விஜய்க்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா? மகளிர் நாள் கொண்டாட்டம்

இது சர்வதேச மகளிர் நாளல்ல. சர்வதேச உழைக்கும் மகளிர் நாள்.
ரஷ்ய புரட்சியின்போது பெண்களை கொன்றுகுவித்த ஜார் மன்னனின் மனைவி அலெக்ஸாண்ட்ரா, பிரெஞ்சு புரட்சியின் நேரத்தில் பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது ‘ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடுங்கள்’ என ஆணவத்தோடு பேசிய மகாராணி மேரி ஆன்டோனெட்,
வீரப்பன் தேடுதல் வேட்டையில் வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு பெண்களை சித்தரவதை செய்த ஜெயலலிதா
இவர்களும் பெண்கள்தான். இது இவர்களுக்கான நாளல்ல.
உழைக்கும் மகளிர் தினத்தில் கம்யுனிசத்தையும் கம்யுனிஸ்டுகளையும் தவிர்த்து விட்டு வாழ்த்துச் சொல்வது, நினைவுகூர்வது, திட்டமிட்ட முதலாளித்துவ சதியுடன் ஆர்வக்கோளாறும் அறியாமையும் இணைந்து கொள்கிறது.
மே 1 தொழிலாளர் தினம்போல், மார்ச் 8 மகளிர் தினமும் கம்யுனிஸ்ட்டுகளின் உதிரத்தில் உழைப்பில் உருவான நாள்.
உலகின் ஒரே புரட்சித் தலைவர் லெனின் அவர்களின் பிரதான மாணவி, மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த ஊரில் பிறந்த பெருமதிப்பிற்குறிய கிளாரா ஜெட்கின் அவர்களின் சிந்தனையில் உழைப்பில் உருபெற்றநாள்.
மே தினம் எப்படி அமெரிக்காவில் துவங்கியதோ அதுபோல் 1909 முதல் 1913 வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியின் (கம்யுனிஸ்ட்) சார்பாக அமெரிக்காவில் மட்டும் அனுசரிக்கப்பட்ட மகளிர் நாள். தோழர் கிளாராவின் முயற்சியால் இன்று உலகெங்கும்..
1911 ஆண்டு மார்ச் 19 அன்று முதன்முறையாக அமெரிக்காவிற்கு வெளியே ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்த், டென்மார்க்கில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நாள் பாலின சமத்துவத்தற்காக மட்டுமல்ல, வர்க்க வேறுபாடுகளை ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் உருவாக்கப்பட்ட நாள். இன்னும் சரியாகச் சொன்னால் போர் என்கிற கொடூரத்திற்கு எதிராக பெண்கள் வீதிக்கு வந்து போராடியநாள்.
முதலாம் உலகப் போரில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ரஷ்ய பெண்கள் பிப்ரவரி 23 தேதி வேலைநிறுத்ததைத் துவங்கி மகளிர் தினத்தை அனுசரித்தனர்.
ஐரோப்பிய உழைக்கும் பெண்கள் போருக்கு எதிராகவும் பெண்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் 1914 ஆண்டு மார்ச் 8 அன்று ஐரோப்பா முழுவதும் பேரணிகளை நடத்தினர்.
அந்த உழைக்கும் பெண்களின் வழியில், இன்றைய மகளிர் நாளில், ஈரானுக்கு எதிராக இழிவான போரை நடத்தும் அமெரிக்காவை கண்டிக்கும் விதமாகவும் இன்றைய சர்வதேச உழைக்கும் மகளிர் நாளை அனுசரிப்போம்-வே. மதிமாறன்.