கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

ணுஉலையால் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்து,

‘அணுஉலை வந்தபிறகு அதன் அலையால் சாவதைவிட, அதை வராமல் தடுத்து போராடியாவது சாகலாம். வாழ்வா, சாவா? ரெண்டில் ஒன்று’ என்று மீனவ மக்களும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் போராடி வருகிறார்கள்.

இன்னொரு புறத்தில் ஒருநாளைக்கு எட்டு மணிநேரம் என்று கடுமையான மின்வெட்டு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

‘மின் வெட்டை வாபஸ் பெறும் வரை ஓய மாட்டோம்’ என்று விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து சமரசமின்றி போராடி வரும் மீனவ தமிழர்களை, கிறித்துவர்களாக அடையாளப்படுத்தி, இந்து அமைப்புகளை தூண்டி எப்படி போராட்டக்காரர்களை தாக்கினார்களோ, அதுபோன்ற திட்டத்துடனேயே இந்த எட்டு மணிநேர மின் வெட்டும் அமல்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.

‘மின் வெட்டுக்கு காரணம். மின்சார பற்றாக்குறைதான். அணுஉலை திறக்கப்பட்டால், தீர்வு காணப்படும். மின்சார பற்றாக்குறை நீங்கும்.’

என்று அணுஉலை எதிர்ப்பாளர்களை. விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரியாக சித்திரிக்கிற ஆபத்தான போக்கு, திடீர் எட்டு மணிநேர மின் வெட்டின் மூலம் அடையாளப்படுத்தப்படும் ஆபத்தும் இருக்கிறது.

எல்லோருக்கும் எட்டு மணி நேர வேலை கேட்டால், எட்டு மணிநேர மின்வெட்டை பரிசளிக்கிறது அரசு. அதனுடன் இலவச இணைப்பாக மீனவ மக்களுக்கு எதிராக விவசாயிகளை, நெசவாளர்களை, தொழிலாளர்களை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கிறது.

தொடர்புடையவை:

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

11 thoughts on “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

 1. போகிற போக்கைப் பார்த்தால் கெட்டிக்காரன் புளுகு நிலைச்சிடும்
  போலிருக்கிறதே??

 2. திட்டமிட்ட மின்வெட்டு என்று சொல்லும் நண்பர்களே , இரண்டு வருடத்திற்கு முன்பு நீங்கள் உங்கள் வீட்டின் மின் பயன்பாட்டையும் , இப்பொழுது உங்கள் வீட்டின் மின் பயன்பாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள் . நீங்கள் எவ்வளவு அதிகம் மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும் . எனவே உயர்ந்து வரும் மின்தேவையை சமாளிக்க மின்சாரம் கொடுக்கும் மின் நிலையங்கள் வரவேண்டாமா …?

  சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ஐயா….. கொஞ்சம் உண்மையுடன் யோசித்து பாருங்கள் .. நன்றி

 3. yerottam ninnu ponaal unga kadalottam ennavaagm? AIya meen illaamal saappida mudiyum, anaal soru illamal?

 4. அணு உலைக்கு எதிராக தொன்னூறுகளில் விவரம் தெரிந்த மக்கள் போராடும் பொழுது கூடங்குளம் பகுதி மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்களுக்கு வரும் வேலைவாய்ப்பு மற்றும் வசதிகளை இந்த எதிர்ப்பாளர்கள் தடுக்கிறார்கள் என்றே அப்பகுதி மக்கள் எண்ணினார்கள். ஜப்பானில், புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட பின்னரே, அந்த விபத்தினை தொலைகாட்சி மற்றும் பேப்பர் ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னரே (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு இப்படியான ஊடகங்கள் கிடையாது, அப்பொழுது விபத்தும் நடக்கவில்லை), அப்பகுதி மக்கள் உதயகுமாரையும், ஏனைய எதிர்ப்பாளர்களையும் அழைத்து வந்து போராடுகிறார்கள். ஆண்கள் மீன் பிடிக்கிறார்கள், பெண்கள் போராடுகிறார்கள்.

  அப்படியே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு அணு மின் நிலையம் செயல் படத் துவங்கினாலும், அம்மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பும் வரப் போவதில்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் கிடைக்கப் போவதில்லை. கல்பாக்கத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. (சென்னையில் இருக்கும் எனது வீட்டிற்கு மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது)

  சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரு அணுமின் கப்பல் சென்னை துறைமுகத்தில் ஒரு வாரம் நின்றது. அப்பொழுது ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். சென்னை மக்களுக்கு அணுக்கதிர் ஆபத்து ஏற்படுமாம். அப்ப எல்லாம் ஒரு பயலும் ஜெயாவை எதிர்க்க வில்லை.

