Site icon வே. மதிமாறன்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

killer1உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?

-கு. தமிழ்ச்செல்வன்

‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.

‘சிங்கள அரசு, ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்குத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.

இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை, அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.

மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.

‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.

ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.


சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?

காரணம், கொலை செய்யப்பட்ட, அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.

ஆனால், பல தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறு எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.

நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத,  எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி.

ஜாடிக்கேத்த மூடி.

குறிப்பு:

* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.

* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.

Exit mobile version