பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்!

lord krishna with gopis

பாஞ்சாலியின் மானம் காத்த அதே கிருஷ்ணன்தான்

‘பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?’ என்ற தலைப்பில் ஜனவரி 10 தேதி  நான் எழுதிய கட்டுரை பெரியதாக இருந்தது, அதனால் அதை  படிக்க பலருக்கு நேரம் அமையவில்லை. ஆகையால் அந்தக் கட்டுரையை இரண்டு பகுதிகளாக வெளியிடவேண்டும் என்றும் தோழர்கள் கேட்டு கொண்டதற்காக அதன் முதல் பகுதி.

 *

குறைந்த உடையில் ‘நடிக்க’ வைக்கப்பட்ட நடிகைகளின் படங்களை பத்திரிகையில் பெரிதாக பிரசுரித்து, தன்னுடைய ஆண் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கும் ‘அந்த’ பத்திரிகைகள்;

‘உடல் அழகை அதிகம் வெளியில் காட்டாமல் உடுத்தும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான எண்ணங்கள் ஏற்படுவதில்லை.’

என்று பாலியல் கொடுமைகளுக்கு காரணம், பெண்களின் உடைதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் போல் கருத்து சொல்கின்றன.

ஆனால், டெல்லியில் ஒரு பெண்ணை கொடூரமாக குதறி எடுத்தவர்கள் பற்றி எழுதும்போது, அதே பத்திரிகைகள் ரொம்ப யோக்கியர்கள் போல்,

பாலியல் வன்புணர்வு செய்தவர்களை, வெறிநாய்கள் என்றும் எல்லோரையும் தாயாகவும், நாட்டையே தாயாக பார்க்கும் நாட்டில் இப்படிப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்றும் தீர்ப்பெழுதின.

தாய் நாடு என்று பெண்ணை நாடாக பார்ப்பார்கள், பெண்ணை நதியாக பார்ப்பார்கள், பெண்ணை கடவுளாக பார்ப்பார்கள்; ஆனால் பெண்ணை பெண்ணாக மட்டும் பார்ப்பதில்லை.

பெண்களை வெறும் கவர்ச்சியான சதை தொகுப்பாக பார்த்து, அட்டை படத்தில் பிரசுரித்து, உள் பக்கங்களில் ப்ளோ-அப் போட்டு அதற்கு கீழ் மட்டரகமான புட்நோட் எழுதி தன் வாசக ஆண்களை வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட வைக்கிற, இவர்கள்தான் பெண்களை தாயாக பார்க்கிறார்களாம்.

இப்படித்தான் தாயை கவர்ச்சியா ப்ளோ-அப் போட்டு விப்பாங்களா?

ஒரு நடிகையின் அது போன்ற படங்களை பார்க்கிற ஆண் வாசகரின் மனதில் என்ன எண்ணம் ஏற்படும்? அந்த நடிகையை பற்றி என்ன நினைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் படம் பிரசுரிக்கப்படுகிறது?

பொது இடத்தில் அந்த நடிகையை தற்செயலாகப் பார்த்தால், இவர்களின் ஆண் வாசகர்கள் அந்த நடிகையிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்வார்கள்?

பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை என்றால், அதற்கு தூண்டுகிற அல்லது வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட வைக்கிற இந்த ‘மாமா’ க்களுக்கு என்ன தண்டனை தருவது?

பெண்களுக்கு எதிரான கருத்துக்கொண்ட, இந்த இரட்டை வேடம் பத்திரிகைகளுக்கு மட்டும் சொந்தமல்ல, இதுவேதான் மத அறிவாளிகளின் யோக்கியதையும்.

மத ஈடுபாடு கொண்டு கடவுள் நம்மை நல்வழிப்படுத்துகிறார், பெண்கள் நம் கண்கள் என்று கதையளக்கிற ஒவ்வொரு ஆணும், அடுத்த வீட்டுப் பெண்களை என்ன கண் கொண்டு பார்க்கிறானோ; அப்படித்தான் அதே பார்வையோடு, அதே எண்ணத்தோடு தான் மற்ற ஆண்களும் தன் வீட்டு பெண்களை பார்ப்பார்கள்; ‘தன்னைபோல்தானே மற்ற ஆண்களும்’ என்ற ‘சுயவிமர்சன’ அடிப்படையில்தான்,

முகம் கூட தெரியாத அளவிற்கு பெண்ணை முழுக்க முடி வைக்கிறான். அதன்பொருட்டேதான் பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்று ஆண் தீர்மானிக்கிறான்.

இப்படியான காரணங்களால்தான் இந்திய இந்து சமூகத்திலும் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை உடை அணியவேணடும். பூக்கள் சூடக் கூடாது. தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது என்று தடைபோட்டான்.

பெண்கள் பூக்கள் சூடியதும் ஆணுக்காக; ‘பூக்கள் சூடக் கூடாது’ என்றதும் ஆணுக்காகவே. (பெண்ணோட தல என்ன செடியா? மரமா?)

