‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்…

நீங்கள் ஆதரிக்கும் இளையராஜா பிராமண ஆதரவாளராக தானே இருக்கிறார்? அவரை மட்டும் விமர்சிக்க மறுப்பது ஏன்

தமிழ்மகன், திருநெல்வேலி.

இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை விளக்கி இருக்கிறேன். தங்கம் வாசர்களுக்கு அதை மீண்டும் தருகிறேன்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை.

99 சதவீதம் இளையராஜா நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதைபாடறியேன்படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.

சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார்.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது.

 “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

ஆனால் அவரை விமர்சிப்பவர்கள், இதுபோன்ற அவருடைய சாதனைகளை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை உள்ள திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பார்ப்பன மோகியான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

16 thoughts on “‘நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’- ; இளையராஜா மட்டும்…”

 1. பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

  very true …

 2. திரு தமிழ் மகனின் கேள்விக்கு கடைசி வரை நீங்கள் பதில் சொல்லவே இல்லையே மதிமாறன் அவர்களே.உங்கள் பார்வை படி கண்ணதாசன் ஒரு பார்ப்பன அபிமானி அவர் ஒரு கவிஞரே அல்ல. சிவாஜி ஒரு ஜாதி வெறி பிடித்த மனிதர். எம் எஸ் வி ஒரு பார்பனர். எ ஆர் ரகுமான் ஒரு போலி முஸ்லிம் அவர் பார்பன பாலச்சந்தராலும் மணி ரத்தினத்தாலும் இளையராஜாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டவர்.அவருக்கு ஒரு திறமையுமே கிடையாது.தமிழ் நாட்டில் எல்லாருமே வடிகட்டிய முட்டாள்கள் அல்லது ஜாதி வெறி கொண்டவர்கள்.இதில் இளையராஜா மட்டுமே மிக சிறந்த மனிதர். அபார திறமை கொண்டவர். முதலில் இளையராஜா கிறிஸ்துவராக இருந்து பின்னர் இந்துவாக மாறியவர். தான் ஒரு மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவன் என்று மக்களை நம்ப வைப்பதற்காக அவர் பிராமண ஈடுபாட்டை வளர்த்துகொண்டு அவர்கள் புகழும் படி தன்னை மாற்றி கொண்டவர்.தன்னை ஒரு தீவிர சைவராக அவர் காட்டிகொண்டதே அவரின் இந்த பிராமண சாயல் கொண்டதின் ஆதாரம்.இதில் நீங்கள் அவர் நாட்டு புறத்து பாடல்களை கர்நாடக ராகத்தில் கலந்து தந்தார் என்று சப்பை கட்டு கட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சாமர்த்தியமாக நழுவுகிறீர்கள்.அவரின் இந்த போலித்தனமான ஞானி போன்ற வேஷமே அவரின் வீழ்ச்சிக்கு காரணம் எனபது தெரிந்தும் அவருக்கு சகட்டு மேனிக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்.மற்றவர்களை புகழத் தெரியாத மண்டை கணத்தின் உச்ச உதாரணமான இந்த வெள்ளை சட்டை வேஷதாரியை எப்படியெல்லாம் ஆதரிகிறீர்கள்.இளையராஜா நல்ல இசையை கொடுத்தாலும் கட்டில் முக்கல்களையும் விரக முன்கங்கல்களையும் தமிழ் இசையில் புகுத்தி தற்போதைய இசை சீரழிவுக்கு வித்திட்டவர்.இதனாலேயே அவர் கே வி மகாதேவன்,எம் எஸ் வி, எ எம் ராஜா, போன்ற இசை மேதைகளோடு ஒரே தரத்தில் இல்லாது பல படிகள் கீழே நிற்கிறார்.என்ன செய்வது சட்டியில் இருப்பதுதானே தானே அகப்பையில் வரும்?

 3. போற்றிப் பாடடி பொன்னே
  தேவர் காலடி மண்ணே

  எஜமான் காலடி மண்ணெடுத்து
  நெத்தியில பொட்டு வெப்போம்

  கண்ணுபட போகுதையா
  சின்ன கவுண்டரு

  என ஊரில் உள்ள எல்லா ஆதிக்க ஜாதிகளுக்காகவும் இசையாமைத்திருக்கிறார் இளையராஜா. இந்த தடித்தனமெல்லாம் கண்டுக்காம இருக்கனும். இப்படி வாதிட்டுதானே ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ மற்றும் ‘உலக மகா துரோகி காந்தி’ போன்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

  இதே கையால் தான் ரகுமானை பார்பனக் கைக்கூலி என எழுத மனம் தயங்காமல் இடம் கொடுக்கிறது. இவர் தான் தீவிர கம்யூனிஸ்ட்…இல்ல அதி தீவிர மார்க்சிய லெனினிய பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனையாளர்.

 4. திரு மதிமாறன் அவர்கள் டைம் லூப் என்று சொல்லப்படும் ஒரு வித கால சுழலுக்குள் மாறிக்கொண்டு மனம் பிறழ்ந்த நிலையில் தமிழின மேதைகளை வாய்க்கு வந்த படி வசை பாடி வருகிறார்.இவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்கள் இதனை நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார்கள்.இவர் ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் என்பதே ஒரு மிக பெரிய பொய்.எனக்கு இளையராஜாவை பிடிக்கும் அவர் என்ன செய்தாலும் நான் அதை தவறாக விமர்சனம் செய்ய மாட்டேன் என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு விட்டு அவர் இப்படி செய்தால் நலம்.யார் கேள்வி கேட்க போகிறார்கள்?கடைசியில் இவர் வழிபாடும் அந்த இளையராஜாவும் கூடத்தான் மற்றவர்களை போல வெறும் பணத்திற்காக பாடல்கள் போடுபவர். அவர் என்ன சேவையா செய்து விட்டார்?இன்னும் சொல்லப்போனால் தமிழ் இசையை சீரழிதவர்களில் அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.இப்போது வந்து கொண்டிருக்கும் எல்லா கண்றாவி மலத்தில் தேய்த்து எடுத்த பாடலகளுக்கேல்லாம் அவரே பிதா மகன்.

 5. அய்யா கணவான்களே, இளையராஜாவின் பார்ப்பன அபிமானத்தை விமர்சிக்கிறவர்கள் தாராளமாக விமர்சித்துக் கொள்ளுங்கள் என்று முதலிலேயே சொல்லி விட்ட பிறகும் உங்களுக்கென்ன சந்தேகம். பார்ப்பன அபிமானத்தை விமர்சிக்கிறவர்கள் பார்ப்பன அபிமானத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதில் அவருடைய இசையறிவையும் சேர்த்து அவதூறு செய்யக் கூடாது என்பது தான் மதிமாறன் கட்சி. அந்த விமர்சனம் இளையராஜாவின் இசையறிவு மொத்தத்தையும் புறக்கணிக்கிற விமர்சனமாக இருந்தால் அதைத் தான் அயோக்கியத் தனம் என்கிறார் மதிமாறன்.

 6. இசைஞானி பற்றியபார்வை இன்னும் விசாலமாக பார்க்க படவேண்டும். அவரின் இசைகுறித்து இன்னும் சிறப்பான பார்வையை யாரும் பார்க்கவில்லை.

 7. இளையராஜாவின் சிறப்பு, அவர் தன் ஜாதியை மறந்து தன் திறமையையும், ஞானத்தையும் முன்னிலையில் வைத்தவர்.

 8. இளையராசா பற்றிய சரியான மதிப்பீடு. அவரை விமர்சிப்பவர்களுக்கு சரியான செருப்படி. நல்ல விமர்சனப்பூர்வமான அணுகுமுறை. நன்றி தோழர்.

 9. //இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்//

  உங்களுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றும் இவரின் பாடல்கள், எனக்கு எப்படித் தோன்றுகின்றன என்பதைத் தாங்கள் அறியவேண்டும் என விரும்புகிறேன். அவரது பல பாடல்களைப் பற்றிய எனது பார்வைகளை நான் எழுதியிருந்தும், அதற்காகவே ஒரு வலைப்பூ தொடங்கியிருந்தும், அவைகளை எல்லாம் முழுவதுமாக அங்கு பதிப்பிக்க காலம் இடம் தரவில்லை. இதுவரை மூன்று பாடல்களை மட்டுமே அங்கு ஏற்றி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள் இங்கு…
  http://kaviyarasar.blogspot.com/

  ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு’

 10. இந்த காரிகன் என்ற நபர் பல வலைப்பங்களில் இளையராஜா மீது வெறுப்பு கக்கி வருவதை காண முடிகிறது.
  //கே வி மகாதேவன்,எம் எஸ் வி, எ எம் ராஜா, போன்ற இசை மேதைகளோடு ஒரே தரத்தில் இல்லாது பல படிகள் கீழே நிற்கிறார்.// என்று அந்த இசையமைப்பாளர்கள் காது பட பேசினால் அவர்களே இந்த பதரை பொட்டில் அறைந்து விடுவார்கள். காரிகன் என்ற பெயருக்கு பதில் வயிறெரிச்சல் காரன் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.

Leave a Reply