Site icon வே. மதிமாறன்

கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

உலக மகா நடிகருடன் ரஜினியும் கமலும்
off the record

கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்?

டி.ரமேஷ்சென்னை.

அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ‘ஆண்மை’யை பார்வையாளர்களுக்கு “நிரூபிப்பது”போல் காட்சிகளை வைப்பதுதான். ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது.

சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவு காட்சிகள்தான், குழந்தைகள் உட்பட குடுபம்பத்தோடு அவரின் படங்களை பார்ப்பதற்கு நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.

நடுத்தரவர்க்கதில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போவதை தீர்மானிப்பவன் ஆண். அவன் இப்படிப்பட்ட காட்சிகளை தன் மனைவி பார்ப்பதைக்கூட விரும்பமாட்டான்.

கதாசிரியர் ஆர்.கே.நாரயணனிடம் “நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லை” என்று கேட்டபோது-அவர் சொன்னார், “என் கதாநாயகனும், நாயகியும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவேன்.” இந்த நாகரீகம் கேமராவுக்கும் பொருந்தும்.

திரைப்படத்தில்,  யாரும் தொட அஞ்சுகிற காந்தி கொலை வழக்கை, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடு, துணிச்சலோடு ‘காந்தியை கொன்றது பார்ப்பனிய இந்து அமைப்புதான். பிரிவினையின் போது காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதுதான் அந்தக் கொலைக்குக் காரணம்’ என்ற உண்மையை சொன்ன படம்‘ஹேராம்’.

கமல்ஹாசனின் இயக்கத்தில் வந்த முதல் படம் அது. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று‘ஹேராமை’ உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தற்கான காரணங்களில் ஒரு முக்கிய காரணம், கதைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத உடலுறவு காட்சிகள்தான். சாகேத்ராமன் தனது இரு மனைவிகளிடமும் எப்படி விதவிதமாக உறவு கொள்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு தேவையற்ற ஒன்று.

கலவரம் நடந்து கொண்டிருக்கிற கல்கத்தா வீதிகளில் தப்பி, வீட்டில் தனியாக இருக்கிற தன் மனைவியை  பல மாதங்களுக்குப் பிறகு பார்க்க வருகிற சாகேத்ராமன், கலவரத்தில் இருந்து வீட்டின் கதவுக்கு வந்த  அடுத்த வினாடியே ரொமாண்டிக்கில் ஈடுபடுவது ஒரு மனநோயாகவே இருக்கிறது.

நகரம் முழுக்க கலவரம் பரவி கிடக்கும் போது, கணவனின் மனது வீட்டில் தனியாக இருக்கிற மனைவியின் பாதுகாப்பு குறித்துதான் யோசிக்குமே தவிர, உடலுறவு குறித்தல்ல.

சிறந்த நடிகரும், மோசமான இயக்குரும்,கமல்ஹாசனின் ரசிகருமான நடிகர் நாசர், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியின் போது தனது நண்பர்களிடம் இப்படி சொல்லிக் கொண்டு வந்தார், “செக்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாங்க. யாதார்த்தமா அதை காண்பிக்கிறதுல என்ன தப்பு?”

மலம் கழிப்பதுக் கூட எல்லோரும் செய்யிறதுதான். அதையும் யதார்த்தமா காட்லாமே? கமல்ஹாசன் கக்குஸ் போறத தத்ரூபமான காட்சியா வைச்சா, அதுக்கப்புறம் அவருடைய காதாநாயக அந்தஸ்து எவ்வளவுமுக்குனாலும் திரும்பி வராது.

ரஜினி தன் படத்துல ஸ்டைலா சிகெரட்டை போடுவாரு. ஆனா, ஸ்டைலா ஜட்டி போட மாட்டாரு. அதனால்தான் அவரு படம் பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அனைவரும் விரும்பி பாக்கிறாங்க.

*

2007 ஆம் ஆண்டு எழுதியது..

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

 

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

Exit mobile version