அதனால்தான் அவர் மட்டும் தளபதி

களத்தில் தளபதி – காலத்தில் தளபதி

நிழலில் கற்பனை பாத்திரங்களுடன் பஞ்ச் டயலாக் பேசி கத்தி சுற்றுவதும், நிஜத்தில் பிரச்சினை வரும்போது ஓடி ஒளிவதுமாக இருப்பவர்கள் ‘தளபதி’யாக இருக்க முடியாது.

தன் நாட்டிற்குத் தீங்கு வரும்போது களத்தில் முன்னின்று தன்னை அர்ப்பணித்துப் போராடுகிறவருக்குப் பெயர்தான் தளபதி.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் துவக்கமே அப்படிதான். 1975 ஆம் ஆண்டு இந்தியாவையே அச்சுறுத்திய மிசா, தமிழகத்தை சுற்றிவளைத்தபோது அஞ்சாமல் அதை எதிர்த்து கடும் சிறைகண்டவர்.

தலைவர் கலைஞர் சொல்கிறார், ‘திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சிறையில் ஸ்டாலினைச் சுற்றி சிறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, முழுக்கைச் சட்டை போட்டுக் கையை மூடிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் காண நேரிட்டது.

என்னைக் கண்டதும், தன் கண்களில் ததும்பியிருந்த கண்ணீரை வெளிவராமல் மறைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்திருந்தார்.

“அடித்தார்களாமே; உண்மையா?” என்று கேட்டேன். “இல்லை” என்று தலையை மட்டும் ஆட்டினார். வாய் திறந்து வார்த்தைகளில் சொன்னால் கதறி அழுது விடக் கூடும் என்ற உணர்ச்சி நிலை!’’

அன்று கலைஞர் சொன்னதுபோல் இன்றும் அதே போர் குணத்தோடுதான் தமிழக எல்லையில் நின்று, இந்தி திணிப்பை, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து பாசிச பாஜகவின் பண்பாட்டு படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டைக் காக்கும் தளபதியாக நிற்கிறார்.

**

திராவிட முன்னேற்றக் கழகம் பிர்லா மாளிகையில், செட்டிநாட்டு அரண்மனையில் கட்டமைக்கப்பட்ட இயக்கமல்ல. எளிய மக்களால் எளிய மக்களிடம் உருவான இயக்கம்.

டீக்கடையில், முடிவெட்டும் கடையில் – ‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என போர்டு வைக்கும் அளவிற்கு அரசியல் பேசி வளர்ந்த இயக்கம்.

இந்தியாவிலேயே தேநீர்க்கடையிலும் முடிதிருத்தும் நிலையத்திலும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய ஒரே இயக்கம் திமுக.

அதன் எழுச்சியால் எளிய மக்களுக்கு ஏற்பட்ட வாசிப்புப் பழகத்தினால் வர்த்தகமாக வளர்ந்ததுதான் தினத்தந்தி.

அப்படிதான் 1968 ல் ஒரு முடிதிருத்த நிலையத்தில் ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ எனத் தளபதி ஸ்டாலின் அவர்களால் விதைக்கப்பட்டு, 1982 ல் மதுரையில் இளைஞரணியின் மாநில அமைப்பாளராகப் பொறுப்பேற்று,

ஓயாத உழைப்பினால் இளைஞர்களின் எழுச்சி நாயகனாய் உயர்ந்து இளைஞர் அணியைத் தமிழர்களுக்கு நிழல் தரும் விருட்சமாக்கினார் தளபதி.

அதன் விழுதாக நமது உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,

பாசிச பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்கப் போகும் திராவிட மாடலின் முன்னறிவிப்பாகச் சேலம் மாநாட்டை அடிமைகளும் அவர்களின் எஜமானர்களும் அலறும் வகையில் அதிர வைக்கிறார்.

