Site icon வே. மதிமாறன்

`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’

CIMG9216
‘காஞ்சிபுரம் என்றால் ஜெயேந்திரன்’ என்று இருந்த இழிவைத் தகர்த்து, காஞ்சிபுரம் என்றால், ‘காஞசி மக்கள் மன்றம்’ என்பதை ஜெயேந்திரனுக்கு எதிரான போராட்டங்களின் மூலமே திருத்தி எழுதிய மக்கள் மன்றத் தோழர்களோடு ஒரு நாள்.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் இன்னும் பல இடங்களில் ‘மக்கள் மன்றம்’ என்றால் ஒரு மரியாதையும் பயமும் இருக்கவே செய்கிறது. அதற்கு மாறாக எளிய மக்களிடமோ ‘மக்கள் மன்றம்’ என்றால் பேரன்பு வழிகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் தோழர்கள், சில மாதங்களுக்கு முன் என்னிடம்: ‘நீங்கள் ஒரு நாள் முழுக்க காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களோடு இருக்க வேண்டும்’ என்று ஆர்வத்தோடு கேட்டதை எனக்கான அங்கீகாரமாக கருதி,
12-11-2014 அன்று காலை 11.30 லிருந்து.. மாலை 7 மணி வரை கருத்தரங்கம், கலந்துரையாடல் என்று கலந்து கொண்டேன். சிறுவர், சிறுமிகள் உட்பட அவர்களின் கலைக் குழுவினர் பாடியப் பாடல்கள், உணர்வும் இனிமையுமாய் நிரம்பி வழிந்தது.

தன் உயிர் தந்து மூவர் உயிர் காத்த செங்கொடி, மக்கள் மன்றத்தின் குழந்தை. அந்தத் தியாகப் பெண்ணின் பெயரையே, அந்த ஊரின் பெயராகச் செங்கொடியூர் என்று மாற்றியிருக்கிறார்கள். அதற்குத் துணையாக தலைவர் இருந்திருக்கிறார்

அவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர், இதற்கு முன் அவர் ஒரு ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்திருக்கிறார்.
“அங்குச் சம்பளம் கிடையாது. சவுக்கடி தான். என்னை அங்கிருந்து மீட்டு தலைவராக்கியதே இவர்கள் தான்” என்று மக்கள் மன்றத் தோழர்கள் மகேஷ், ஜெசி யை நோக்கி கை நீட்டுகிறார் தலைவர்.

தோழர்கள், நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதையும் கூட நினைவு கூர்ந்ததும், என் எழுத்தின் மூலமாக என் மீது அவர்கள் வைத்திருக்கிற அன்பும், மரியாதையும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததைவிடவும்; எனக்குள் இருந்த சில குறைபாடுகள் என் மனதில் தோன்றி என்னை எச்சரித்தன:
`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’ என்று.

என்னையே நான் விமர்சனத்தோடு பார்த்துக் கொள்வதற்குக் காரணமாய் இருந்த, அன்பிற்கினிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

15 November at 17:04

Exit mobile version