இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா?
–தமிழ்ப்பித்தன்
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,
பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
‘அண்ணாதுரை முதலியாரின் மறைவுக்குப் பிறகு முதல்வராகும் தகுதி நெடுஞ்செழியன் முதலியாருக்கும், அன்பழகன் முதலியாருக்கும்தான் இருந்தது. அதை கருணாநிதி தட்டிப் பறித்துவிட்டார்’ என்கிற பொய்யான காரணத்தை உண்மையாக நம்பி, அதை உள் அரசியலாக வைத்து, வெளியில் ‘கருணாநிதி தமிழன விரோதி, திராவிட இயக்க கொள்கையையே குழிதோண்டி புதைத்துவிட்டார்’ என்று முற்போக்காக குற்றம் சாட்டி, திராவிட இயக்க எதிர்ப்பாளர்களான பழ. நெடுமாறனையும், ராமதாஸையும் – கருணாநிதி எதி்ர்ப்பிற்காகவே ஆதரிக்கும், முதலியார் பெரியாரிஸ்ட்டுகளின் திராவிட இயக்க ‘பாசம்’,
தலித் அரசியல் என்று பொதுவாக பேசினாலும், தன் ஜாதித் தலைவரை மட்டும் ஆதரிக்கிற, சில நேரங்களில் தலித் விரோத ஆதிக்க ஜாதி தலைவர்களை ஆதரித்தாலும்கூட, உட்ப்பிரிவு தலித் ஜாதி தலைவர்களை ஒப்புக்குக்கூடஆதரிக்க விரும்பாத, தலித் ‘ஒற்றுமை’ அரசியல் பேசுகிற தலித் ‘அறிவுஜீவி’,
மார்க்சிய இயக்கத்தில்கூட தன் ஜாதிக்காரன் இருக்கிறானா எனறு தேடிப் பார்த்து ‘இயங்கியல்’ அடிப்படையில் தொடர்பு வைத்துக் கொள்கிற, பார்ப்பன மார்க்சிஸ்டின் ‘வர்க்க’ உணர்வு,
நவீன அறிவியல் வளர்ச்சியை அவ்வப்போது, ‘அப்டேட்’ செய்து கொண்டு ஒரு விஞ்ஞானியைப்போல் பேசி, தன்னை இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறிமுகப்படுத்திக்கொள்ளும் வைரமுத்து போன்ற பல திரைமுற்போக்காளர்களின் சுயஜாதி பாசம்,
‘தமிழ்மண், தமிழனின் மண்’ என்று நீட்டி முழங்கிவிட்டு, தேவர் ஜெயந்தியின்போது , ‘போற்றிப் பாடடிப் பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ எனறு சுருதி கூட்டுகிற சில தமிழ்த்தேசியவாதிகள்,
பகுத்தறிவாளர்களில் யார் ‘நம்மாளு’? என்று பகுத்து அறிகிற இந்த முற்போக்காளர்களின் சுயஜாதி உணர்வு, பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற ஆதிக்க ஜாதிகளை ஆதரிக்கிற அல்லது விமர்சிக்க மறுக்கிற தன்மை, அறியாமையால் ஆனதல்ல. மிகச் சரியாக திட்டமிடப்பட்டது. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் லாபமாக இருக்கிறது. ஓட்டாகவோ, பணமாகவோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கை பெறுவதற்கான வழியாகவோ இருக்கிறது. அல்லது அந்த ஜாதியை விமர்சித்தால், தன் கட்சியில் இருக்கிற ‘அந்த’ஜாதிமுற்போக்காளர்களின் மனம் புண்பட்டு, அவர் வேறுகட்சிக்கோ, அமைப்பிற்கோ போய் விடக் கூடாது என்கிற முன் எச்சரிக்கை உணர்வும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் இசைஞானி இளையராஜாவின் இந்துமத இறைநம்பிக்கை இதுபோல் ஆனதல்ல. ஒரு எளிய பக்தனுக்கு இருப்பதுபோல், முழுமையான அறியாமையால் ஆனது.
இந்துமதம் என்பதே ஜாதிதான். இறைநம்பிக்கையைவிட ஜாதி நம்பிக்கைதான் ஆபத்தானது. அதுஒன்றுதான் இந்து மதத்தை பாதுகாப்பது. ‘ஜாதியை பாதுகாக்கிறது’ என்பதற்காகத்தான் தந்தை பெரியார் இந்துமத்தையே எதிர்த்தார். ஆனால் ‘நம்மாளுகளில்’ பலர் இந்து மதத்தையும் கடவுளையும் எதிர்த்துவிட்டு ஜாதியை பாதுக்காக்கிறார்கள்.
ஆக, இந்த ‘பகுத்தறிவாளர்களின்’ சுயஜாதி உணர்வைவிட, பக்திமானான சுயஜாதி உணர்வற்ற இசைஞானி இளையராஜாவின் இறைஉணர்வு ஆபத்தானதல்ல. அறியாமையால் ஆனது. அப்பாவித்தனமானது.
‘முற்போக்காளர்’களின் ஜாதி அபிமானத்தைவிட, ‘பிற்போக்காளர்’களின் ஜாதி உணர்வற்ற இறைஉணர்வு முற்போக்கானது.
தொடர்புடைய பதிவுகள்:
இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!
இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்
பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

