Site icon வே. மதிமாறன்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?


சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே?

க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பெண் பித்தனும், முழுநேர குடிகாரனும், பார்ப்பன மோகியுமான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்) அவர்களும் இளையராஜாவின் பார்ப்பன ஆதரவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த மோசடிப் போக்கைத்தான் விமர்சித்தேன்.

ஜுன் 2007 சமூக விழிப்புணர்வு மாத இதழுக்காக எழுதியது.

‘வே. மதிமாறன் பதில்கள்’ புத்தகத்திலிருந்து….

தொடர்புடைய பதிவுகள்:

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

Exit mobile version