Site icon வே. மதிமாறன்

‘பச்சைத் தமிழன்’

 

மிழ் வழிக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கோரிக் கொண்டு இருக்கும் போதே, சமஸ் கிருதத்தில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஊக்கப் படுத்துகிறார் ஒரு பச்சைத் தமிழர். யார் அந்தப் பச்சை?

ஜெயேந்திர சரஸ்வதி.

பிறகு சமஸ்கிருதத்தின் மேன்மைகளைப் புகழ்ந்து தமிழில் பேசுகிறார். தமிழில் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே. ஆகவே, அவர் பச்சைத் தமிழராகிறார்.
சரி, அதெப்படி இந்துக்களில், தமிழர்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருதம் முக்கிய மொழியாக இருக்கிறது?

ஒரு வேளை இது தமிழர்களுக்கான சிறப்புத் தகுதியோ?

தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தமிழர்கள், வட்டார வழக்கு பேசுகிறார்கள். குடும்பத்திற்குள் தெலுங்கும், வெளியில் தமிழும் பேசுகிற தமிழர்களும் வட்டார வழக்கைத் தெளிவாகப் பேசுகிறார்கள்.

கோவை, மதுரை, திருநெல்வேலி, நகர்கோவில் என்று தமிழகமெங்கும் பரவலாக வாழுகிற ‘பச்சைத் தமிழர்கள்’ வாயில் மட்டும் வட்டார வழக்கு வர மறுக்கிறதே ஏன்?

சொல்லி வைத்தாற்போல தமிழகம் முழுக்க, எல்லா பச்சைத் தமிழர்களும், ‘ஸ்நானம், ஜலம், ஆத்துக்கு, என்று பேசுகிறார்களே, இந்த ‘நெட்வொர்க்’ அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எப்படிப் புனிதமாயிற்று?

‘பேசிய வார்த்தைகளைவிட, பேசாத வார்த்தைகளுக்கே மரியாதை அதிகம். மவுனம் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்’ என்று இலக்கிய வாதிகள் அவிழ்த்து விடுவார்களே, அப்படித்தான் பேசுகிற தமிழைவிட பேசாத சமஸ்கிருதம் உயர்வான மொழியானதா?

இருக்கலாம்.

முற்போக்கு மற்றும் அறிவு ஜீவிகளின் சுப்ரீம் கோர்ட்டான ‘படுபச்சைத் தமிழன்’ மகாகவி பாரதி சொல்கிறார்.

‘‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்வோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.’’

பாரதியின் கூற்றுப்படி பார்த்தால், பச்சைத் தமிழன் ஜெயேந்திர சரஸ்வதி சமஸ்கிருதத்திற்கு சிறப்பு செய்தது சரிதானே! சரிதானா?

முற்போக்கு ஆய்வாளர்கள் இதைக் கொஞ்சம் ஆய்ந்து சொல்லட்டும். சொல்வார்களா?

எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002

Exit mobile version