
சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திலகராஜன் அவர்கள், 4-10-2015 அன்று மனிதநேய மக்கள் கட்சி நடத்திய திப்புச் சுல்தான் பற்றிய கூட்டத்திற்கு வந்திருந்து என் பேச்சை முழுமையாகக் கேட்டு;
‘துப்பாகிகள் கிருமிகள் எஃகு’–‘கூலித்தமிழ்’-‘வரலாற்றில் தேவதாசிகள்’-‘practical English Usage‘ ‘திரை இசை அலைகள்’ (3 தொகுதிகள்) நான் குறிப்புகள் எழுதுவற்கு பெரிய அளவிலான 10 க்கும் மேற்பட்ட சிறப்பான கட்டமைப்போடு உள்ள நேர்த்தியான வெளிநாட்டு நோட் புக்குகள் பரிசளித்தார்.
அவரை அன்று தான் சந்தித்தேன். அதற்கு முன் (ஒரு மாதத்திற்குள் தான்) தொலைபேசியில் அழைப்பார். என் எழுத்துக்கள், பேச்சுகளைப் பற்றி மிக நுட்பமாக விளக்கி பாராட்டுவார். அன்று என்னைச் சந்திப்பதற்காகவே அவரின் நண்பர்களோடு வந்திருந்தார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு நெருக்கமான தோழர் என்பதைவிடவும், மூத்த சகோதரரை போலவே என் மீது அன்பு செலுத்துகிறார்.
சென்னையில் சிறப்பான உணவு வகைகள் உள்ள ஹோட்டல்களுக்கு என் வீட்டுக்கு வந்து தன் காரில் அழைத்துப் போய் வாங்கிக் குவிக்கிறார். ‘டி.வி. விவாதங்களில் வருகிறீர்கள். பாக்க பளிச்னு தெரியனும். நிறைய டிரஸ் எடுத்துக்குங்க..’ என்று ஒரு நாள் பெரிய துணிக்கடையில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்.
அதைவிடச் சிறப்பு அரசியல், இலக்கியம், சினிமா என்று எதைப் பற்றியும் நுட்பமாகவும் சுவரஸ்யமாகவும் இருக்கும் அவருடைய உரையாடல். தமிழை விடவும் ஆங்கிலத்தில் அதிகம் படிக்கக் கூடியவர். ஆழமான ஆங்கில மொழி அறிவு உள்ளவர். டாக்டர் அம்பேத்கர் – பெரியார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
நான் வெளியூர் கூட்டங்களுக்குச் செல்லும்போது, ‘வாங்க நம்ம கார்ல போலாம்’ என்று வீட்டுக்கு வந்து அழைத்துக் கொண்டு போய், கூட்டம் முடிந்த பிறகு ஹோட்டலுக்குக் கூட்டிபோய், தடபுடலான விருந்தோடு உபசரித்து (எப்போதுமே ‘நான்வெஜ்’ தான். நமக்கும் அதான் பிடிக்கும்) மீண்டும் நள்ளிரவுக்கு மேல் என்னை வீட்டில் விட்டு, அதன் பிறகு அவர் வீடு போய்ச் சேருவார்.
என்னை விடவும், அதிகப் பரபரப்பான பணியில் இயங்கக் கூடியவர். மூத்த முன்னணி வழக்கறிஞர். அவரிடம் வழக்கு கொடுப்பவர்களும், நண்பர்களும் பிரபலமான அரசியல் பிரமுகர்கள், மத்திய அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என்று பெரும் பட்டியலே இருக்கிறது. அவர்களில் சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். நான் பேசும் கூட்டத்திற்கும் சிலரை அழைத்தும் வந்திருக்கிறார்.
அந்தப் பிரபலங்களிடம் என் பாதுகாப்பு குறித்து அக்கறையோடு பேசுகிறார். அவர்களோ அவரோடு அதிக நேரம் இருப்பதற்குப் பிரிய பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், மரியாதைக்குரிய மூத்த வழக்கறிஞர் திலகராஜன் அவர்களோ என்னை அவரோடு அழைத்துச் செல்வதில் அதிக அன்பு காட்டுகிறார்.
இவரின் அன்பிற்கு நான் என்ன செய்ய முடியும்? அவர் கூப்பிட்டு போற ஹோட்டல்ல போய் நல்லா சாப்பிடத்தான் முடியும்.
