Site icon வே. மதிமாறன்

வ.உ.சி. யும் டாக்டர் அம்பேத்கரும் ஈவு இரக்கமில்லாத பொய்யும்

இந்திய அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு வ.உ.சிக்குத்தான் வாய்ப்பு தந்ததாகவும் அவர் அதை மறுத்து, ‘என்னை விடச் சட்டம் அறிந்தவர் அம்பேத்கர், அவருக்குக் கொடுங்கள்’ என்று சொன்னதாகவும் ஒரு செய்தி தொடர்ந்து Facebook ல் வந்து கொண்டிருந்தது.

இதைப் பொய் என்பதை விடவும் பச்சை பொய் என்பதே சரியாக இருக்கும்.

வ.உ.சி. சிறைக்குப் பிந்தியக் காலத்தில், முற்றிலுமாகக் காங்கிரசால் புறக்கணிக்கபட்டார். அவர் இறந்த பிறகு அவர் சிலையை வைப்பதற்குக்கூட இராஜாஜி, சத்தியமூர்த்திப் போன்ற தலைவர்கள், கடுமையாக எதிர்த்தார்கள். ஆக, அவரைக் காங்கிரஸ், அரசியல் சட்டத்திற்காக பரிந்துரைக்க ஒருபோதும் வாய்ப்பே இல்லை.

அரசியல் சட்டத்தைப் படித்து வழக்கறிஞராக பணியாற்றுவதும் ஒரு நாட்டிற்கே அரசியல் சட்டத்தை எழுதும் அளவிற்கு உலகச் சட்ட நுணுக்கங்களை அறிந்திருப்பதும் வேறு வேறு.

வ.உ.சி. சட்டம் படித்த சிறந்த வழக்கறிஞர். ஆனால், அரசியல் சட்டம் எழுதும் அளவிற்கு மேதைமை உள்ளவர் அல்ல. சட்டத்தைச் சுதந்திரப் போராட்டதில் எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம், புறக்கணிக்கலாம் என்ற அளவில் இயங்கிய தியாகி.

ஒரு நாட்டிற்கே அரசியல் சட்டம் எழுதுவதற்கும் தொகுப்பதற்கும் மேதமையுள்ளவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாரும் இல்லை; டாக்டர் அம்பேத்கர் ஒருவரைத் தவிர. உண்மை இப்படி இருக்க,
வ.உ.சி. தான், டாக்டர் அம்பேத்கருக்கு அரசியல் சட்ட வாய்ப்பை விட்டுக் கொடுத்தார் என்று சொல்வது, டாக்டர் அம்பேத்கரை மட்டும் அவமானப்படுத்துவதல்ல, வ.உ.சி. யையும் தான்.

வ.உ.சி.யை ‘பிள்ளை’ என்று தன் ஜாதிக்காரராக மட்டும் பார்ப்பதால் நேருகிற அவமானம் இது. திராவிட மற்றும் தமிழ் தேசிய முற்போக்காளராக இருக்கிற சிலரும், கம்யுனிஸ்ட்டு என்ற அடையாளத்தோடு புழங்குகிற இன்னும் சிலரும் வ.உ.சியை மட்டுமே சிறப்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கிற இதுபோன்ற வேலைகளிலிருந்து அல்லது ஜாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் வெறும் ஜாதியக் கண்ணோட்டத்தில் மட்டுமே வெளிப்படையாக இயங்குபவர்களின் இந்த அவதூறு.
‘அரசியல் சட்ட வாய்ப்பை அம்பேத்கருக்கு விட்டுக் கொடுத்தார் வ.உ.சி’ என்ற பச்சை பொய் குறித்து இப்படியான நீண்ட விளக்கம்கூட அவசியமற்றது. கீழே கொடுத்திருக்கிற சின்னத் தகவலே போதுமானது.

இந்திய அரசியல் சட்டத்திற்கான வரைவுக்குழு 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று உருவாக்கப்பட்டது. அதற்குத் தலைவர் டாக்டர் அம்பேத்கர். இந்த வரைவுக்குழு உருவாவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே 1936 நவம்பர் 18 அன்று தன்னலமற்ற தியாகி வ.உ.சிதம்பரனார் இறந்து விட்டார்.

17 June at 18:47

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

‘என்னடா நியாயம் இது?’

Exit mobile version