காரணம், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது, தன் கணவனின் கண்ணுக்கு மட்டும் லட்சணமாக தெரியவேண்டும் அதாவது அவனின் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

அதனால்தான் கணவன் இறந்த பிறகு மனைவிக்கு மொட்டையடித்து முக்காடுப்போட்டு அவமானப்படுத்தியதும், கணவன் இறந்த உடன் அவனுடனேயே அவளை தீயில் தள்ளி உடன் கட்டை என்ற பெயரில் உயிருடன் கொளுத்தியதும்.

சில ‘ஞாநி’கள் ‘படிக்காதவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். பாவம் கல்வியறிவு தந்தால் சரியாகிவிடும்’ என்று படித்தவன் யோக்கியன்போல், நியாயம் பேசுகிறார்கள்.

படிப்பறிவற்ற விவசாய கூலிகளாக, கூலித் தொழிலாளர்களாக இருக்கிறவர்களிடம் இப்படி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைப்பதும், பெண்ணை ஆணுக்கான நுகர்பொருளாக பார்க்கிற கண்ணோட்டமும் உழைக்கும் மக்கள் வரலாற்றில் எப்போதுமே கிடையாது.

ஆணுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘அத்தான்’ வருகிறரா..?,’ என்று இலக்கிய பெண்களைப்போல் வாசலில் நின்று காத்துக்கிடக்கிற பழக்கமும் அவர்களிடம் கிடையாது. இருவரும் ஒரு சேர வேலைக்கு போகிறவர்கள்தான். பெண்ணை மட்டமாக பார்க்கிற நிலவுடைமையாளர்கள்தான் கூலியை பெண்ணுக்கு ஆணைவிட குறைவாக கொடுக்கிறார்கள்.

மாதவிலக்கை தீட்டாக பார்ப்பதும், அதன் காரணமாகவே பெண்களை இழிவுப்படுத்துகிற பழக்கமும் எளிய மக்களிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆதிக்க ஜாதிகளிடமும் நில உடமையாளர்களிடமும் உள்ள இழிவான செயல் அது.

எவன் பெண்ணை வெறும் ‘உடல் உறவுக்கான உறுப்பு மட்டுமே’ என்று பயன்படுத்தினானோ, அவனே மாதவிலக்கை தீட்டு, என்று சொல்லி இழிவுப்படுத்தினான். காரணம், அந்த நாட்களில் உறவு கொள்ள முடியாது என்பதினாலேயே.

ஆனால், திட்டமிட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைச் செய்தவர்களும், உயிரோடு கொளுத்தியவர்களும் இந்து சமூக அமைப்பில் அதிகம் படித்த, எல்லாவகையிலும் ‘உயர்ந்த’ பார்ப்பன மற்றும் ராஜ புத்திரர்கள். இந்தக் கொடுமைகள் குற்றமாக அல்ல, இதுதான் நீதியாகவும் இருந்தது. இந்தக்கொலையை செய்த இவர்கள்தான் சமூகத்தில் மற்றவர்கள் செய்கிற குற்றங்களுக்கு தண்டனை தருகிற நீதிமான்களாகவும் உயிர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும் என்று போதிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

இப்படி தன் குடும்பத்துப் பெண்களையே அவமானப்படுத்தி, கொலை செய்ததற்கு காரணம், கணவன் இறந்த பிறகு வேறு ஆண் அவளுடன் உறவு கொண்டுவிடுவான் என்கிற பயமே. அதிலும் குறிப்பாக வேறு ஜாதிக்காரன் உறவு கொண்டுவிடக்கூடாது; என்பதினாலேயே கங்கை ஆற்றில் முழ்கடித்தும் பல பெண்களை கொன்றிருக்கிறார்கள்.

அப்படி வேறு ஜாதி ஆண் உறவு கொண்டால், அவனுக்கும் மரணதண்டனை என்பது மனு வகுத்த சட்டம்.

அதனால்தான் அந்த மனோபாவம் கொண்ட இந்து அமைப்புகள், சாமியார்கள், பத்திரிகை ஆண்கள் இவர்கள் எல்லோரும் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிற ஆண்களுக்கு, முதலில் மரண தண்டனை என்று எகிறியதும் பிறகு பெண்களையே குற்றவாளிகளாக மாற்றுகிற மோசடி பேர்வழிகளாகவும் மாறுகிறார்கள்.

-தொடரும்

தொடர்புடையவை:

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

ஈவ்டீசிங்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

செல்போனில் பெண்கள்….

சமையல்; ஆண்களும் பெண்களும்

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

 

2 thoughts on “பாலியல் வன்முறை; ஆண்களுக்கு இதில் இரட்டை வேடம்!

  1. கோடை வெப்பத்தை விடவும் உங்கள் எழுத்தின் வேகம் அதிகம் என்பதாக உணரகிறேன் .ஆனால் அத்தனையும் அடிமனதின் ஆதங்கம் .புரிகிறது .ஆனால் ஒரு வேண்டுகோள் .இத்தனை கோபம் உங்கள் எழுத்தில் மட்டும் போதும் யாரிடமும் காட்டிவிடாதீர்கள் .

Leave a Reply

%d