Site icon வே. மதிமாறன்

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

http://www.anu.edu.au/anugreen/files/403_question%20mark.jpg

நீங்கள் ஏன் உங்களைப் பற்றியான விமர்சன கட்டுரைகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் மறுப்பு சொல்வதில்லை?

குமார்

நான் மறுப்பு சொல்ல வேண்டிய அளவிற்கு அவைகள் அருகதை அற்றவையாக இருப்பதுதான் காரணம்.

எனது கட்டுரைகளில், பதில்களில் நான்  எழுப்பிய கேள்விகளுக்கு உள்ளே வராமல், வெளியே சுற்றிவந்து அரைத்தமாவையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் விவாதிக்க போனால், நானும் அவர்களைப்போல் அரைத்த மாவையேதான் அரைக்கவேண்டியிருக்கும்.

அல்லது எனது எழுத்துக்களுக்குள் நுழைந்து பதில் சொல்லமுடியாதவர்கள், அதை  சுற்றி சுற்றி வந்து ‘  கம்முனாட்டி மதிமாறன் பிராமணரை மட்டும்தான் திட்டுவானா?’ ‘பாரதியை விமர்சிக்க இந்த மதிமாறனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?‘ ‘பொங்கி வருகிற தமிழனின் எழுச்சியை, சாதி உணர்வை தூண்டிவிட்டு திசை திருப்பிற மோசடி பேர்வழி மதிமாறன்’

‘மகஇகவின் கை ஆள் மதிமாறன்’ ‘இப்பதான் மதிமாறனுக்கு சாதி குறித்து தெரியுதா? நாங்க எல்லாம் இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே சாதிய எதிர்த்தவங்க… அப்ப எங்க போயிருந்தார் மதிமாறன்?‘ ‘இந்திய உளவு நிறுவனத்தின் கை ஆள் மதிமாறன்’ என்று அரசியல் விளக்கமே இல்லாமல், தங்கள் இயலாமையை  கோபமாக, கிசு கிசு பாணியில் தனிப்பட்ட முறையில் என் மீது மண்ணை வாரி தூற்றுவதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல?

ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில், டாக்டர் அம்பேத்கர் குறித்து  நான் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள், அந்தப் புத்தகத்திற்கு விழா எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அவர்களே விழா தேதியையும் சிறப்பு விருந்தினர்களையும் முடிவு செய்து  அறிவித்தனர். எல்லோருக்கும் விழா பற்றி எப்போது தெரியுமோ அப்போதுதான் எனக்கும் தெரியும்.

ஆனால், என் ‘இனிய நண்பர்களோ’ மிக மோசமான முறையில்… அவதூறுகளைப் பரப்பி, அந்த விழாவை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் அவதூறுகளை மறுத்து நான் சொல்வதற்கு என்ன பதில் இருக்கிறது?

தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான் பற்றி நான் தனிப்பட்ட முறையில் மிக மோசமாக பேசியதாக, அவர்களிடமே ஒரு குழுவாக போய் மாறி, மாறி பரப்புகிற அவதூறுகளுக்கு நான் என்ன விளக்கம் தர?

அதிலும் குறிப்பாக தோழர் கொளத்தூர் மணியை நான் ஜாதி உணர்வாளர் என்று சொன்னதாக, அவரிடமே  சொல்லி இருக்கிற என் ‘இனிய நண்பர்களை’ பற்றி நான் என்ன விமர்சிக்க?

‘ஆண்டவனே என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று. எதிரிகளை நானாக கவனித்துக் கொள்கிறேன்’ என்று யாரோ ஒரு இறை நம்பிக்கையாளர் புலம்பியதைபோலவா நான் புலம்ப முடியும்?

“நீங்கள், தோழர் கொளத்தூர் மணியிடமும், சீமானிடமும் இதுபற்றி விளக்கம் கொடுத்துவிடுங்கள்… இதனால் விழா நின்று விடப்போகிறது” என்று தோழர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பேசாத அல்லது எழுதாத ஒரு விசயத்திற்கு நான் ஏன் வலிந்து போய் விளக்கம் கொடுக்க வேண்டும்? இத்தனைக்கும் தோழர் கொளத்தூர் மணியோடு நான் வேறு விசயங்கள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்படி ஒரு அவதூறு பரப்பப்படுவதை பொறுட்டாக மதித்து என்னிடம் ஒரு வார்த்தைகூட அவர் கேட்டதில்லை.

நண்பர் சீமான் இதை உண்மை என்று நம்பியிருந்தால், அவரே என்னை தொலைபேசியில் அழைத்தாவது கேட்டிருப்பார். இப்படி இருக்கையில் நான் மட்டும் இவைகளை ஏன் ஒரு பொறுட்டாக மதிக்க வேண்டும்?

அரசியல் சார்ந்து நான் எழுப்புகிற கேள்விகளுககு உரிய விளக்கம் அளிக்க முடியாத அரசியல் எதிரிகளும், தனிப்பட்ட முறையில் என்மீது காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் கொண்ட என் ‘இனிய நண்பர்களும்’ பரப்புகிற அவதூறுகளுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?  (பொறாமை என்கிற உணர்வு-நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம்தான் வேலை செய்யும்)

பாரதிக்கே மறுப்பு எழுதிய எனக்கு இவர்களுக்கு மறுப்பு எழுவதுவதா முடியாது?

என் கருத்துகளுக்களை உரிய விவரங்களோடு, தர்க்கத்தோடு மறுத்து எழுதுபவர்களுக்கு மறுப்பு எழுதலாம். வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் என்ன செய்ய முடியும்?

தந்தை பெரியார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்றவர்கள், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்பினார்கள். ஆனால் அவைகளை ஒரு பொறுட்டாகவே மதித்ததில்லை தலைவர் பெரியார். பெரியாரை ‘தமிழனல்ல கண்டன்’ என்று தமிழ்த்தேசியவதிகள், தமிழறிஞர்கள் அவதூறு செய்தபோது மட்டும் தலைவர் இப்படிக் கேட்டார்:

தமிழர்களே! அட, மானங்கெட்ட தமிழர்களே! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம். நாயர்.

அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பி.தியாகராய செட்டியார்.

தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்?”

-விடுதலை நாளிதழ்

இந்த துணிச்சல், நேர்மை யாருக்கு வரும்?

தமிழர்களை ஏமாற்றி, ‘தமிழா நீ ஆண்ட பரம்பரை. இன்று அடிமைப்பட்டுக்கிடக்கிறாய்’ ‘தமிழ் இனம் உலகத்தின் மூத்த இனம்’ ‘தமிழ் என் மூச்சு’ என்றெல்லாம் ஏற்றி பேசி, தமிழர்களிடம் செல்வாக்கு பெற்று, தலைவனாக  மாறி நாட்டையே  பிடித்தவர்கள் மத்தியில், தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதை போன்ற  இப்படி ஒரு பதிலை தலைவர் பெரியாரைத் தவிர வேறு யாரால் தர முடியும்?

நான் இந்த சில்லரை விவகாரங்களுக்கு பதில் தரவேண்டும்மென்றால், தலைவர்போல்தான் பதில் தரவேண்டும்.

காந்தி தனது அரிஜன் பத்திரிகையில், டாக்டர் அம்பேக்ரின் இந்து மத எதிர்ப்பையும், அவரையும் விமரிசித்து விரிவான கட்டுரை எழுதினார். அதற்கு பதில் அளிக்க வந்த அண்ணல் அம்பேத்கர்:

சிறப்பான காரணங்கள் இருந்தால் தவிர, பொதுவாக என் எதிராளிகளோடு சர்ச்சையில் இறங்கும் வழக்கம் எனக்கு இல்லை. எனது எதிராளி ஒரு அனாமதேய ஆத்மா‘வாக இருந்திருந்தால், நானும் போனால் போகட்டும் என விட்டிருப்பேன். ஆனால், மகாத்மாவே என் எதிராளியாக இருப்பதால், அவர் முன்வைத்துள்ள வழக்கை நான் சந்திக்க முயன்றாக வேண்டும் என்றே கருதுகிறேன்.

நானும் அண்ணலைப்போல்தான். சிறப்பான காரணங்கள் இருந்தால்தான் விவாதித்திறகு வருவேனே தவிர, என்னை கடுமையாக திட்டுகிறார்கள் என்பதற்காகவே இந்த சில்லரைகளுக்கும், சில்லரை விசயங்களுக்கும் பதில் தரவேண்டிய அவசியம் எனக்கில்லை.

Exit mobile version