மரம், செடி, கொடி, மலை இவைகளுக்காக குரல் கொடுக்கிற பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான கருத்துச் சொல்வதில் அமைதிக் காக்கிறார்கள்.
குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க ஜாதிக்காரர்களால். தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது; மரம், செடி, கொடிகளைப்போலவே மவுனம் காக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஈனப் பறையர்கள்..’ என்று விளித்து, “காக்கை, குருவி எங்கள் ஜாதி..’ என்று பறவைகைளைப் பாசத்தோடு, பார்த்த பாரதியைப் போல்,
‘செல்போன் போன்ற நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, சிட்டுக்குருவி இனமே அழிந்து விட்டது’ என்று துயரப்படுகிற சிட்டுக் குருவியின் சினேகிதர்கள், ஜாதிவெறியால் ரத்தம் சொட்ட வெட்டுப்பட்டு நிற்கிற தாழ்த்தப்பட்டவரை பார்த்தால் பதறுவதில்லை.
“நமது புராணங்களில். இந்து மரபில் காடு பற்றியும் காட்டூயிர் பற்றியும் அக்கறை இருந்தது,” என்று தனது கலை இலக்கிய விமர்சனத்தோடு, காடுகள் பற்றியும் இந்து பெருமையோடு கவலைப்படுகிற முன்னாள் தபால்காரரர்கள், தொலைபேசி இலாகவில் வேலை செய்கிற சினிமா வசனகர்த்தாக்கள், வங்கியில் இலக்கியம் வளர்ப்பவர்கள், இலக்கியவாதிகளாக இருந்து வசனகர்த்தாவாக அவதாரம் எடுத்தவர்கள் இவர்கள் யாரும்,
தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதலை கண்டிப்பதில்லை.
ஏதோ தமிழகத்திற்கு புதியதாக வந்திருக்கிற வேற்றுக்கிரக வாசிகளைப் போலவே நடமாடுகிறார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் தன் கருத்தை முதன்மையாக, தீவிரமாக பதிவு செய்கிறவர்களில் பலர், ஜாதி வெறியர்களின் செய்கையில் ‘மவுனமே’ அவர்களின் பதிவாக இருக்கிறது.
இவர்களின் மவுனம் ஜாதி வெறிக்கு எதிரானதா ஆதரவானதா?
ஆனால், ‘மவுனம் சம்மதம்’ என்ற தொடர் நமக்கு நினைவுக்கு வராமல் இருந்தால், இவர்களின் மவுனத்தை ஜாதி வெறிக்கு எதிரானதாக புரிந்து கொள்ளலாம்.
சரி போகட்டும்,
ஜாதி வெறிக்கு எதிரானவர்கள் என்ற நிலையிலிருந்தல்ல; சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்கிற முறையில் கூட இவர்கள் தருமபுரியில் எரிக்கப்பட்ட, குடிசைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாமே?
அதான், ‘300 குடிசைகளை ஒரே சமயத்தில் எரித்ததால், தருமபுரி பகுதிகளில் காற்று மாசுபட்டிருக்கிறது’ என்றாவது ஒரு பதிவை செய்யுங்கள்.
அதனால், உங்களின் சுற்றுச் சூழல் அரசியலுக்கு எந்த ‘மாசும்’ ஏற்பட்டு விடாது.
தொடர்புடையவை:
அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்
மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி
மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

