
போலி மருந்துகளைவிற்று கோடிகோடியாக பணம் சம்பாதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அரசின் இந்த அசுர வேகம் வியப்பளிக்கிறதே?
–சதிஸ்
இந்த நடிவடிக்கை மக்கள் மீது உள்ள அக்கறையினால் அல்ல. அப்படியானால் உணவுப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களை கலப்படம் செய்கிறவன், உணவின்றி மக்கள் பட்டினியால் சாகும்போதும், உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கிறவன் இவர்கள் மீதும் இதே வேகத்தை காட்டியிருக்கவேண்டும்.
போலி மருந்துகளினால், வர்த்தக ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியப் பெரு முதலாளிகளும்தான்.
மிகப் பெரும்பான்மையான மருந்துகளில் ஒரு மாத்திரையின் தயாரிப்பு செலவு, சில பைசாக்களிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால், மக்களிடம் நூறு மடங்கு லாபம் வைத்துதான் விற்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய கொள்ளை அடிப்பவர்கள், பன்னாட்டு கம்பெனிகளும், உலகப் பெரும் பணக்காரர்களான இடைத்தரகர்களும்தான். போலி மருந்துகளினால், பன்னாட்டு கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு பிரச்சினை என்பதால்தான் இந்த வேகம்.
குறிப்பிட்ட மருந்துகளை சாப்பிட்டால் அது தற்காலிகமாக நிவாரணம் தரலாம். ஆனால், மிக கடுமையான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான மருந்துகள், மிக தாராளமாக இந்திய அரசு அனுமதியோடு கொள்ளை லாபம் வைத்து இந்திய நோயாளிகளின் வயிற்றில் புதைக்கப்படுகிறது.
அரசு அனுமதியோடு முறையாக மருந்துக்கடைகளில் விற்கப்படுகிற பல மருந்துகளே போலி மருந்துகள் தான் என்பதை தெரிந்துகொண்ட சமூகவிரோதிகளான சில மருந்து வியாபாரிகள், காலவதியான மருந்துகளை குப்பைகளில் இருந்து பொறுக்கி விற்று இருக்கிறார்கள்.
போலி மருந்துகளைத் தேடி எல்லா இடங்களிலும் சோதனை போடுகிறார்கள் அதிகாரிகளும், காவல் துறையினரும். அரசு மருத்துவமனைகளில் போய் சோதனைப் போடடுப் பார்க்கட்டும். அங்கே தேவையான அளவிற்கு உயிர் காக்கும் அத்தியாவசியமான மருந்துகள் இல்லை. காலவதியான போலி மருந்துகள் கூட இல்லை.
அரசு மருத்துவமனைகளில், அவசர அறுவை சிகிச்சைக்கு அனுமதியாகிற நோயாளிகள் உரிய கருவிகள், மருந்துகள் இல்லாததால் பல மாதங்கள் மருந்துவமனையிலேயே சும்மா படுத்துக்கிடக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நோய் முற்றி மேலும் தொந்தரவு. ஏற்கனவே வறுமையின் துயரத்தில் இருக்கிற அவர்களுக்கு பல மாதங்களாக வேலைக்கும் போக முடியாமல் இருப்பதால், குடும்பமே ஒரு வேளை உணவிற்கு அவதி.
இப்படி பலரின் வாழ்க்கையை சீரழிக்கிற இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, அதிக விலை வைத்து மருந்து கம்பெனிகள் அடிக்கிற கொள்ளையை தடுத்து, மருந்துகளை குறைந்த விலைக்கு விற்க மருந்து கம்பெனிகளுக்கு அரசு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும்.
நடுத்தர மக்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கிற ஆஸ்மா, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இருதய நோய் போன்றவற்றிற்கான விலை அதிகம் உள்ள மிக முக்கியமான மருந்துகளை அரசே தயாரித்து மானியத்தின் மூலம் பாதிவிலைக்கு தர வேண்டும்.
அரசு மருந்துவமனைகளில் சிகிச்சை பெரும் எளிய மக்களுக்கு, எல்லா மருந்துகளும் இலவசமாக, உடனடியாக கிடைக்கச் செய்யவேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகள்தான் போலி மருந்துகளை ஒழிக்குமே தவிர, அதற்கு மாறாக வேறு எந்த நடவடிக்கையும் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அந்த நடவடிக்கைகள் பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை கொண்டு வந்து குடி வைச்சக் கதையாகத்தான் ஆகும்.
முதலாளிகளும், தனியார் மருத்துவமனைகளும், தனிநபர்களும் கொள்ளையடிப்பதற்குத்தான் பயன்படும்.
இப்போ போலி மருந்து விக்கிற இந்த திருட்டுக் கும்பல புடுச்சி சிறையில் தள்ளுனா, இன்னொரு திருட்டுக் கும்பல் உருவாகமலா இருக்கும்? போலி மருந்து கும்பல கடுமையாக தண்டிக்கிறது எவ்வளவு சரியோ, அதைவிட மருந்து கம்பெனிகள் மருந்துகளின் விலையை குறைக்க அரசு கடுமையான நடிவடிக்கைகளை எடுப்பது ரொம்ப ரொம்ப சரி.
குப்பையில் இருந்து மருந்த பொறுக்குனா, கொஞ்நஞ்ச பணமா? கோடிக்கணக்கல இல்ல கிடைக்குது… இந்த மோசடியை செய்வதற்கு அடிப்படைக் காரணம், அந்த மருந்தோட உண்மையான ஒரிஜனல் அநியாய விலைதான்.
கடுமையான தண்டனைன்னு தெரிஞ்சும், சாரயத்திற்கே கள்ளச் சாரயம் போடுறான். மருந்துக்கு போலி மருந்து போடமா இருப்பானா? இது அதவிட லாபம். அதவிட ‘கவுரவமான’ வேலை.
இனி பணத்துக்காக எதையும் செய்ய துணிஞ்ச எவனும் இந்த மோசடியை செய்வான்.
ஏப்ரல்8, 2010 அன்று எழுதியது.
கையில் கத்தியுடன் வருவது வழிப்பறிக்காறர்கள் மட்டுமல்ல; டாக்டர்களும்கூடத்தான்