**

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்டது சென்னை மாநாகராட்சி. அதன் முதல் மேயர் நீதிக் கட்சியின் தலைவர் தியாகராயர். அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர், தியாகராயரின் அரசியல் பேரன் தளபதி ஸ்டாலின்.

1996 ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்ற பிறகுதான் சென்னை ‘சிங்காரச் சென்னை’யானது.

புளியந்தோப்பில் உள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலைச் சீரழிக்காத, இறைச்சியைச் சுகாதாரமாகத் தரும் வகையில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டது.

நெரிசலான சென்னையின் 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

9 பெரிய மேம்பாலங்களும், 49 குறும் பாலங்களும் கட்டப்பட்டன. மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுத்

திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதியை மிச்சப்படுத்தி அதை நகராட்சிக்கே திருப்பி தந்தார் தளபதி.

அதுபோல் 18 முக்கியச் சாலை சந்திப்புகளில் நீரூற்றுகளும் பூங்காக்களும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன.

சென்னை மெரினாவில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை மெரினாவாக மாற்றப்பட்டது.

அதனால்தான் ‘நவீன சென்னையின் தந்தை’ எனச் சென்னை மக்கள் தளபதியை அழைத்தார்கள். அதன் தொடர்ச்சிதான்,

பேய் மழை பெரும் வெள்ளத்திலிருந்து சென்னை மக்களை இப்போது மீட்டார்.

‘ஆட்சி சரியில்ல அதனால் அரசியலுக்கு வந்து வெற்றிடத்தை நிரப்பப் போறேன்’ என்ற பிரபல நடிகர்களும், எடப்பாடி, அண்ணாமலை, சீமான் போன்ற மாபெரும் பொய்யர்களும்

சென்னை மழையில் என்ன ஆனார்கள்? எப்படி, எங்கே இருக்கிறார்கள்? விவரம் தெரியாமல் ஒளிந்திருந்தபோது அவர்களையும் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.

பொய்யர்கள், ஊடக பொய்யர்களை – மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைப் போல் தரம் பிரித்து மழைக்கால குப்பைகளோடு சென்னையை மீட்ட மாபெரும் துப்புரவத் தொழிலாளியைப்போல் பெருக்கித் தள்ளினார்.

**

2006 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற தளபதி, எப்போதும் நமக்குப் பிரச்சினையாக இருக்கிற காவேரி, முல்லை பெரியாறு ஆறுகளைப் பயன்படுத்தி, ஒகேனக்கல் மற்றும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கிய சிறப்பும் அவரையே சேரும்.

பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிற அரணாக விளங்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தளபதியால் கொண்டு வரப்பட்டது.

1,75,493 மகளிிர் குழுக்களை அமைத்து குறிப்பாக கணவனால் கைவிடப்பட்டப் பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் என விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியவர்.

**

இன்று அதன் நீட்சியாக நாடே வியக்கும், மற்ற மாநிலங்கள் வழிகாட்டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்+இலவச மகளிர் பேருந்து+பெண்களைப் பட்டதாரியாக ஆக்கியே தீருவது என்ற தந்தையின் அக்கறையோடு புதுமைப்பெண் திட்டம் என உழைக்கும் பெண்கள் முதல் படிக்கும் பெண்கள் வரை தளபதியின் ஆட்சி விடியலின் சாட்சி.

**

மதிய உணவுத் திட்டம் தந்த மகராசன் தியாகராயரின் பேரன் தளபதி அவர்கள் காலை உணவுத் திட்டம் தந்து நூற்றாண்டின் நாயகனாக ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறார்.

இல்லம் தேடிக் கல்வி – நான் முதல்வன் திட்டங்கள் கல்வியில் மறுமலர்ச்சியையும் இளைஞர்களின் தனித்திறமையை உலகறிய செய்யும் உன்னத திட்டங்கள்.

