சிங்கப்பூரில் தோழர். Mohamed Ismail 200 டாலர், தோழர். பரிமளம் 200 டாலர் கட்டாயப்படுத்தி ‘சுற்றி பார்க்க செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அன்போடு கொடுத்ததை, என்னை அழைத்த தோழர்கள் விஜயபாஸ்கர் – ஜெகனிடம் அவர்கள் எனக்காகச் செய்த செலவை பகிர்ந்து கொள்ளக் கொடுத்து விட்டேன்.
‘உங்கள் வருகையின் செலவை பகிர்ந்து கொள்ளவும், பெரியார் பற்றிக் கூட்டம் நடத்தியதற்காகவும், பல தோழர்கள் அதன்பிறகு நன்கொடையாகப் பணம் தந்தார்கள்’ என்று செலவு போகத் தங்கள் பங்களிப்பையும் சேர்த்து, 15 நாட்களுக்கு முன் எனது வங்கிக் கணக்கில் ரூ. 30 ஆயிரம் செலுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.
நான் என்ன சொல்றது?
*
என்னை அழைத்ததைக் குறித்து தோழர் விஜயபாஸ்கர் தனது பக்கத்தில் எழுதியதை இங்குத் தருகிறேன்.
*
சிங்கப்பூரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்ததில் செய்த ஒரே உருப்படியான காரியம்
பெரியாரிய கருத்தாளார், பேச்சாளர், எழுத்தாளர் தோழர் வே.மதிமாறனை சிங்கப்பூர் அழைத்து “நேற்று, இன்று நாளை: தந்தை பெரியார்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு பண்ணி சிறப்பாக நடத்தியது தான்.
“தோழர் மதிமாறனை சிங்கப்பூருக்கு அழைப்போம்” என்ற யோசனையைத் தோழர் ஜெகன் கூறியபோது “அழைக்கலாமே தோழர்” என்று கூறினாலும், அவரை இங்கு அழைத்து என்ன செய்யமுடியும் என்ற தயக்கம் இருந்தாலும் அழைப்போம் என முடிவு செய்தோம். முடிவு எடுத்தவுடன், படவென விசா எடுத்து டிக்கெட் எடுத்து தோழர் மதிமாறனுக்கு அனுப்பி வைத்தோம்.
“நான்கு நாட்கள் தோழர் மதிமாறன் இங்குத் தங்க உள்ளாரே, அவருக்குச் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்போம் ” என்று நானும் ஜெகனும் நினைத்துக் கொண்டு இருந்த வேளையில் தோழர் மதிமாறன் சிங்கப்பூருக்கு வருகிறேன் என்று பேஸ்புக்கில் எழுதியவுடன் அவரை நேசிக்கும் நண்பர்கள் பலர் கொடுத்த ஆதரவினால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவேந்தல் நிகழ்வை ஒருநாளும், பெரியார் பற்றிய கலந்துரையாடலை மறுநாளும் ஏற்பாடு செய்து நடத்தினோம்.
கடைசியில் நான்கு நாட்கள் போதாமல் ஆகிவிட்டது.
தோழர் மதிமாறன் மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பினால் தோழர் மதிமாறன் திக்குமுக்குயாடியது மட்டுமில்லாமல் எங்களையும் திக்குமுக்காட செய்துவிட்டனர்.
இஸ்மாயில், அசோக், மில்டன், தமிம் அன்சாரி, அபு ஜாகித், தங்கவேலு, புருசோத்தமன், பரிமளம், பகுத்தறிவாளன், பிரபு, தமிழ் கரிகாலன், நரசிம்மன், சுரேஷ் சுரேகா, ராஜராஜன், மோகன், கார்த்திக், சிலம்பரசன் மற்றும் பலர் தோழர்கள் பணமும் ஆதரவும் தந்து, இரு நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்திக் கொடுத்து, தோழர் மதிமாறனின் சிங்கப்பூர் வருகையை வெற்றிகரமாக மாற்றிய தோழர்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.
எங்களுக்குப் பல வகைகளில் உதவி செய்த தோழர்களுக்கும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தோழர் மதிமாறனுக்கும் மனமார்ந்த நன்றி. !!!
-விஜயபாஸ்கர்