  இந்திரா உயிருடன் இருக்கும் பொழுது அணு நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்க அணு விஞ்சானிகளைப் பணித்தார். ஐந்து வருடம் அரசுப் பணத்தை செலவழித்தும் (தின்றும்) ஒன்றும் நடக்க வில்லை. அதன்பின் இந்திரா, ரஷ்யாவிடம் அணு நீர்மூழ்கி கப்பலை விலைக்கு கேட்டார். ரஷ்சியா அணு நீர்மூழ்கி கப்பல் வேண்டும் என்றால், அணு உலைகளையும் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. இந்திரா மறைந்தார். ராஜீவ் ரஷ்யாவிடம் கைஎழுத்து இட்டார். மராட்டா , கேராளாவில் துரத்தப்பட்டு, கூடங்குளம் ரெடி.

  இன்றும் பல ஆயிரம் கோடி வாடகைப் பணம் ரஷ்யாவிடம் கொடுத்து அணு நீர் மூழ்கி கப்பல் இந்தியா ஓட்டுகிறது. இதை எல்லாம் பிரசாந்த் பூசான் அவர்களும் எதிர்க்கிறார்கள்.

  அணு மின்சாரம் கேட்கும் நாம், அதே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் கேட்கிறோமா ?? நீர் ஆதாரங்களைப் பெருக்க அரசை கேட்டுப் போராடுகிறோமா ? தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்கள் கேட்டுப் போராடுகிறோமா ?

  அமெரிக்காவில் நூறு அணு உலைகள் உள்ளன. அமெரிக்க அரசு அம்மக்களுக்கான பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. நம் அரசு ? மக்கள் போராட ஆரம்பித்த பின்னர் அப்துல் கலாம் சொல்கிறார் சுமார் இருநூறு கோடி ரூபாயில் பத்து அம்ச திட்டம் வேண்டும் என்கிறார். இதை எல்லாம் முன்னரே செய்து இருந்தால் பாராட்டலாம். அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு அணு உலை கூட ஆரம்பிக்கவில்லை. அமெரிக்காவில் இருபது விழுக்காடு அணு மின்சாரம், எண்பது விழுக்காடு மாற்று வழி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

  இந்தியாவில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்ட சத்து இல்லாமல் சாகின்றன. ரேசன் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க அரசு கிட்டங்கிகளை கட்டவில்லை. ஆனால், பல லட்சம் கோடி செலவில் அணு உலை கட்டுகிறது. வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை இந்திய ராணுவத்திற்கு நமது அரசு செலவிடுகிறது – இது ஏன் என்று ஒரு மாணவி அப்துல் கலாம் அய்யாவிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களால பதில் சொல்ல முடியுமா ?

  அமெரிக்காவில் மின் கடத்தல் இழப்பு எழு விழுக்காடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் மின் கடத்தல் இழப்பு இருபத்தைந்து விழுக்காடு. எந்த விஞ்சானிகள் இதைத் தடுக்க ஆய்வு செய்கிறார்கள் ? உங்களால பதில் சொல்ல முடியுமா ?

 5. தினமலரின் யோக்கியதை என்ன என்று பார்போம்.

  ஒன்று : இந்திய விடுதலைக்குப் பின் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கும் பொழுது கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்தின் திருவாங்குதூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இங்கு பிறந்த தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யர் திருவாங்குதூர் மன்னரின் தொந்தரவுக்கு ஆளானார். அதனால் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்சல் நேசமணி, சங்கரலிங்கம் போன்றவர்களுடன் இணைந்து போராடினார். அவருடைய நன்மைக்காக இந்த போராட்டம் (இல்லை என்றால் குமரி மாவட்டம் தமிழகத்தில் இருந்தால் என்ன, கேரளாவிடம் இருந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது – என்று ராமசுப்பு அய்யர் தினமலரில் எழுதி இருப்பார் )

