Site icon வே. மதிமாறன்

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

ஆவசே அச்சுதானந்தன்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக பிராந்தியக் கட்சிகள், தேசியகட்சிகளைப் போலவும், கேரள தேசியகட்சிகள் பிராந்தியக் கட்சிகளைப் போலவும் நடந்து கொள்கின்றன.

பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று அறிவித்ததும், உச்சநீதிமன்றம் தலையிட்டு அதை உறுதி செய்த நிலையிலும், கேரள அரசியல்வாதிகள் தங்கள் அற்ப அரசியல் லாபங்கங்களுக்காக தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளை உசுப்பி விட்டு இனவாத அரசியல் நடத்துகிறார்கள்.

காங்கிரசின் களவானித்தனம் நாடறிந்ததே. குறிப்பாக தமிழர்கள் நன்கு உணர்ந்ததே. அதேப்போல், சிபிஎம் கட்சியின் சேட்டைகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அந்த சேட்டை இம்முறை கூரை மீது எறி கொள்ளி வைக்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

இன்றைய கேரள முதல்வர் காங்கிரஸ் உம்மன்சாண்டி, பெரியார் அணை விவகாரத்தில் தடாலடி அறிக்கைகளை துவக்கி வைத்து, கடந்த சிபிஎம் அச்சுதானந்தன் அரசை குற்றவாளியாக்கும் முயற்சியிலும், கேரள மக்களின் செல்வாக்கையும் பெற முயற்சிக்கிறார் என்று அறிந்தவுடன்,

முன்னாள் கேரள முதல்வர் சி.பி.எம் வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன், ஆக்சன் கிங் அர்ஜுன் போல் பொங்கி, ‘ரெண்டுல ஒண்ணு பாக்காம விடமாட்டேன்’ என்று உம்மன்சாண்டியால், தன் வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயை ‘உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், புதிய அணை கட்டுவதற்காண நீதி திரட்டுவது’ என்று கேரளா முழுக்க பற்ற வைக்கிறார்.

‘பெரியாறு அணையை இடிப்பது சாத்தியப்படாது, புதிய அணை ஒருபோதும் கட்டமுடியாது’ என்பது உம்மண்சான்டிக்கும், அச்சுதானந்தனுக்கும் தெளிவாகவே தெரியும். தெரிந்தும் ஏன் இந்த தேர்தல் பிரச்சாரம்?

இந்த இனவாத பிரச்சாரம், கேரளா வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் வாழ்கிற மலையாளிகளுக்கும் ஆபத்தானது என்பதை உணர்ந்தே செய்கிற இவர்களை என்ன வார்த்தைகளால் திட்டுவது?

அதுவும் ஒரு கம்யுனிஸ்டுக்கு இதுவா அழகு? இவர்களா கம்யுனிஸ்டுகள்?

மதவாத அரசியல் நடத்துகிற மோடிக்கும், சிபிஎம் ன் இந்த இனவாத செயலுக்கும் என்ன வித்தியாசம்?

இறைநம்பிக்கையாளர்கள், ஒரு பிரச்சினையின் கடைசி வாக்கியமாக, தவறு செய்பவர்களை, ‘அந்தக் கடவுள் உன்ன சும்மா விடமாட்டான்’ என்று சபிப்பார்கள். இது இயலாமையின் வெளிபாடு.

இதையே அரசியல் கோபமாக, அறிவியல் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால், சிபிஎம் மை பார்த்து இப்படி சொல்லலாம்,

‘மக்கள் இவர்களை மன்னித்தாலும், மார்க்சியம் ஒருபோதும் மன்னிக்காது.’

தொர்புடையவை:

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

Exit mobile version