**

விபத்து மரணங்கள் மாபெரும் துயரம். குடும்பத்தைச் சூழும் மீளமுடியாத வறுமை. ஒரு நொடியில் அனாதைகளாக ஆக்கப்படும் குழந்தைகள் – இதைத் தடுக்க ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம் எமனின் பாசக்கயிற்றையே அறுத்து, உயிரை இணைக்கும் பாசப்பிணைப்புத் திட்டம்.

எதிரிகள் அஞ்சு நடுங்குவது இந்த 7 திட்டங்களைக் கண்டுதான். இந்த திட்டங்களால் தளபதிக்கும் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிற கூட்டணியை திமுக எதிர்ப்பாளர்களால் ஒருபோதும் பிரிக்க இயலாது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அடிமை அதிமுகவையும் அதன் எஜமானர்கள் பாஜகவையும் இந்தக் கூட்டணி விரட்டியடிக்கும்.

**

அறநிலையத்துதுறை,கடந்த அடிமைகள் ஆட்சியிலும் இருந்தது. அப்போது அமைதி காத்தவர்கள் இப்போது அலறுகிறார்கள். காரணம், கடந்த ஆட்சி கோயிலைக் கொள்ளையடிப்பவர்கள் கையிலிருந்தது. இப்போது கொள்ளைக்கூட்டத்தைக் கூண்டுக்குள் ஏற்றி கோயில் சொத்துக்களை மீட்கும் திராவிட மாடல் அரசிடம் இருக்கிறது. கொள்ளையர்கள் அலறுகிறார்கள்.

அதுபோக முதல்வர் தளபதி, அறநிலையத்துறை வழியாக அனைத்து இந்துக்களின் சுயமரியாதைக்கும் பக்திக்கும் சிறப்பு சேர்த்து விட்டார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என.

அதனால் சனாதனவாதிகள் தங்களின் அதிகாரம் தகர்க்கப்படும் என அலறுகிறார்கள்.

‘அறநிலையத்துறை இருப்பதினால்தானே எல்லா ஜாதியையும் எங்களுக்குச் சமமா சேர்ப்பீர்கள்? அதையே தூக்கிட்டா’ என அவதூறுகளோடு அலறுகிறார்கள்.

அதுபோக மாபெரும் புரட்சியாக, பெண்களும் அர்ச்சகராகலாம் என இன்னொரு சிறப்பை இணைப்பாக வழங்கி விட்டார் முதல்வர்.

‘ஒரு பெண் நிதியமைச்சராக முடியுது. ஆனால் அர்ச்சகராக முடியாது. பெண்களை அர்ச்சகராக்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி’ என பெண்ணாகப் பாராட்ட மனமில்லாத நிர்மலா சீதாராமன்,

ஒரு ஜாதி உணர்வு கொண்ட சனாதன ஆண் போல் அவதூறு செய்கிறார்.

சைவ மட ஆதினங்களும், இந்துத் துறவிகளும் அறநிலையத்துறை அருமையாக செயல்படுகிறது என பெருமிதம் கொள்ளம்போது, சங்கிகளும் சங்கிதாசன்களும் திட்டமிட்டு கதறுகிறார்கள்.

சதிகாரர்களின் அவதூறுகளை அடித்து துவம்சம் செய்து தமிழ் இந்துக்களின் தலைவராக உயர்ந்து நிற்கிறார் தளபதி.

**

கம்யுனிச ஸ்டாலின், உலகை அச்சுறுத்திய ஹிட்லர் என்ற பாசிஸ்டை வீழ்த்தி உலகைக் காத்தார்.

திராவிட ஸ்டாலின், மோடி என்ற சாடிஸ்டை வீழ்த்தி இந்தியாவை மீட்பார்.

மாநிலத்தை ஆளும் மன்னனாக மட்டுமல்ல, சங்கிகளை எதிர்க்கும் போர்களத்தில் முதல் வீரனாகவும் நிற்கிறார். அதனால்தான் அவர் மட்டும் தளபதி-வே. மதிமாறன்.

நன்றி- திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாட்டு மலர்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading