஎஸ்இ வியாபாரம் இன்னும் சூடு பிடிக்கும்.

அதை விட அதிகமாக மழைலையர் கல்வி என்கிற பெயரில் வர்த்தக நிறுவனங்கள் நடத்துகிற சமூக விரோத கும்பலின் சூதாட்டம், ‘கமான்.. கமான்…’ என்று ரேசில் குதிரைகளை கூவி அழைப்பதுப்போல். பெற்றொர்களை கூவி அழைத்து. இன்னும் கூடுதலாக கொள்ளையடிக்கும்.

ஆக, சிபிஎஸ்இ பள்ளிகளையும் பொதுப்பாடத்திட்ட வரையறைக்குள் கொண்டுவரவேண்டும். மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும் அல்லது அதற்கும் பொதுப் படத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.

இல்லையேல் பணம் இருக்கும் பெற்றோர்கள் மூன்று ஆண்டுகளில் பல லட்சங்களை செலவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு ‘தரமான’ கல்வித் தருவார்கள்.

பிறகு ஒன்றாம் வகுப்பில் பொதுப்பாடத்திட்ட பிரிவுக்குள் வரும்போது, மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அப்போதுான் தங்களுடைய அ, ஆ, இ – A, B C யை துவங்குவா்கள்.

முதல் வகுப்பில் படிக்கும்போதே இப்படியான பெரிய வித்தியாசம் கிராமப்புற, மாநகராட்சி பள்ளிகளின் குழந்தைகள் மனதில் பெரிய தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். குழந்தைகளிடம் ஏற்றத் தாழ்வுகளையும் காழ்ப்புணர்ச்சியையும் உண்டு செய்யும்.

அதை சரி செய்தால்தான் பொதுப்பாடத்திட்டம் முழுமையடையும். அடுத்த நமது இலக்கு இதுதான்.

தெய்வத்திருமகள் படம் எப்படி?

நா. செந்தில், சென்னை.

அப்பாவிற்கு 6 வயதிற்குரிய மனநிலையாம். பொண்ணுக்கு 5 வயதாம். ஆனால்,வயது ஆம்பளைய விட 5 வயது சிறுமி, பக்குவமா, தெளிவா இருக்கே எப்படி?

“யோவ்.. போய் அந்த IAM SAM இங்கிலிஷ் பட டைரக்டர் Jessie Nelson  னைகேளுய்யா, எனக்கின்ன தெரியும், அந்தம்மா, என்ன எடுத்தாங்களோ, அததான் நான் எடுத்தேன்.” என்று கோப்பப்படுவாரோ இயக்குநர் விஜய்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்கள்.


தொடர்புடையவை:

காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

கடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா?,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்!


5 thoughts on “சந்தேகிக்கும் ஆண்கள்-கில்லாடி இயக்குநர்கள்-ஏ.ஆர். ரகுமான்-சமச்சீர் கல்வி-இன்னுமா நம்புறாங்க

  1. \\இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.\\இப்படி படம் எடுத்தா அதைப் பர்ர்க்க 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று பணம் கொடுத்துதான் ஆட்களை அழைத்துவர வேண்டும்.

  2. \\ ஏ.ஆர் ரஹ்மான் கடிச்சு குதருபவராக இருந்தால்\\ அவருக்கு ஆஸ்கார் பாராட்டு விழாவில் மெல்லிசை மன்னர் , இசைஞானி இளையராஜா ரெண்டு பேருமே வானளாவ எதுக்கு புகழ்ந்து தள்ளினாங்க?

  3. //சினிமா மூலமாக கிடைக்கிற பணம், புகழ் தான் அந்த உணர்வை தீர்மானிக்கிறது.

    சினிமாவை அரசுதான் தயாரிக்கும். மாத சம்பள அடிப்படையில்தான் வேலை செய்யவேண்டும்.

    இயக்குநருக்கு மாதம் 20 ஆயிரம், நடிகனுக்கு 10 ஆயிரம் என்று முடிவானால் இந்த மோகமும் கலை தாகமும் காணாமல் போய்விடும்.//எந்த அடிப்படையில் இந்த பதிலைக் கூறுகிறீர்கள்? உண்மையான கலை தாகமும்,திறமையும் உள்ள, திரைப்படம் என்ற மொழியின் மூலம் தன உணர்வுகளை வெளிப்படுத்த ஆசைப்படும் எத்தனையோ இளைஞர்கள் எப்பொதும் உண்டு! வெறும் பணத்திற்காக அலைபவனிடம் இருந்து வெளிவரும் படங்கள் மசாலா குப்பைகளாகத்தான் இருக்கும்! மிகச் சிறந்த சினிமாக்கள் வருவதே இல்லையா? அந்த சினிமாவாய் உருவாக்க அவன் பட்ட பாடுகள்,அவமானம்,வறுமை இதெல்லாம் நீங்கள் படிக்காததா?

  4. “இயக்குநர் சங்கமே சம்பளத்தை நிர்ணயித்தது. ”

    வரவேற்கத்தக்க முடிவு. முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ஹி….ஹி..ஹி ஆட்டுரவர்களுக்கு ஒன்னரை கோடி கொடுக்கும் போது – ஆட்டுவிப்பவர்களுக்கு கொடுத்தால் தப்பில்லே.
    நல்ல கருத்துள்ள திரைப்படங்கள் வந்தால் சரி.

  5. sampalam endral oru payal padam edukka vara mattan. arasiyalvathikkum kuraitha patcha sambalam kodukukattum yar arasiyalil irukkirargal edru parpom. nandri thozhar.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading