2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர்.

மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள். முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. எல்லோரும் கை கொட்டிச் சிரிக்கிறார்கள். அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

‘நிறைவாக இப்போது முதல்வர் பேசுவார் என்று அறிவிக்கப்படுகிறது’ பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். தமிழில் அல்ல… தெளிவான சமஸ்கிருதத்தில்.
அதுவரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்கு பதில் சொல்வது போல், இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., படித்தவர் என்ற தகவல் அவர்களுக்கு தெரியாததால் , அவமானப்படுத்த நினைத்தவர்கள், அவமானப்பட்டு போகிறார்கள்.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களுக்குள் ஓர் உத்தரவை பிறப்பிக்கிறார் முதல்வர். அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப்போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது.
‘சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் அதாவது பார்ப்பனர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்கவேண்டும். மற்றவர்கள் படிக்கக்கூடாது ’ என்ற ‘பரந்த’ உணர்வே அதற்கு காரணம் என்பதை  உணர்ந்தார் முதல்வர். அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது. மருத்துவத் துறையில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது. அதை புறம் தள்ளுகிறார் முதல்வர். அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்துவர்கள் என்று நிறையபேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.
இன்று இந்நியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களை கொண்ட ஊர் என்ற பெயரை  பெற்றிருக்கிறது சென்னை. வெளிநாட்டினர் கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு – செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது.

***

ன்று உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தவுடன், 80 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மாநாடு நடத்தியவர்களின் பேரன்கள், துள்ளிக் குதிக்கிறார்கள்,
‘ஐயோ தகுதி, திறமை போய்விடும். மனிதாபிமானம் போய்விடும்’ என்கிறார்கள்.

தேர்வில் 90 சதவிதம் எடுத்தால் அது ‘தகுதி’, 87 சதவிதம் எடுத்தால் அது ‘தகுதியில்லை’ என்ற அர்த்தமா?
ஆம், இடஒதுக்கீடு என்பது இந்தமாதிரி சின்ன வித்தியாசம் மட்டுமே. இதைத்தான் ‘தகுதி குறைவு’ என்கிறார்கள்.
சரி தகுதி, திறமை அடிப்படையில் வந்த இவர்களின் மனிதாபிமானம் எப்படி இருக்கிறது?
உயிருக்குப் போராடிய நிலையில் ஒரு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். இந்த தகுதி, திறமை வாய்ந்த மனிதாபிமான மருத்துவர்கள், ‘சிகிச்சை அளிக்க முடியாது. நாங்கள் போரட்டத்தில் இருக்கிறோம். இடஒதுக்கீட்டை வாபஸ் பெறச் சொல்லுங்கள்’ என்று புறக்கணிக்கிறார்கள்.
ஒருபாவம் அறியா ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கக் காத்திருக்கிற இவர்கள்தான் சொல்கிறார்கள், ‘இடஒதுக்கீடு வந்தால் மனிதாபிமானம் போய்விடும்’ என்று.

***

ந்தியாவுக்கு இடஒதுக்கீடு புதியதல்ல. அது 2 ஆயிரம் ஆண்டு காலமாக நடைமுறையில் இருப்பதுதான்.
ஆம், மனுதர்ம சாத்திரத்தில் வகைப்படுத்திச் சொல்கிற இடஒதுக்கீடு, மன்னர் ஆட்சிக்காலத்தில்; ‘அரசனின் அனைத்துத் திட்டங்களும் பிராமணர்களையே போய்சேரவேண்டும், அதன் பிறகே அடுத்தவர்களுக்கு’ என்று வகைப்படுத்தினார் மனு.

அவர் வரிசைப்படுத்திய சமூக அமைப்பு இதுதான், முதலில் பிராமணர், பிறகு சத்திரியர், அடுத்து வைசியர், அதன்பிறகு சூத்திரர், அதற்கும் கடைசியாக பஞ்சமர் என்று சொல்லப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள். இதுவே மனுவின் இட ஒதுக்கீடு.

அரசின் சலுகைகள், முதலில் பஞ்சமர் என்று மனு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறகு சூத்திரர் எள்று சொல்லப்படுகிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கடைசியாக பிராமணர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று 80ஆண்டுகளுக்கு முன்னால் இதை திருப்பிப்போட்டார்கள் நீதிக்கட்சிக்காரர்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று கோரிக்கையை எழுப்பும் போதெல்லாம், ‘அப்போது எங்களுக்கு?’ என்ற கேள்வியை உயர்சாதிக்காரர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

மனுவின் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது 2 ஆயிரம் ஆண்டுகள். மாற்று இட ஒதுக்கீட்டின் காலம் ஒரு நு£ற்றாண்டுகூட இல்லை.
2ஆயிரம் ஆண்டுகாலம் இவர்களைத் துாக்கிச் சுமந்தவர்கள் கொஞ்சம் மேல் எழுந்து வர முயற்சிக்கும்போது, இவர்கள் காட்டுகிற எதிர்ப்பு, ‘ஐயோ, கீழே இறக்கிவிடாதே எனக்கு கால் வலிக்கும்’ என்பது போல் இருக்கிறது.

-தினகரன் நாளிதழுக்காக 9. 6. 2006ல் எழுதியது.

7 thoughts on “2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

 1. நண்பர் மதிமாறனுக்கு… பழைய கட்டுரைகளில் தொகுப்பு அணிவகுத்து வருவது நன்றாகத்தான் இருக்கிறது. அதேநேரத்தில் புதியவைக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். ராமரும், அனுமாரும் சிறுநீர் கழிப்பதுபோல போஸ்டர் ஒட்டியமைக்காக அந்த படத்தின் பூஜைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… என்று சொல்வதுபோல சினிமாவில் நடிகர்கள் சாமி வேடம் போடுவது சாதாரணம்தான். ஒரு படத்தில் (என்ன படமென்று நினைவில்லை) ரஜினிகாந்த் சிவன் வேடம் போட்டு வண்டியில் செல்லும்போது பழம் திருடுவார். அப்போதெல்லாம் இந்த இந்து அமைப்புகள் எங்கு சென்றன….!

 2. இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

  அன்புள்ள அய்யா,

  தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

  நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

  இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

  தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

  தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

  கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

  எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

  சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

  தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

  இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

  கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

  தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

Leave a Reply

%d