எல்லாக் காட்சி ஊடகங்களுக்கும் ஒரே நாளில் சிறப்புப் பேட்டி. தன் தயாரிப்பை விற்பதற்கான விளம்பரம்.
ரஹ்மான் இசையை அல்ல, சப்தத்தை (Sound) ரிதமாகத் தயாரிக்கிறார். அதை இசை என்ற பெயரில் சந்தை படுத்துகிறார். சத்தத்தோடு கூவி, கூவி விற்றால்தான் பொருட்களை விற்க முடியும். அது பாடலாகாது.
அதுபோல் விளம்பரங்களுக்குச் சேர்க்கப்படும் பாடல்கள் அல்லது சத்தம் இசையாகாது. அதன் நோக்கம் பொருட்களை விற்பது.
அதன் தரத்தை மக்களின் ரசனை தீர்மானிப்பத்தில்லை. சந்தைதான் தீர்மானிக்கிறது.
அதனால் எப்படியாவது திட்டமிட்டு மக்கள் மீது திணிக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு இருக்கிறது. இப்படித் திணிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் சந்தை சர்வதேச அளவில்.
ரஹ்மான் சந்ததைக்காகச் சப்தத்தைத் தயாரித்து இசை என்ற பெயரில் wholesale லுக்கு விற்கிறார். அதை வாங்குகிற சில்லரை விற்பனையாளர்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த பொருள் என்று கூவி கூவி விளம்பரப்படுத்துகிறார்கள்.
ஹாலிவுட் படங்களுக்கு இன்று இந்தியா பெரிய சந்தை. அதன் பொருட்டுதான் ‘இந்தி’ய திரையில் பிரபலமானவர்களின் பங்களிப்பை ஹாலிவுட் படங்களில் தொட்டுக் கொள்கிறார்கள். இந்தியில் பிரபலமான பிறகு ரஹ்மான் சர்வதேச சரக்காக மாறியதின் ரகசியமும் இதுதான்.
கோ க கோலா, பெப்சியும் இன்னும் சர்வதேச cosmetics கம்பெனிகளும் எப்படி ஜஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் இவர்களை உலக அழகிகளாகத் தேர்தெடுக்க வைத்து இந்திய சந்தையைப் பிடித்ததோ, அதுபோல் ரஹ்மானுக்கான இந்திய பின்னணி கொண்ட slumdog millionaire என்ற ஹாலிவுட் படத்தில் வாய்ப்பும் அதை ஒட்டி ஆஸ்கர் விருதும்.
அதனால் அவருக்கு எப்போதும் சந்தையில் பொருட்கள் விற்க வேண்டிய நெருக்கடி. ஆக, வியாபரிகள் மக்கள் எப்படி வாழ்கிறா்கள் என்று கவனிக்க மாட்டா்கள். அலட்சிப்படுத்துவார்கள்.
உயிரினங்களின் இயற்கையின் ஓசையும் மக்களின் வாழ்வியல் ஒலியையும் கேட்காதவர்களிடம் கற்பனையோ, உணர்வுகளோ இருக்காது. இவை இரண்டும் இல்லாதவர் இசையை ஒருபோதும் உருவாக்க முடியாது.
மற்றவர்களின் பாடல்களை, இசையை கேட்டு அதை தழுவுகிற டெக்னிக்கில்தான் கில்லாடியாக இருப்பார்கள். கலைக்கு டெக்னாலஜி தேவைப்படலாம். டெக்னாலஜி கலையாகாது.
தமிழ் திரைஇசையைத் தமிழர்களுக்கான இசையகாவே உயர்த்தி உன்னதமாக்கியவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதை உலக உன்னதமாக உயர்த்தியவர் இளையராஜா.
அதனால்தான் ‘நவீன’ ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களைக் கேட்பதைவிடவும் மிகப் பழைய எம்.எஸ்.வி. பாடல்களை அவர் காலத்தை விடவும் இப்போதுதான் அதிகம் கேட்கிறார்கள் தமிழர்கள். காரணம் அதில்தான் இசை இருக்கிறது.
திரை இசையின் உன்னதமோ இளையராஜாவோடு முடிந்துவிட்டது.
8 september