  இரண்டு – 2008 ஆண்டுகளில் அலைக்கற்றை ஊழல் பற்றி வட இந்திய ஏடுகள், தமிழக ஆங்கில ஏடுகள் எல்லாம் எழுதி பல மாதங்கள் ஆகியும் தினமலர் அதைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஊழலே நடக்கவில்லை என்று ஆ. ராசாவும் , சிதம்பரமும் மண்ணு மோகனை சந்தித்து விளக்கியதாக தினமலர் செய்தி வெளியிட்டது. என்னடா தினமலம் இப்படி பண்றானே என்ன காரணம் என்று யோசித்தால் …….ஆங் , தினமலர் நிறுவனர் ராமசுப்பு அய்யரின் தபால் தலையை நம்ம திகார் அமைச்சர் ஆண்டிமுது ராசா வெளியிடுகிறார். அவர் அதை வெளியுட்டு முடிக்கும் வரை நம்ம தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை – என்னே பத்திரிகை தர்மம்.
  அதன்பின்னர் தமிழக் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தினமலம் அலைக்கற்றை ஊழல் பற்றி எழுத ஆரம்பித்தது. தபால் தலை தான் வெளியிட்டாச்சா அப்புறம் என்ன, எழுத வேண்டியதுதானே..மானம் கெட்ட பிழைப்பு .. ..

  (இதே போன்றே தேவிகுளம், பீர்மேடு தமிழகத்துடன் இணைக்க போராடிய பொழுது நம்ம பெருந்தலைவர் காமராசு அய்யா மேடாவது, குளமாவது எல்லாம் இந்தியாவில் தான் இருக்கு என்று தடுத்துவிட்டார். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்.)

 6. மின்பயன்பாடுகளை நாம் அதிகரித்துக்கொண்டே செல்வதுதான் ரிஸ்க் எடுக்கவேண்டிய கட்தாயத்தை உருவாக்குகிறது.

 7. தோழர் மதிமாறன்
  உங்களுடை இந்த கட்டுரையைதான் தங்களின் அறிக்கையாக மே 17 இயக்கத்தவர்கள் இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

 8. கல்பாக்கம் அணுஉலையால் ஆபத்து இல்லை என்பவர்களுக்கு

  • 1996 – 2011 வரை 11 வகையான புற்றுநோயினால் பாதிக்க்கப்பட்டு சிகிச்சைபெற்றோரின் எண்னிக்கை 244 பேர்

  •மல்டிப்பிள் மைலோமா எனப்படும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 23பேர்

  • கல்பாக்கம் அணுஉலையிலிருந்து 3 கிமீசுற்றளவிற்குட்பட்ட சட்ரஸ்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சூர்யா எனும் 10வயது சிறுவன் மல்டிப்பிள் மைலோமா வினால் 3 மாத்த்திற்கு முன்புஇறந்தே போய்விட்டார் நம் குழந்தைக்கு இந்நிலை என்றால் ஏற்போமா இந்த சிறுவன் என்ன தவறுசெய்தான் என தயவுசெய்து அணுஉலை ஆதரவாளர்களே நீங்கள் கூறுங்கள்

  இவை அணைத்தும் தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி கழகத்திடமிருந்தே பெற்றத்தகவல் என்பது கவனிக்கத்தக்கது
  நன்றி இந்தியாடுடே

 9. அணு உலை ஆதரவாளர்களில் இரண்டுவகை உன்டு முதல் வகையை சேர்ந்தவர்கள் அதீத அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் அறிவியலால் எல்லாமும் முடியும் என நம்புகிறவர்கள் பயத்தினால் எதுவும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்பவர்கள் ஆனால் அசட்டுதுணிச்சல் மிக ஆபத்தானது என்பதை அறியாதவர்கள்

  இரண்டாம் வகையினல் அனைத்தும் அறிந்தவர்கள் அரசின் நிர்பந்த்த்தாலோ அல்லது அரசின் ஆதாயத்தினாலோ பேசுபவர்கள் இவர்கள் ஆபத்தானவர்கள்

 10. யுரேனியம் பொலேனியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்கள் கண்டுபிடித்த மேரி க்யூரி தன் வாழ்நாளின் கடைசி காலங்களில் கதிர்வீச்சின் பாதிப்பால் கண்பார்வை இழத்து கை விரல்கள் சுருங்கி கருகி போய் இறந்தார் அவர் கணவர் பியாரி கியூரி கண்பார்வை இழந்ததால் ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்தார் நோபல் பரிசு பெற்ற அந்த விஞஞானிகளுக்கே அந்த கதி என்றால் சாதாரன கிராமத்து மக்களை எண்ணிப்பார்க்கவேண்டும்

Leave a Reply

%d bloggers like this: