தாரவாட் மாதவன் நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 நாள் பிறந்தார். இந்த சனவரியோடு மாதவன் நாயருக்கு 142 வயதுகள் முடிந்தது. தமிழக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட அந்த மகத்தான மனிதரை நினைவுகொள்வோம்.
அவர் பெயருக்கு முன் இருக்கிற ‘தராவாட்’ என்பது அவர் பிறந்தஊர். அது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குள் இருக்கிறது. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் FA பட்டம் பெற்றார். பின் ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைகழகத்தில் பயின்று அந்தக்காலத்து மருத்து கல்விப் பட்டமான M.B.C.M. என்ற பட்டம் பெற்றார். அதன்பின் பிரைட்டன் நகரத்தில் காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையில் மருத்துவராக வேலைபார்த்தார். அதே எடின்பரோ பல்கலைகழகத்தில் M.D. பட்டம் பெற்றார். பிறகு காது-மூக்கு-தொண்டை மருத்துவதுறை மேல் படிப்பை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முடித்தார். கிரேக்க மொழியில் புலமை பெற்றவராகவும் இருந்தார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட மாதவன்நாயர், தன் அனுபவங்களின் மூலமாக Diabites; Nature and Treatment என்ற நூலை எழுதினார். Antiseptic என்ற பத்திரிகையை நடத்தினார். மருத்துவத்துறை அல்லாத Madras Standard என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
மேடை பேச்சு முறை பிரபலமாகத அந்தக் காலத்திலேயே மிக சிறப்பான மேடை பேச்சாளராக திகழ்ந்தவர் நாயர். அதுவும் ஆங்கிலத்தில். அவருடைய மேடை பேச்சின் சிறப்பைப் பற்றி பம்பாயில் இருந்து வெளிவந்த, அட்வகேட் ஆப் இந்தியா நாளிதழ், ‘மிகச் சிறந்த டாக்டர் என்ற புகழுடன் மிகச் சிறந்த பேச்சாளர் என்ற புகழையும் கொண்டவர் டாக்டர் நாயர். அவரைப் போல தர்க்கம் செய்வோர் ஒரு சிலரையே இந்தியாவில் காண முடியும்’ என்று குறிப்பிடடது. இதெல்லாம் அவரின் திறமைகள் அல்லது கல்வித் தகுதிகள். ஆனால், அவருடைய சிறப்பு இதுவல்ல. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாக இயங்கியது.
1914 ஆம் ஆண்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளத்திற்கு வரிஇல்லாமல் தண்ணீர் விடவேண்டும் எனறு, தியாகராயர் (பின்னால் நாயருடன் இணைந்து நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்தான்) பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார். சென்னை நகர மன்ற அங்கத்தினராக இருந்த நாயர் அதை கடுமையாக எதிர்க்கிறார். திருவல்லிக்கேணி கோயிலுக்கு வரிஇல்லாமல் தண்ணீர் விட்டால், அதுபோல் மற்றக்கோயில்களுக்கும் விடவேண்டிவரும். அதன் செலவை நகரசபை ஏற்கவேண்டியிருக்கும். பிறகு மக்கள் நலத்திட்டங்களுககு பணம் இல்லாமல் போகும் என்று அதை எதிர்க்கிறார் நாயர். அதனாலேயே பார்ப்பனர்கள் மாதவன் நாயரை எதிர்க்கிறார்கள். ஆனாலும் தன் நிலையில் இருந்து விலகாத நாயர், அந்தப் பதவியில் இருந்து விலகுகிறார்.
1906 ஆம் ஆண்டு பஞ்சாலை தொழிலாளர்களின் நிலைமைய அறியவேண்டும் என்று ‘லேபர் கமிஷன்’ ஒன்றை அரசு நியமித்தது. அந்தக் கமிஷனில் நாயரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். முதலாளிகளின் கையாட்களும், வெள்ளைக்காரர்களும் நிரம்பிய அந்தக் கமிஷன், 1908 ஆண்டு அறிக்கையை அரசுக்குத் தந்தது. கமிஷனின் அறிக்கையை ஒத்துக்கொள்ளாத மாதவன் நாயர், தனது கருத்துக்களை எழுதி அரசுக்கு தனியாக அனுப்பி வைத்தார்.
‘ஒரு நாளைக்கு 15 மணிநேரம் என்கிற வேலை நேரத்தை அகற்றிடவேண்டும். 12 மணிநேரமே இருக்கவேண்டும். அரை மணிநேரம் ஓய்வு கொடுக்கவேண்டும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறை கொடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு 11 மணிநேரமே வேலை நேரமாக இருக்கவேண்டும். இயந்திரங்களின் மூலம் விபத்துக்கள் நடக்காதபடி பாதுகாப்பபு தரவேண்டும்’ இவைகள்தான் மாதவன் நாயர் அரசுக்கு அனுப்பி வைத்த அறிக்கை.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வைசிராய் வரை சந்தித்து விளக்கம் கொடுத்து, நான்கு ஆண்டுகள் தொடர்ந்துபோராடினார் நாயர். 1912 சூலை மாதம் மாதவன் நாயரின் கோரிக்கைகள் உள்ளடங்கிய மசோதா நிறைவேறியது.
ஒருமுறை கப்பலில் வெள்ளைக்காரர்களோடு பயணம் செய்துகொண்டிருந்த மாதவன் நாயரை ஒரு வெள்ளைக்காரன், ‘கருப்பன்’ என்று இழிவாக பேசிவிடுகிறான். துப்பாக்கி வைத்திருக்கும் பழுக்கம் உள்ள மாதவன் நாயர், அந்த வெள்ளையனின் வாயில் துப்பாக்கி வைத்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்.
இப்படி போர்குணத்துடன் இயங்கிய மாதவன் நாயர் 1916 ல் தியாகராயர், நடேசனுடன் சேர்ந்து பார்ப்பனரல்லதார் இயக்கத்தை துவங்கினார். 1917 ஆம் ஆண்டு சென்னை ஸ்பர்டாங் சாலையில் ஆங்கிலத்தில் அவர் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்கது.
பெரியார் என்கிற பெரும் நெருப்பு உருவாவதற்கு நாயரின் இந்த தீ துண்டு முன்காரணம் என்றால் அது மிகையல்ல. அவரின் அந்தப் பேச்சைகேட்டு உத்வேகம் பெற்றசிலர் பார்ப்பனர்களை தாக்கிவிட்டார்கள் என்று செய்தியும் உண்டு.
அந்த செய்தியை உறுதி செய்வதுபோல் பாரதியாரின் கோபம் அதற்கு சாட்சியாக இருக்கிறது,
“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!”
“சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்”
“இங்ஙனம் தமிழ்ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர்.நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிட கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு ஆதரவாக…”
பார்ப்பன பாரதியின் இந்த சாபம் நாயரின் ஆளுமையின் அடையாளமாக இருக்கிறது. இன்றுகூட தீவிர இந்து மனோபாவம் கொண்ட பல பார்பபனர்கள் சும்மா ஒப்புக்காவது, பெரியார், அம்பேத்கரை பாராட்டுவார்கள். ஆனால், மாதவன் நாயரை நீதிக்கட்சியின் துவக்கக்கால தலைவர்களை பெயரளவுக்குக்கூட குறிப்பிடமாட்டார்கள்.
அவர்கள் பற்றி பேசினால், உடனே பாரதியாரைபோல் தேசப்பற்றாளராக மாறி ‘நாயர் கட்சிக்காரனுங்க, வெள்ளைக்காரனுக்கு இந்தநாட்டை காட்டிக் கொடுத்தவானுங்க’ என்று தியாகிகளைப்போல் பேசுவார்கள் வெள்ளைக்காரன்கிட்டேயே இங்கிலிஸ்சுல பேசி அவனுங்ககிட்டேயே ‘ஆட்டைய’ போட்ட சில்வர்டங் சீனிவாச சாஸ்திரியின் பேரன்கள்.
பார்ப்பனர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, மாதவன் நாயரே பேசி இருக்கிறார்: “தியாகராயரையும், என்னையும் ஏனையத் தலைவர்களையும் காங்கிரசின் வஞ்சகப் பார்ப்பனர்கள், தேசத்துரோகிகள், வகுப்புவாதிகள், வெள்ளைக்காரனின் பூட்ஸ்காலைநக்கியவர்கள் எனறு கண்டவறெல்லாம் பிதற்றித் திரிகிறார்கள்.
பிரம்மாவின் முகத்திலிருந்து வெடித்து விழுந்த வீரர்களாச்சே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அனுமார் வாலை அவர்கள்தான் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, நாங்கள் பிடித்து தொங்குகிற அளவிற்கு வெள்ளைக்காரனுக்கு வாலே முளைக்கவில்லையே.
அப்புறம் பூட்ஸ்கால். அதனை நக்குவதாம். வெள்ளையன் பூட்ஸில் என்ன வெல்லப் பாகையா தடவி வைத்திருக்கிறான்? அதை நக்கிபார்க்க?
ராமனின் பூட்சையோ, பாதுகையையோ, செருப்பையோ 14 ஆண்டு காலம் சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு பாலாபிஷேகம், பழ அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதை நக்கி மகிழ்ந்தவர்கள்தானே இந்த பார்ப்பனரின் முன்னோர். அவர்களுக்குத் தான் பூட்ஸ் ருசியும் தெரியுமேயல்லாமல், அபிஷேகத்தில் நம்பிக்கையற்ற என்னை போன்றவர்களுக்கு பூட்ஸின் ருசி எப்படி தெரியும்?”
பார்ப்பன எதிர்ப்பு, இந்து மதஎதிர்ப்பு இரண்டும் இணைந்துதான் இருக்கவேண்டும் என்கிற சரியான புரிதல் மாதவன் நாயரின் சென்னை ஸ்பர்டாங் சாலை பேச்சில் நெருப்பாக தெரிக்கும். அவரின் 143 ஆவது பிறந்தநாள் நினைவாக இந்தப் பேச்சை தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்.
‘மலையாளிகள் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார்கள். நாயர் மலையாளி அவரைபோய் தமிழிர்களின் தலைவராக சொல்லலாமா?’ என்று சிலர் கண்டிக்கலாம்.
ஜெயமோகன் என்கிற மலையாளி தந்தை பெரியாரை பற்றி அவதூறும் கேவலமாக எழுதிவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த மலையாளிகளும் அதுபோலவே என்று குற்றம் சொல்லமுடியுமா? பெரியார் இயக்கத்திற்கும் பெரியார் பாணியிலான பகுத்தறிவிற்கும் கேரளாவில் எப்போதுமே ஒரு மரியாதையும், செல்வாக்கும் உண்டு. பெரியாரின் அன்பிற்குரிய டாக்டர் கோவுர், ஜோசப் இடமருகு போன்ற மிகச் சிறந்த பகுத்தறிவாளர்களை தந்ததுதான் கேரளம்.
ஜெயமோகனை மலையாளியாக பார்ப்பதை விட, பார்ப்பன இந்து மனோபாவம் கொண்ட ஆளாக பார்ப்பதுதான் சரியாக இருக்கும். நம்ம பச்சைத் தமிழன் ஜெயகாந்தனைபோல்.
பெரியாரை கேவலமாக எழுதுகிற ஜெயமோகனுக்கு தன் படத்தில் வசனம் எழுத வாய்பப்பளித்து விட்டு, தேசியவிருது கிடைத்தவுடன் பெரியாரின் பேரனைப்போல், கட்டபொம்மன் பாணியில், “கடவுள் என்ன நாத்துநட்டரா? களை புடுங்கினாரா? அவருக்கு எதுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்?” என்று நாத்திக வசனம் பேசும் இயக்குனர் தமிழர் பாலாவையும் வசனகர்த்தா மலையாளி ஜெயமோகனை பார்ப்பதுபோல் தான் பார்க்கவேண்டும்.
மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட மானமிகு மாதவன் நாயர், தமிழகத்து பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, சுயமரியாதை இவைகளுக்கான முன்னோடி. அதற்கு சாட்சி, அவரின் சென்னை ஸ்பர்டாங் சாலை பேச்சு.
வன்னிய உணர்வு கொண்ட பெரியாரிஸ்டுகள், ‘பெரியாருக்கே முன்னோடி மாணிக்கவேல் நாயகர்’ என்கிறார்கள். முதலியார் பெரியாரிஸ்டுகள் ‘பெரியாரைவிட பெரிய அறிவாளி குத்தூசி குருசாமி’ என்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோருக்குமே முன்னோடியாக இருந்தவர் டி.எம். நாயர்.
மாதவன் நாயரை பற்றி தந்தைபெரியாரே மிக சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார். பெரியார் என்கிற மகத்தான தலைவராலேயே பாராட்டப்பட்ட அந்த மாமனிதரை நினைவுகொள்வோம்.
1917 ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு இரட்டைமலை சீனிவாசன் தலைமை தாங்கினார். தியாகராயரும் கலந்துகொண்டார். நன்றியுரை எம்.சி.ராஜா வழங்கி முடித்து வைத்தார். டி.எம். நாயரின் வரலாற்று சிறப்பு மிக்க சிறப்புரை விரைவில்.
–தொடரும்.
தொடர்புடைய கட்டுரை:
2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

