பெரியாரா? பிரபாகரனா?

சீமானும் சீமானை எதிர்ப்பவர்களும் பிரபாகரனை முன்னிறுத்தி சண்டை செய்கிறார்கள். சீமானிடம் இருந்து பிரபாகரனை மீட்கும் நோக்கம்தான் சீமான் எதிர்ப்பாளர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

ஆனால், அவர் இழிவாகப் பேசுவது பெரியாரை.

பிரபாகரனை முன்னிறுத்தி சீமானை வீழ்த்த முடியாது. உலகெங்கிலும் இருக்கிற பிரபாகரன் ஆதரவாளர்கள் பெரியாரிஸ்டுகளோ திராவிட இயக்க ஆதரவாளர்களோ அல்ல பெரும்பாலும் அதற்கு எதிரானவர்கள்.

சீமானை அவர்கள் கொண்டாடுவது பிரபாகரன் ஆதரவிற்காக மட்டுமல்ல; பெரியார், திமுக எதிர்ப்பிற்காகவும்தான். அதை அவர் பிரபாகரன் பேரில் செய்வதினால் அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

ஈழ விடுதலைக்காக அர்பணிப்போடு போராடிய பிரபாகரனைத் தமிழ்நாட்டின் தமிழர்களின் தலைவராக சித்தரிக்கிறார் சீமான். அதையேதான் சீமான் எதிர்ப்பாளர்களும் செய்கிறார்கள்.

100 ஆண்டுகளில் தமிழர்களின் மொழி, கல்வி, வேலை என எல்லாவற்றிலாம் நீதிக்கட்சி, பெரியார், அண்ணா, கலைஞரின் பங்களிப்பு மகத்தானது என்ற பெருமிதத்தோடு ஒரு வார்த்தையில் சுருக்கிவிட முடியாது.
(பெருந்தலைவர் காமராஜரின் சிறப்பையும் பெரியாரின் பின்புலத்தில்தான் பார்க்க வேண்டும்)
இவர்களின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டால்; ராஜாஜியும் பக்தவச்சலமும் பயமுறுத்துகிறார்கள்.

சீமானும் இன்னும் பிற திராவிட எதிர்ப்பாளர்களும் பிரபாகரனை முன்னிறுத்தி ராஜாஜியின் இருண்ட காலத்தைதான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரிந்துரைக்கிறார்கள்.

சீமானை அம்பலப்படுத்துகிற திராவிட இயக்க ஆதரவாளர்களும் பிரபாகரனைத் தமிழ்நாட்டின் தலைவராக அடையாளப்படுத்துவதின் வழியாக தன்னையறியாமல் அதையேதான் செய்தார்கள். செய்கிறார்கள். இருவரும் சந்திக்கிற புள்ளி இதுதான்.

இதனால் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், ஜாதி ஒழிப்பிற்கான சட்ட எரிப்புப் போராட்டம்,
நீதிக்கட்சி, திமுகவின் செயல்பாடுகள், பெரியாரின் சிறப்புகள் பிரபாகரனை முன்னிறுத்தியதின் விளைவாக இருட்டிப்பு செய்யப்பட்டன அல்லது பாராமுகமாக்கப்பட்டது.

நீதிக்கட்சி, பெரியார், திமுக மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைத் தவிர்த்து விட்டால் தமிழ்நாட்டில் தமிழர் நலன் எதுமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சீமான் போலவே திமுகவை கடுமையாக விமர்சிக்கிற
திராவிட இயக்க ஆதரவாளர்கள் சீமானைப் போலவே பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதராக பார்க்கிறார்கள் என்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு புலிகளுக்கு எதிராக அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையை ஆதரித்துப் பேசிய மா.பொ.சி யை சீமான் கொண்டாடுகிறார். ஈழத் தமிழர்களும் கோபிப்பிதில்லை.

இப்போதும் சீமானுக்கு எதிராக வைகோவின் பங்களிப்பு வரை நினைவுபடுத்திப் பேசுகிற திமுக ஆதரவாளர்கள்கூட கலைஞர் அமைதிப்படையைத் திரும்பப் பெற்றதையும் முதல்வராக வரவேற்க மறுத்ததைக் குறித்தும் நினைவுபடுத்த மறுக்கிறார்கள்.

பிரபாகரனை ஆதரிக்கிற முற்போக்காளர்கள் என்றால் பெரியாரிஸ்ட்டுகள் மட்டும்தான். மற்றபடி அவரை கொண்டாடுகிறவர்கள் எண்ணிக்கையளவில் மிக அதிகமாக இருப்பது சீமான், மணியரசன், பழ. நெடுமாறன் இன்னும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள். ஜாதி சங்கம் வைத்திருப்பவர்கள் ஜாதிய தலைவர்கள்.

பிரபாகரனை இவர்கள் ஆதரிப்பதற்கு எந்தத் தடையும் தத்துவார்த்தமாக இல்லை என்பது இன்னும் நெருக்கமானது.

இந்த பின்பலமே பிரபாகரனை முன்னிறுத்தி பெரியாருக்கு எதிராக எந்த ஜாதி தலைவர்களையும் உயர்த்திப் பேசலாம் என்கிற துணிச்சலை சீமானுக்கு தருகிறது.

அதனால்தான் சொல்கிறேன் பிரபாகரனை முன்னிறுத்தி சீமானை வீழ்த்த முடியாது. பிரபாகரனை தமிழ்நாட்டின் அடையாளமாக மீண்டும் கட்டமைத்தால் அது சீமானுக்குத்தான் லாபம்.

அதுமட்டுமல்ல முருகன் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என இந்து மதத்திற்குள் தமிழ் அடையாளம் காண்பதாக மாறும்.
சீமானைப் போலவே பிரபாகரனை முன்னிறுத்தி திமுக வை இழிவாகத் திட்டும் மே 17 குரூப்பும் சிறுதெய்வ வழிபாடு என இந்துமதத்திற்குள் தமிழ் அடையாளம் தேடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்த பிரபாகரனை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் எந்த தமிழ்த்தேசிய உணர்வும் கட்டப்படவில்லை.
பெரியார் எதிர்ப்பாளர்கள் திராவிட இயக்க எதிர்ப்பையும் பெரியார் ஆதரவாளர்கள் திமுக எதிர்ப்பையும் மட்டும்தான் செய்திருக்கிறார்கள். பிரபாகரன் வழி தமிழ்த்தேசியம் என்பது தமிழகத்தில் இது மட்டும்தான்.

இதன் மறுபக்கமாக திமுகவின் பெரியாரின் தமிழுக்கான போராட்டங்கள், இந்தி திணிப்பு எதிர்ப்பு, சமஸ்கிருத மறுப்பு, தமிழர்களுக்கு சூட்டிய தனித்தமிழ் பெயர்கள், தமிழ்நாடு பெயர் இன்னும் பல தமிழ்த்தேசிய செயல்பாடுகள் மூடி மறைக்கப்பட்டு தமிழர் விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆக, பிரபாகரனை முன்னிறுத்தி சீமான் செய்வது தமிழ்த்தேசியமல்ல; திமுக, பெரியாருக்கு எதிராக ஜாதிய பெரும்பான்மை வாதம்.

அதனால்தான் இந்தியத் தேசியம் பேசிய காமராஜரையும் முத்துராமலிங்க தேவரையும் தமிழ்த்தேசியம் பேசிய பெரியாருக்கு எதிராக நிறுவுவதும்.
அதே காரணத்திற்காக இரட்டை மலை சீனிவாசனையும் அயோத்திய தாசரையும் பெரியாருக்கு எதிராக சித்தரிப்பதையும் செய்கிறார். டாக்டர் அம்பேத்கரை இணைத்துக் கொள்வதும் அதன் பொருட்டே.

திமுக வை ஆதரிக்கிற ஆசிரியர் வீரமணியை, பேராசிரியர் சுபவீயை என்னை இழிவாகப் பேசுகிற சீமான் கும்பல், கவிஞர் வைரமுத்துவைக் கொண்டாடுகிறார்கள். காரணம் அவரின் பெரும்பான்மை ஜாதி பின்புலம்.

திமுகவை கலைஞரை தளபதி மு.க.ஸ்டாலினை மிக இழிவாகப் பேசுகிற சீமான், பொருளாளர் துரைமுருகனைப் புகழ்ந்து ஏ.வ. வேலுவிற்கு மாற்றக பேசுவதும், ஆ. ராசாவை கொண்டாடி தளபதி மு.க. ஸ்டாலினை, கலைஞரை இழிவாகத் திட்டுவதும் அதன் பொருட்டே.

ஆக, பிரபாகரனை முன்னிறுத்துவது சீமான்களுக்குதான் லாபம்.

திராவிட அரசியலை சாதனைகளை அதன் தமிழ்த்தேசிய எழுச்சியைப் பெரியாரோடு அண்ணல் அம்பேத்கரை முன்னிறுத்தி சமூகநீதியை உரக்கப் பேசினால்தான் சீமான் போன்ற மோசடிகளை முறியடிக்க முடியும்.

மற்றபடி பிரபாகரனை முன்னிறுத்தி சீமானை எதிர்கொண்டால் தற்காலிகமாகச் சீமான் தோற்கலாம். சீமானிசம் தோற்காது-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading