நீங்கள் ‘கல்வி’ கடவுள் சரஸ்வதியை பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில்;
‘உங்கள்’ சரஸ்வதியோ, மோடி அரசோடு இணைந்து ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் உங்கள் குழந்தைகளின் கல்வியைக் குழித் தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
*
மே நாளை அடகு வைத்து ஆயுதபூஜை கொண்டாட்டம்
*
இந்து பண்டிகைகள் ஜாதி வேறுபாடுகளை பாதுகாப்பதில் நுட்பமான அணுகுமுறையை கொண்டவை. ஜாதியும் பண்டிகையும் மனு காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றைய நவீன காலத்திலும் இருக்கிறது.
புதிய தொழில்துறைகள், முதலாளிகள், தொழிலாளர்கள் என்று உருவான பிறகு நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த பல மோசமான விசயங்களை முதலாளித்துவம் ஒழித்துக் கட்டி கொஞ்சம் மேன்மையான நிலைக்கு மாற்றியபோதும்,
அதனால் ஜாதியை ஒன்றும் செய்ய முடியாததைப் போலவே, ஜாதியக் கட்டமைப்பை பலப்படுத்துகிற இந்து பண்டிகைகளை வர்த்தகமாக மாற்றி கொள்ளையடிப்பதைத் தாண்டி ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதில் வேடிக்கை ‘இந்து-ஜாதி பண்டிகை’களை ஆதிக்க ஜாதிகள் தீண்டாமையோடு தங்கள் ஜாதிக்கான செல்வாக்காக கொண்டாடுவதைப்போல்,
அடிமை ஜாதிகளும் தங்களுக்கான அடையாளமாக கொண்டாடுகிறார்கள்.
அதுபோலவே, முதலாளிகள் இந்து பண்டிகைகளை எப்படி வியாபாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பார்க்கிறார்களோ, அப்படியே கம்யுனிஸ்டுகளும் பார்க்கிறார்கள்.
அதனால்தான் போனஸ் தொகை கூடுதல் குறைவு என்பதுதான் கம்யுனிஸ்டுகளால் நடத்தப்படுகிற தொழிற்சங்கங்களின் பிரச்சினையாக இருக்கிறதே தவிர, அது ‘தீபாவளி’ என்ற பாண்பாடற்ற பண்டிகையை முன்னிட்டு தரப்படுவதை பெருமையாகவே கருதுகிறார்கள்.
பெரியார் இயக்கங்கள், தமிழ் உணர்வாளர்கள் கூட ‘தீபாவளிக்கு பதில் பொங்கலுக்கு போனஸ் தர வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் கம்யுனிஸ்டுகளோ தீபாவளியை பொங்கலை விட மட்டுமல்ல, மே நாளை விடவே சிறப்பாக பார்க்கிறார்கள்.
‘தீபாவளிக்கு பதில் மே தினத்திற்குதான் போனஸ் தர வேண்டும்’ என்ற கோரிக்கை கம்யுனிஸ்டுகளிடமே ஒரு சிந்தனையாகக் கூட இல்லாத தேசத்தில், ஒரு போதும் தொழிலாளர்களிடம் வர்க்க மனோபாவம் உருவாக வாய்ப்பே இல்லை.
ஆக, நவீன தொழில்துறைகள் அதிகமாக உருவான பிறகும், தொழிலாளர் வர்க்க உணர்வுக்கு அல்லது தொழிலாளர் மனோபாவத்திற்கு தொழிலாளர்கள் மாறாமல் இருப்பதில் இந்து பண்டிகைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதில் குறிப்பாக ஆயுதபூஜை, தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடாமல் தடுப்பதில் மிகத் தீவிரமாக வினையாற்றுகிறது.
ஆயுதபூஜையில் ஆட்டோ ஸ்டாண்டு பாட்டு கூத்துமாக களைக்கட்டியிருப்பதினால் தான், அவர்களின் தினமான மே நாளை ஒரு நாளாகவே அவர்களே மதிப்பதில்லை.
ஆயுதபூஜையை கொண்டாடி விட்டு, மே நாளை கிடப்பில் போட்டால், ஆட்டோ மார்வாடியிடம்தான் அடமானத்தில் கிடக்கும்.
11 October
