Site icon வே. மதிமாறன்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே?

க.டென்னீஷ், பெரியபாளையம்.

“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார்.

அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள்.

அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம்.

99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.

சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்ப்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

Exit mobile version