விஜயை ஆதரிக்கலாமா?

விஜயை ஆதரிக்கலாமா வேண்டாமா’ என ஊசலாட்டத்தோடு இருந்த அரசியலற்ற இன்னும் சில எளிய மக்களை விஜயின் இன்றைய நிகழ்வு அவர் பக்கம் திருப்பி இருக்கும்.

பிரமுகர் தன்மைக்காக மட்டும் ஆதரிக்கிற அரசியலற்ற எளிய மக்களை எப்படித் தன் வயப்படுத்துவது? என்கிற யுக்தியை அவருக்கு யாரோ சரியாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இனி, எதிர்க்கட்சிகள் அவர் அரசின் கையாலாத்தனத்தை விமர்சித்தால், ஆதரவை வாபஸ் பெற்றால் கடுமையான வசவுகளை அவர்கள் மீது வீசுவதற்கு இன்றைய ‘ஷுட்’ அவருக்கு நிச்சயம் உதவும்.

நேற்றுக்கு முன்பு ‘அவரை ஆதரித்தால் என்ன?‘ என எதிர்க்கட்சிகளையே மிக இழிவாகப் பேசிய அரசியலற்ற அப்பாவிகள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு வாக்களித்தவர்கள், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, தமிழ் உணர்வு, சிறுபான்மை நலன், தொகுதி வரையறை எதிர்ப்பு, மாநில சுயாட்சி இவை மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பைக்கூட அறியாதவர்கள்(அப்படி ஒரு கட்சி இருப்பதும் பலருக்குத் தெரியாது) இதுதான் அரசியலற்றத் தன்மை.

அதனால்தான் விஜய் இதுகுறித்துப் பேசாதது அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அல்லது அவர் இவற்றைப் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.

திட்டமிட்டு வெறும் திமுக எதிர்ப்பு அவதூறுகளிலேயே கவனம் செலுத்தினார்.

ஆனால், திமுக முழுக்க சமூகநீதி அரசியலோடுதான் பயணிக்கிறது. தேர்தல் நேரத்திலும் இவற்றைத்தான் பிரதானப்படுத்தியது. இன்னும் குறிப்பாகத் தேர்தல் பிரச்சாரம் உக்கிரமாக இருந்தபோது, தொகுதி வரையறை எதிர்ப்பை தீவிரமாகப் பேசியது. அதில் வெற்றியும் பெற்றது.

ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்தது விஜய்க்கும் அவரின் வாக்களர்களுக்கும் தெரியாது.

இது எம்.ஜி.ஆர் காலத்து Formula. எமெர்ஜென்சியைக் கலைஞர் எதிர்த்தார் எம்.ஜி.ஆர் எமெர்ஜென்சியை மட்டுமல்ல இந்தியையும் ஆதரித்தார். மக்களுக்கு அது பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் திட்டமிட்டுக் கலைஞர் மீதான அவதூறை மட்டுமே திரும்பத் திரும்பப் பரப்பினார். நம்ப வைத்தார்.

ஆனால், திமுக தொடர்ந்து மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு என சமுகநீதி அரசியல் மட்டுமே பேசியது. கலைஞரின் திருக்குறளும், சங்கத் தமிழ் சிறப்புப் பிரச்சார முறையும் படித்தவர்களிடம் மட்டுமே செல்வாக்குச் செலுத்தியது.
அரசியலற்ற எம்.ஜி.ஆரின் வாக்காளர்களை அது தொடவே இல்லை. எம்.ஜி.ஆரின் பொய் அப்படியே இருந்தது. இருக்கிறது.

இன்றைய தேர்தலில் திமுக ஆட்சியின் நலத்திட்டங்களின் பெரும் பயனாளர்களான எளிய மக்களிடம் அவர்களின் வாழ்க்கையில் திமுக ஆட்சியின் திட்டங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் முதல்வர் M. K. Stalin அவர்களின் சிறப்பு இவற்றிற்குத் திமுக மற்றும் கூட்டணியின் வேட்பாளர்கள் முக்கியத்துவம் தரவில்லை. தங்களையே பிரதானப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால், தவெக வேட்பாளர்களின் பெயரே இன்று வரை மக்களுக்குத் தெரியாது. விஜய் மட்டும் தான் தெரிந்தார். தெரிகிறார்.

தொண்டர்களின் ஒருங்கிணைப்போடு வீடுகளில் வீதிகளில் போய்ப் பேசியபோது இவற்றோடு,
விஜய் போன்றவர் கொரான காலம், சினிமா டிக்கெட் ரசிகர்களுக்கே எதிராக இருந்ததையும் இணைத்திருந்தால், திமுக கூடுதலான இடங்கள் பெற்றிருக்கும்.

பிரச்சாரத்தின்போது எந்த மக்களிடம் பேசுகிறோம் என்பதை உணர்ந்து இவற்றிக்கு அழுத்தம் கொடுத்துப் பேசி இருக்க வேண்டும்.
மக்களிடம் பிரச்சினைகளின் அடிப்படையில் விவாதிப்பதை தவிர்த்திருக்கக் கூடாது.

நாம் பேசுகிற செயல்படுகிற அரசியல் எளிய மக்களுக்கானது. ஆனால், எளியவர்கள் நமக்கெதிரானவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு எதிரானவர்களுக்கும் வாக்களித்து விடுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிற இருண்ட காலத்தை விரைவில் விரட்டி விடிய வைப்போம். என்னால் நீண்ட ஆண்டுகள் சகித்துக் கொள்ள முடியாது-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading