லண்டனில் பெரியார்+அம்பேத்கர் படிப்பு வட்டம் நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களான சீமான் ஆதரவாளர்கள் பெரியாருக்கு எதிராக முழக்கமிட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.
அவர்களைச் சீமான் ஆதரவாளர் எனச் சுருக்கிவிட முடியாது. பெரியார் திமுக எதிர்ப்பு பிரபாகரன் ஆதரவாளர்கள்.
சீமானையே திமுக, பெரியார் எதிர்ப்பு பிரபாகரன் ஆதரவாளர் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறார்கள். சீமானும் அவர்களுக்காகதான் அதைச் செய்கிறார். அதன் இன்னொரு முகமாக அவருக்கு இங்கு பார்ப்பன லாபியும் சங்கி ஆதரவும் கிடைக்கிறது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் எதிர்ப்பாளர்கள் கிடையாது. ஆனாலும் அவர்களை இவர்கள் பெரியாருக்காக எதிர்க்கிறார்கள்.
இனி வெளிநாடுகளில் பெரியார் பற்றியே பேசக்கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம்.
இதில் பிரபாகரனையும் பெரியாரையும் ஆதரிக்கிற லண்டன் வாழ் ஈழத்தமிழர்களின் ஆதரவான பங்களிப்பு என்ன?
பிரபாகரனை முன்னிறுத்தி சீமானை அம்பலப்படுத்த முடியாது.
பெரியாரிஸ்ட் பெயரில் திமுகவை எதிர்க்கிற பிரபாகரன் ஆதரவாளர், இலங்கைத் தமிழர் மத்தியில் சீமானுக்கு குட்டிப் போட்டியாளராக உருவாக முடியும். வேறொன்றும் முடியாது.
பெரியார் அம்பேத்கரை இணைத்து மிகத் தீவிரமாக 2007லிருந்து இயங்கி வருகிறேன். 2008, 9 காலகட்டங்களில் பெரியார் இயக்கங்களில் பெரியாரை பேசுவதே குறைந்து பிரபாகரன் குறித்துப் பேசுவது உயர்ந்த காலகட்டத்தில் அம்பேத்கரைத் தீவிரமாக முன்னெடுத்தேன்.
‘அம்பேத்கர் t-shirt ஏன் அணியவேண்டும்-தலித்தல்லாதவர்களுக்கும் அவர் தலைவர்’ என விளக்கி ஒரு தொடரும்.
அதையே ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற தலைப்பில் புத்தகமாக 2 ஆண்டுகளில் 6 பதிப்புகள் கொண்டுவந்தேன்.
பிறகு அம்பேத்கர் t-shirt, அம்பேத்கர் திரைப்பட வௌயீடு எனச் செயல்பட்ட காலங்களில், ‘மதிமாறன் உளவுத்துறையின் ஆள்’ எனவும் குற்றம் சாட்டப்பட்டேன்.
பெரியாரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்திய அம்பேத்கரிஸ்டுகள் அம்பேத்கரைப் புறக்கணிக்கிற பெரியாரிஸ்டுகள் எனத் தோழமையானவர்களிடமும் புறக்கணிப்பையும் எதிர்ப்பையும் கணிசமாகச் சேர்த்துக் கொண்டேன்.
ஆனாலும் ஓயாத அலையாக அம்பேத்கர்-பெரியார் என செயல்பட்டதின் விளைவாகப் பல இளைஞர்களை அதன் அலையில் கரைசேர்க்க முடிந்தது.
அதன் விளைவாக அதன் பிறகுதான் தமிழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் உருவானது.
வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட முதல் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் சிங்கப்பூரில்தான். ஜெகன் தங்கதுரை, சு. விஜயபாஸ்கர், அசோக், ராஜராம், மில்டன் இன்னும பல தோழர்கள் அதை வடிவமைத்தார்கள்.
2015 ஆண்டு நான்தான் அதை அங்குச் சென்று துவக்கிவைத்தேன். ஏரளாமானபோர் கலந்து கொண்டார்கள்.
பிறகு அது அமெரிக்கா, லண்டன் என இணையவழி நிகழ்ச்சியாக மலர்ந்தது. தமிழகத்திலும் பெரியார் இயக்கங்களும் பரவலாகப் பேச ஆரம்பித்தார்கள்.
அதுவரை பாரதி, காந்தி என தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த தமுஎகச (CPM) வைச் சேர்ந்தவர்களும் பாரதிதாசனை இணைத்துக் கொண்டு பெரியார், அம்பேத்கரைத் தீவிரமாக பேசினார்கள்.
அம்பேத்கர் பட வெளியீட்டில் முக்கிய பங்காற்றினார்கள்.
பெரியாரும் அம்பேத்கரும் சந்தர்ப்பவாதிகள். ஜாதி ஒழிப்பிற்கு அவர்களிடம் தீர்வு இல்லை என விமர்சித்த மகஇக தோழர்களும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் உருவாக்கினார்கள்.
இந்த 15 ஆண்டுகளில் சங்கிகளைத் தெறிக்கவிடுவது, இணைந்த கைகளாக அம்பேத்கர் – பெரியார் அரசியல்தான்.
பெரியாரை எதிர்க்கிற தலித் அரசியலும் அம்பேத்கரைத் தவிர்க்கிற திராவிட அரசியலும் சங்கிகளுக்கும் ஜாதியவாதிகளுக்கும் தோதானவர்களாகத்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெரியார் – அம்பேத்கர் அரசியல்தான் சங்கிகளுக்குச் சங்கு ஊதுகிற அரசியல்-வே. மதிமாறன்.
