Site icon வே. மதிமாறன்

கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?

‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை?

-வெ. பாலாஜி, சென்னை.

ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல.

‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள்.

யாரு வேண்டுமானாலும் எளிதில் பாடிவிட முடிகிற, பேசுவது போன்றே அமைந்த பாடல். பொறுப்பற்று. ஊதாரித்தனமாக இருப்பதை நியாயப்படுத்துகிற வார்த்தைகள். ஆங்கிலம் தெரியாதவர் எப்படி ஆங்கில வார்த்தைகளை கொச்சையான முறையில், பயன்படுத்துவாரோ அதுபோன்ற மொழி நடை.

இந்த நடை இந்தியா முழுக்க பெரும்பான்மையானவர்களால், பேசப்படுகிற, புரிந்துகொள்ளப்படுகிற நடை. இவைகளால்தான் அந்த பாடல் ‘இந்திய தேசிய பாடலாக’ நாடு முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.

எல்லா மதக்காரர்களும் தாங்கள் வணங்குகிற கடவுள் பற்றிய பக்திப் பாடல்களில் தரக் குறைவான, பொறுப்பற்ற வார்த்தைகள் வந்தால், கெலைவெறி கொள்கிற அளவிற்கு மாறிவிடுவார்கள்.

இப்படி, தங்கள் இறை நம்பிக்கையில் ஒழுக்கமானவர்களாக, நேர்மையானவர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், சமூகம் சார்ந்து வியாபாரம், அரசியல், சினிமா, பத்திரிகை, திரை இசை என்று வருகிறபோது அதில் எவ்வளவு சீர்கேடுகள் இருந்தாலும், அதை பொறுத்துக்கொள்கிறார்கள், விரும்புகிறார்கள். பல நேரங்களில் அந்த சீர்கேடுகளை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள், என்பதை நிரூபிக்கிறது இந்தப் பாடல்.

பிரதமர் மன்மோகன் சிங் நடிகர் தனுசுக்கு கொடுத்த விருந்தின் மூலம் அந்த முறையை அங்கீகரித்திருக்கிறார். இனி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ வையும் தனுஷை வைத்து, இதுபோன்றே பாட வைக்கப்பாரோ!.

குறிப்பு:

‘சூப்பர் ஸ்டாரின் மருமகன், உலக நாயகனின் மருமகனாக மாறுகிற முயற்சிகளில் இருக்கிறார்’ என்று வருகிற பத்திரிகை செய்திகளைப் பார்த்தால், தனுஷ் மீது ரஜினிதான் ‘கொலவெறி’யில் இருப்பார் போல.

அதுசரி. பாடலுக்கு இடையில் தனுஷ், “மாமாநோட்ஸ் எடுத்துக்கோஅப்படியே கையில ஸ்னாக்ஸ் எடுத்துக்கோ..” என்று யாரை சொல்கிறார்?

சூப்பர் ஸ்டாரையா? உலக நாயகனையா?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

Exit mobile version